இணையத்தைப் பயன்படுத்தி அதிகம் பயனடையும் நாடுகள் குறித்து அண்மையில் வைய விரி வலையை அறிமுகப்படுத்திய டிம் பெர்னர்ஸ் லீ கருத்து தெரிவித்துள்ளார்.
மிக அதிகம் பயன் பெறும் நாடாக ஸ்வீடன் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து அமெரிக்காவும், அதனை அடுத்து கிரேட் பிரிட்டனும் உள்ளன. மொத்தம் எண்பது வகைப் பயன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஆய்வு செய்து இந்த முடிவினை இவர் அறிவித்துள்ளார்.
பிராட்பேண்ட் கேபிள் இணைப்பு, நவீன தொழில் நுட்ப பயன்பாடு போன்றவற்றை முதன்மை அளவு கோலாக வைத்துள்ளார். மேலும், ஒரு நாட்டின் இணைய தளம் எந்த அளவிற்குப் பயன் தரும் வகையில் செயல்படுகிறது என்பதனையும் தன் ஆய்வின் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார்.
இணைய தளங்கள் ஒரு நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை எந்த அளவிற்குக் கொண்டு வருகின்றன என்பதுவும், இவர் ஆய்வில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகளை அடுத்து, அதிகப் பயன் பெறும் நாடுகளின் வரிசையில், கனடா, பின்லாந்து, ஸ்விட்சர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நார்வே மற்றும் அயர்லாந்து இடம் பெற்றுள்ளன.
முதல் பத்து நாடுகளில் சீனா இடம் பெறாததற்குக் காரணம், அந்நாடு பல இணைய தளங்களுக்குத் தடை விதித்துள்ளதே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதியினை அளித்தே அதிகம் பயன் பெற்றுள்ளதாகவும் இவர் கண்டறிந்துள்ளார்.
தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல மிகக் குறைந்த பயனைப் பெற்ற நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் கடைசி இடம் பெற்றிருப்பது நேபாளம். யேமன் நாட்டில் மத்திய கிழக்கு மாநிலம் மிகவும் குறைவான பயனையும், பயன்பாட்டையும் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்டர்நெட் பயன்பாட்டினைப் பொறுத்தவரை பல நாடுகளில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. 61 நாடுகளில், ஒரு பிராட்பேண்ட் இணைப்பிற்காக, ஒருவரின் சராசரி வருமானத்தில் பாதி செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
உலக நாடுகளை மொத்தமாக எடுத்துக் கொண்டால், 80% பேர் இணையத்தைப் பார்ப்பதை தங்கள் வழக்கமான செயல்பாடாக மேற்கொள்ளவில்லை என போர்ப்ஸ் இணைய தளம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை மாற வேண்டும் எனில், இணையத்திலிருந்து பயன் பெறும் ஒவ்வொருவரும், அடுத்தவரை அதே போல பயன் பெறும் வகையில் இணையத்தைப் பயன்படுத்தத் தூண்ட வேண்டும் என பெர்னர்ஸ் லீ கருத்து தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment