ஒரு மொபைல் போனை, மற்ற மொபைல் போன்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அதன் 15 இலக்க IMEI (International Mobile Equipment Identity) எண்ணாகும்.
அண்மையில் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட மொபைல் போன்கள், ஒரே ஐ.எம்.இ.ஐ. எண்ணைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை, பாராளுமன்றத்தில் தகவல் தொடர்பு துறைக்குப் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கள்ளத்தனமான எண்கள் தயாரித்து அளிப்பது, ஜி.எஸ்.எம். போன்களில் தான் அதிகமாக உள்ளது.
அண்மையில் பாட்னாவில் காவல்துறையினரிடம் சிக்கிய ஆறு பேர், இது போல மொபைல் போன்களின் தனி எண்களையும், சிம் கார்டுகளையும் போலியாகத் தயாரித்து வந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில், பல்லாயிரக்கணக்கான போன்கள், ஒரே எண்களில் இருப்பது தெரிய வந்தது.
இதனால், மொபைல் போன் குறித்த சட்ட விதி முறைகளை அமல்படுத்துவது இயலாமல் போகிறது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தனி எண் இல்லாத மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தினைக் கொண்டு வந்து, அப்படிப்பட்ட போன்களுக்கான சேவையினை அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் ரத்து செய்திடும்படி அரசு ஆணையிட்டது.
தொடர்ந்து மேலும் பல கிடுக்கிப்பிடி விதிமுறைகளை வெளியிட்டது. ஜி.எஸ்.எம். வகை போன்களுக்கு மட்டுமின்றி, சி.டி.எம்.ஏ. வகை தொழில் நுட்பத்தில் இயங்கும் போன்களின் தனி எண்களை (Electronic Serial Number (ESN) or Mobile Equipment Identifier (MEID)) இந்த விதிமுறைகளின் கீழ் கொண்டு வந்தது.
தற்போது இது போல ஒரே எண்ணைக் கொண்டுள்ள மொபைல் போன்களைக் கண்டறிந்து விதிமுறைகளை அவற்றின் மீது செலுத்திட அரசு திட்டமிட்டு வருகிறது.
1 comments :
இவர்கள் அறிவை நல்லவைகளுக்கு பயன்பட்டால் நல்லது... ...ம்... தகவலுக்கு நன்றி...
Post a Comment