நொடிக்கு ஒன்று அல்லது இரண்டு மெகா பிட் வேகத்தில் இணைய இணைப்பு கிடைப்பதே அரிதான வேகம் என்று நாம் பழக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நொடிக்கு 20, 40 மற்றும் 60 மெகா பிட்ஸ் வேகத்தில், குறைந்த கட்டணத்தில் இணைய இணைப்பு தரும் பணியை, பெங்களூருவைச் சேர்ந்த அட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (Atria Convergence Technologies (ACT))என்னும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயருடன் இயங்கும் இந்த நிறுவனம், முன்பு ஹைதராபாத்தில் இயங்கி வந்த அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு தந்து வந்த பீம் டெலி நிறுவனத்தை வாங்கியது நினைவிருக்கலாம்.
பீம் டெலி நிறுவனம், 2011 ஆம் ஆண்டில், மாதம் ஒன்றுக்கு ரூ. 2,500க்கு 20 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தந்து வந்தது.
இதனை வாங்கி, தற்போது ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயரில் தன்னை விரிவாக்கிக் கொண்ட நிறுவனம், தற்போது ஆந்திர மாநிலம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இணைய இணைப்பு திட்டங்களைத் தருகிறது.
மாதம் ஒன்றுக்கு ரூ.1,999 கட்டணத்தில் அளவில்லா டேட்டா பயன்படுத்தும் வகையில், நொடிக்கு 60 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தருகிறது. ரூ.1,399க்கு, 40 மெகா பிட்ஸ் வேகமும், ரூ. 1,049க்கு, 20 மெகா பிட்ஸ் வேகத்திலும் இணைப்பினைத் தரும் திட்டங்களை அறிவித்துள்ளது.
விரைவில் வர்த்தகச் செயல்பாட்டிற்கு 250 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைப்பு தரும் திட்டத்தினையும் மேற்கொள்ள இருக்கிறது.
ஏ.சி.டி. நிறுவனம், இணைய இணைப்பிற்கு ஆப்டிகல் பைபர் கேபிளைப் பயன்படுத்துகிறது. இணைய இணைப்புடன் கேபிள் டி.வி. இணைப்பினையும் தருகிறது.
தற்போது ஹைதராபாத் நகரில் 4 லட்சம் சந்தாதாரர்களையும், பெங்களூருவில் 1.5 லட்சம் பேர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.
தங்கள் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான கூடுதல் மூலதனத்தினை, பன்னாட்டளவில் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நகருக்கும் ரூ.100 கோடி மூலதனச் செலவு செய்திட திட்டமிட்டுள்ளது.
இந்திய அளவில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால், தற்போது இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், கட்டணத்தை அதிக அளவில் வசூலித்து வரும் நிலையில், ஏ.சி.டி. நிறுவனம் வரும் நிலையில், போட்டியின் காரணமாக, கட்டணம் அதிக அளவில் குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0 comments :
Post a Comment