உலகளாவிய மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது.இதற்கான அறிவிப்பு, அண்மையில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற, உலக மொபைல் கருத்தரங்கில் வெளியானது.
தகவல் தொழில் நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள், இணைய இணைப்பினை அனைவருக்கும் கொண்டு செல்வதில் முனைப்புடன் செயல்படவில்லை என்றும் அப்படியே செயல்பட்டாலும், அவ்வசதியினை அனைவருக்கும் கொண்டு செல்வதில்லை என்றும் கூகுள் குற்றம் சாட்டி வருகிறது.
இதனால், தான் விரும்பும் வகையில், மக்களுக்குப் புதிய வசதிகளைக் கொண்டு செல்ல இயலவில்லை எனக் குற்றம் சாட்டும் கூகுள், உலகின் பல இடங்களில், அநேக மக்கள் இணைய இணைப்பு கிடைக்காமல் உள்ளனர் என்றும் வருத்தப்படுகிறது. இந்நிலையைப் போக்க, கூகுள், தானே களத்தில் இறங்கி, தன் வலிமையைக் காட்ட திட்டத்தினை அறிவித்துள்ளது.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள், தாங்கள் அனுமதி பெற்ற இடங்களில், மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கி, மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவை வழங்கி வருகின்றன.
இந்தியாவில், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல். போன்ற பொதுத் துறை நிறுவனங்களும், ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களும் இது போல் இயங்கி வருகின்றன. இதே போல, உலகளாவிய அளவில், கூகுள் மொபைல் நெட்வொர்க் ஒன்றை அமைக்கத் திட்டமிடுகிறது.
இதற்கென உலகளாவிய மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்குகிறது. இது மொபைல் டவர் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் இணைந்ததாக இருக்கும். இதனால், மொபைல் போன் ஒன்றில் அழைப்பு ஏற்படுத்துகையில், அது மொபைல் டவர் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் வழிகளில் மாறி மாறிச் சென்று, விரைவாக இணைப்பை ஏற்படுத்தும்.
இதற்கான முன்னோட்ட அறிவிப்பினை, அண்மையில் பார்சிலோனா நகரில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கு மாநாட்டில், கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை சூசகமாக அறிவித்தார்.
அமெரிக்காவில் கூட, இணைய வேகமும் இணைப்பும், ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் பின் தங்கியே உள்ளது. இதனால், அதிக மக்களை கூகுள் தன் சேவைகள் மூலம் அடைய இயலவில்லை.
தான் அமைக்க இருக்கும் மொபைல் நெட்வொர்க் மூலம், சிறப்பான, விரைவான சேவையை வழங்க முடியும் என மக்களுக்குக் காட்ட கூகுள் விரும்புகிறது. இதன் மூலம், தற்போது இயங்கும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் செயல்பாட்டினை மாற்றிக் கொண்டு, புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது.
எப்படி நெக்சஸ் போன் மூலம், மொபைல் போன் பயன்பாட்டினைச் செம்மையாக்க முடியும் என்று கூகுள் காட்டியதோ, அதே போல, தன் மொபைல் நெட்வொர்க் மூலம், சேவைகளைச் சிறப்பாக வழங்க முடியும் என கூகுள் காட்டும் என சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
தங்கள் முயற்சி, ஏற்கனவே இயங்கும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களைப் பயமுறுத்துவதற்காக அல்ல என்றும் உறுதியாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னோட்டமாக, கூகுள், அமெரிக்காவில் தன் நெட்வொர்க்கினை அமைக்கிறது. இதற்கென, சிறிய அளவில் இயங்கும் ஸ்பிரிண்ட் மற்றும் டி மொபைல் நிறுவனங்களூடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.
இது குறித்து, அமெரிக்காவில் பெரிய அளவில் இயங்கி வரும் வெரிஸான் (Verizon, ) நிறுவனம், கூகுளின் இந்த தன்னிட்சையான போக்கு, சிறிய அளவில் செயல்பட்டு வரும் மொபைல் நிறுவனங்களைப் பாதிக்கும் என்றும், அதனால், அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியாமல் போய்விடும் என்று கருத்து தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கூகுள் ஏற்படுத்த இருக்கும் மொபைல் நெட்வொர்க், உலகளாவிய அளவில் அமைக்கப்படும்போது, அதில் இணையும் வாடிக்கையாளர்கள், உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ள முடியும்.
இப்போது போல, வெளிநாடு செல்கையில், தனியாகக் கட்டணம் செலுத்தி அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தியோ, ரோமிங் சார்ஜ் செலுத்தியோ தொடர்பு கொள்ள வேண்டியதிருக்காது. இணைப்பும் வேகமாகவும், எளிதாகவும், தெளிவாகவும் கிடைக்கும்.
1 comments :
நம்க்கு வந்தால் பரவாயில்லை..!
Post a Comment