இந்திய மொழிகளில் விளம்பரம் மூலம் இந்த ஆண்டில் ரூ. 2,500 கோடி ஈட்டுவதற்கு கூகுள் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆங்கில மொழி வழி இன்டர்நெட் வளர்ச்சி இனி அவ்வளவாக இருக்காது என்று உணர்ந்து கொண்ட கூகுள், இந்திய மொழிகள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது.
இந்த இலக்கை அடைய முதல் படியாக, இந்திய மொழிகளுக்கான தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களை உருவாக்க, அரசு மற்றும் தமிழ் டிஜிட்டல் எழுத்துக்களை உருவாக்குபவர்களுடன் ஆலோசித்து வருகிறது.
கூடுதல் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைச் சென்றடைய, உள்நாட்டு தகவல்களை அதிகம் அளிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறோம் என கூகுள் இந்தியா நிறுவனப் பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளை உள்ளீடு செய்வதிலும் புதிய வழிமுறைகளைத் தரும் தொழில் நுட்பத்தினை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் இந்திய எழுத்துருக்கள் பெரும் சவாலாய் அமைந்துள்ளன. இவற்றைச் சுருக்கித் தரும் வழிகளைக் கண்டறிய வேண்டியதுள்ளது. இந்த வகையில் இந்தி மொழியைப் பேசினால், அது உள்ளீடு செய்யப்படும் வகையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கீ போர்டு தேவையில்லை.
உலக அளவில், இன்டர்நெட் பயன்பாட்டில், இந்தியா 13 கோடியே 70 லட்சம் பயனாளர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த 40 கோடி பேர் ஸ்மார்ட் போன் வழி இன்டர்நெட் பயனாளர்களாக இருப்பார்கள். ஏற்கனவே ஸ்மார்ட் போன் வழியில் இன்டர்நெட் பயன்படுத்தும் இந்திய பயனாளர்கள் 2 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர்.
இன்டர்நெட் பயன்பாட்டில் பேண்ட்வித் என்னும் அலைவரிசை கட்டமைப்பு தேவையான அளவில் பெறுவதில் பிரச்னை இருப்பதால், பலரும் ஸ்மார்ட் போன் வழி இன்டர்நெட்டினையே நாடுகின்றனர்.
இந்திய இன்டர்நெட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு ஊடகமாக வீடியோ உள்ளது. கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யுட்யூப் பயனாளர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது 3 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர். மாதந்தோறும் புதியதாக 15 லட்சம் பேர் இணைந்து வருகின்றனர்.
இன்டர்நெட்டினைத் தங்கள் மொழிகளில் காணவும் பயன்படுத்தவும் இந்தியாவில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்டர்நெட் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதனால், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களைப் பெற வர்த்தக நிறுவனங்கள் விரும்புகின்றன.
சென்ற ஆண்டில், இணைய தளங்களில் விளம்பரங்கள் மூலம் ரூ.1,500 கோடிக்கு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு இது ரூ.2,500 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மேலும் 30 கோடி பயனாளர்களுக்கு சேவை செய்திடும் வகையில், இன்டர்நெட் பேண்ட்வித் இங்கு அதிகரிக்க இயலா நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுருக்கி விரித்து பயன்படுத்தும் தொழில் நுட்பத்தில், நவீன வழிகளைக் காண வேண்டியதுள்ளது. குறிப்பாக, இணையத்தில் தகவல்களை, இந்திய மொழிகளில் தர இது அவசியமாகிறது.
இந்தியாவில், குறைந்தது ஐந்து ஊழியர்களைக் கொண்டு இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் ஒரு கோடியே 20 லட்சம் உள்ளன. ஆனால், இதுவரை ஒரு லட்சம் நிறுவனங்கள் மட்டுமே நல்ல முறையில் அமைக்கப்பட்ட இணைய தளங்களைக் கொண்டுள்ளன.
கூகுள் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் வணிக நிறுவனங்கள் இணையத்தில் இடம் பெற உதவியுள்ளது. இணைய தளங்களை உருவாக்கத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களை வழங்கி, நிறுவனங்களின் இணைய தளங்களை ஓராண்டு இலவசமாக இணையத்தில் பதிந்து இயக்கும் வாய்ப்பினையும் வசதியையும் தருகிறது. 2014 ஆம் ஆண்டில், இது போன்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை 5 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன் மூலம் விளம்பர வருமானமும் ரூ.2,500 கோடியை அடுத்த ஆண்டில் எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்களை ராஜன் ஆனந்தன் தெரிவித்தார்.
1 comments :
மயக்கமாக வருகிறது... தகவலுக்கு நன்றி...
Post a Comment