
அண்மையில் கூகுள் தன் ஜிமெயில் தளத்தில், புதிய கூடுதல் வசதிகளை அளித்துள்ளது. தற்போதைக்கு சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் இவை, விரைவில் செம்மைப் படுத்தப்பட்டு நமக்கு முழுமையாக இன்னும் சில வசதிகளுடன் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.
ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், தங்கள் தளம் சென்றவுடன், புதிய இமெயில் செய்தி அனுப்பும் வகையில் Compose அழுத்தவும். கிடைக்கும் தளத்தில், மெசேஜ் பாக்ஸில் To கட்டத்திற்குச் சற்று மேலாக, Try out the new compose experience என்று ஒரு புதிய செய்தியைப் பார்க்கலாம்.
இங்கு கிளிக் செய்தால் புதிய வகை செய்தி தயாரிக்கும் கட்டத்திற்கு எப்போதும் செல்லலாம் என்றும் ஒரு விளக்கம் கிடைக்கும். இதில் கிளிக் செய்தவுடன், மீண்டும் உங்கள் ஜிமெயில் தளம் புதியதாக எழுந்து வரும். அங்கே, New Message என்ற புதிய கட்டத்தினை ஒரு ஓரமாகப் பார்க்கலாம்.
இதில் நீங்கள் பெறுபவரின் பெயரை டைப் செய்த தொடங்கியவுடன், அந்த எழுத்தில் உள்ள அனைவரின் முகவரிகளும் வரிசையாகக் கிடைக்கும். இதில் என்ன புதிய வசதி என்கிறீர்களா? உங்கள் ஜிமெயில் நண்பர்கள், ஏதேனும் படத்தைப் பதிந்திருந்தால், போட்டோவினைப் பதிவு செய்திருந்தால், அவையும் காட்டப்படும்.
இதனால், இரண்டு கிருஷ்ணன் இருந்தால், அவர்களின் போட்டோவினை அடையாளம் வைத்து, சரியான முகவரியைக் கிளிக் செய்திடலாம். இந்த வசதி, CC மற்றும் BCC ஆகியவற்றிற்கும் தரப்படுகிறது.
இதனால், தவறான நபர்களுக்கு அனுப்ப மாட்டோம்; விரைவாகவும் அஞ்சல் முகவரியினை அமைக்கலாம். மேலும், வரிசையாகக் காட்டப்படும் முகவரியில், நமக்கு வேண்டியதை மவுஸ் கர்சர் மூலம் இழுத்து வந்து, முகவரிக்கான கட்டத்தில் விட்டுவிடலாம்.
மேலும், மெசேஜ் பார்மட் செய்வதற்கு A என்ற ஐகானில் கிளிக் செய்து பார்மட்டிங் டூல்ஸ்களைப் பெறலாம். எழுத்து அளவு மாற்றல், போல்ட், அடிக்கோடு, புல்லட் என அனைத்து வசதிகளையும் இதில் பயன்படுத்தலாம். ஜெம் கிளிப் ஐகானில் கிளிக் செய்து, பைல்களை இணைக்கலாம். + ஐகானில் கிளிக் செய்து, மெசேஜ் எழுதும் பக்கத்திலேயே படங்களை, போட்டோக்களைப் பதியலாம்.
இதே போல ரிப்ளை, பார்வேர்டிங் போன்ற வசதிகளுக்கும் வழிகள் காட்டப்பட்டுள்ளன. விரைவில் எமோடிகான் இணைப்பு, இன்விடேஷன், லேபில், மெசேஜ் படித்ததற்கான ஒப்புதல் அனுப்பும் வழி ஆகியவை இணைக்கப்படவுள்ளன.
மேலே காட்டிய வசதிகள் மட்டுமின்றி, ஒரே நேரத்தில் வெவ்வேறு மெயில்களைத் திறந்து பதில் அனுப்பும் வசதியும் தரப்பட்டுள்ளது. சர்ச் ஆப்ஷனும் இயக்க முடியும்.
முன்பு, வேறு ஒரு மெயில் செய்தியிலிருந்து, வரிகளை எடுத்து காட்ட அல்லது படித்து எழுத வேண்டும் எனில், எழுதிக் கொண்டிருப்பதை சேவ் செய்துவிட்டு, பின் பழைய மெயிலைத் தேடிப் பிடித்துப் படித்து, பின் மீண்டும் சேவ் செய்த மெசேஜைத் திறந்து அமைக்க வேண்டும். இப்போது அது தேவையில்லை. ஒரே விண்டோவிலேயே, புதிய செய்தி, பழைய செய்தி தேடல், பார்த்தல் என அனைத்தையும் மேற்கொள்ளலாம்.
சரி, இதிலிருந்து விடுபட்டு பழையபடியான அஞ்சல் அனுப்பும் வழக்கமான கட்டத்திற்குச் செல்ல வேண்டுமானால் என்ன செய்திட வேண்டும்? மெசேஜ் கட்டத்தில், கீழாக வலது புறத்தில் உள்ள ஐகானக் கிளிக் செய்திட வேண்டும். ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கும். இதில் மேலாக, “Switch Back to Old Compose” என்று இருப்பதில் கிளிக் செய்தால், மீண்டும் உங்கள் ஜிமெயில் தளம் புதியதாகக் கிடைக்கும்.
இந்த புதிய வசதியை, ஜிமெயில் பயன்படுத்தும் அனைவருக்கும் கிடைக்கிறது. ஆனால், எத்தனை பேர் பார்த்துப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அட! ஆமா!! பார்க்கவே இல்லையே எனப் பலர் வியப்பது எனக்குத் தெரிகிறது. இனிமேலாவது பார்த்து பயன்படுத்துங்களேன்!
1 comments :
பழகுவதற்கு பத்து நாள் ஆயிற்று....
விளக்கத்திற்கு நன்றி...
Post a Comment