அதிரடி தொழில் நுட்ப வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல்

மொபைல் போனில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குச் சவால் விடும் வகையில் நவீன தொழில் நுட்பங்களில் இயங்கும் அதிரடி வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல் போன் சிஸ்டம் வர இருக்கிறது. 

இதற்கான முன்னோட்டத்தினை, மைக்ரோசாப்ட், அண்மையில் சீனாவில் நடைபெற்ற WinHEC (Windows Hardware Engineering Community) Shenzhen 2015 என்ற கருத்தரங்கில் காட்டியது. 

“Windows 10 Mobile” என்ற தலைப்பில் இந்த புதிய வசதிகள் குறித்து, மைக்ரோசாப்ட் அதிகார பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. அவற்றை இங்கு காணலாம்.


4கே வீடியோ பதிவு (4K Video Recording): 

விண்டோஸ் 10 கேமரா அப்ளிகேஷன், 4கே வீடியோ பதிவிற்கான முழு சப்போர்ட்டுடன் கிடைக்கும். வீடியோ பதியப்படுகையிலேயே, ஸூம் செய்வதற்கான வசதி, ப்ளாஷ் இயக்கத்தினைத் தனியே கட்டுப்படுத்தும் வசதி, வீடியோ எச்.டி.ஆர். (High dynamic range) தொழில் நுட்பம் மற்றும் இது சார்ந்த தொழில் நுட்ப வசதிகள் ஆகியன தரப்படுகின்றன.


வை பி டைரக்ட் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் 2: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில் வை பி டைரக்ட் தரப்படுகிறது. இதன் மூலம் பயனாளர்கள், வை பி நெட்வொர்க்கில் இணையாமலேயே, தங்களுக்குள் வை பி இணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். வை பி ஹாட் ஸ்பாட் வசதியின் மூலம், பயனாளர்கள் ஒரு இணைப்பினை, பலர் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


புளுடூத் அம்சங்கள்: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில், பலவகையான ஆடியோ மேம்பாட்டிற்கான அம்சங்கள், அதன் புளுடூத் டூலில் தரப்படுகின்றன. Wideband speech எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலம், எச்.டி. வாய்ஸ் தன்மை கிடைக்கும். A2DP மூலம், ஸ்டீரியோ ஆடியோ தன்மை வெளியாகும்.


எச்.சி.இ. சப்போர்ட் இணைந்த என்.எப்.சி.: 

தற்போது அண்மைக் களத் தகவல் தொடர்பு என அழைக்கப்படும் என்.எப்.சி. அனைத்து மொபைல் போன்களிலும் தரப்படுகிறது. விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டம் இதனை இன்னும் எளிமையாகவும் நவீனமாகவும் அமைக்கிறது. 

இதுவரை மொபைல் சேவை வழங்கும் சிம் கார்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தியே, என்.எப்.சி. இணைப்பு செயல்பட்டு வருகிறது. ஆனால், எச்.சி.இ, (Host card emulation) எனப்படும் சாப்ட்வேர் கட்டமைப்பில், சாப்ட்வேர் மட்டுமே பயன்படுத்தி பலவகை கார்ட்களின் எலக்ட்ரானிக் அடையாளங்கள் அறியப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.


ஸ்மார்ட் டயல்: 

இதுவரை மொபைல் போன்களில் பயன்படுத்தப்படாத ஒரு ஸ்மார்ட் டயல் வசதி, விண்டோஸ் 10ல் அறிமுகமாகிறது. இதில் “Yellow Books” என்று ஒரு வசதி உள்ளது. இதன் மூலம், பயனாளர்கள், மற்றவர்களின் தொடர்பு விபரங்களைத் தேடி அறியலாம்.


பேட்டரி பாதுகாப்பு: 

பேட்டரியின் திறன் செலவாவதைப் பயனாளரே கட்டுப் படுத்தும் வகையில், Battery Saver என்னும் டூல் தரப்பட்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.


யு.எஸ்.பி. டூயல் ரோல் மற்றும் சி வகை இணைப்பு: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில், பலவகையான யு.எஸ்.பி. வழி இணைப்பு சாதனங்களை இணைத்திட சப்போர்ட் தரப்பட்டுள்ளது. கீ போர்ட், மவுஸ் மற்றும் பெரிய அளவிலான ஸ்டோரேஜ் சாதனங்களை இணைக்கலாம்.


செயல்பாடு கண்காணிப்பு (activity tracking): 

மொபைல் போன் வைத்திருப்பவர் நடக்கிறாரா, ஓடுகிறரா அல்லது நீச்சல் அடிக்கிறாரா என்பதைக் கண்காணிக்க ஒரு டூல் தரப்படுகிறது. இதனை Activity Tracking Tool என அழைக்கலாம்.


புதிய சென்சார்கள்: 

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களில், பலவகையான சென்சார்கள் உள்ளன. இவை பல்வேறு சூழ்நிலைகளை உணர்ந்து அவற்றிற்கேற்ப செயல்படுகின்றன. 

பாரோமீட்டர், ப்ராக்ஸிமிடி சென்சார், அல்டிமீட்டர், பெடோ மீட்டர், பயோ மெட்ரிக் சென்சார், இதயத் துடிப்பு, கேஸ் லீக்கேஜ், சீதோஷ்ணநிலை அளந்து கூறும் சென்சார்கள் எனப் பல உள்ளன. விண்டோஸ் இயக்கத்தில் இன்னும் பல சென்சார்கள் தரப்படுகின்றன. 

காற்றில் உள்ள ஈரப்பதம், புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றை அறியும் சென்சார்களை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

நிச்சயமாக, விண்டோஸ் 10 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம், மொபைல் பயன்பாட்டில் ஒரு புதிய கட்டமைப்புடன் வர இருப்பதை மேலே கூறியவை காட்டுகின்றன. இன்னும் கூட நவீன தொழில் நுட்ப வசதிகள் சில, சிஸ்டம் வெளி வரும்போது கிடைக்கலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes