கூகுள், தற்போது, அதன் அஞ்சல் சேவையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் பெயர் இன்பாக்ஸ் (Inbox). ஜிமெயில் மற்றும் கூகுள் நவ் (Google Now) ஆகிய இரண்டின் சிறப்பு கூறுகள் இதில் இணைந்து தரப்படுகின்றன.
புதிய வித கட்டமைப்புகளில், வகைகளில் உங்கள் அஞ்சல்கள் பிரித்துத் தரப்படுகின்றன. இதனால், நாம் சரியான அஞ்சல் தகவல்களில் அதிக நேரம் செலவழிக்கலாம். ஸ்பேம் மெயில்கள், வர்த்தக ரீதியான மெயில்களைப் புறந்தள்ளலாம்.
அது மட்டுமின்றி, நம் பயனுள்ள மெயில்களும், அவற்றின் மையத் தகவல்கள் கோடி காட்டப்படுவதால், நாம் விரைவாகப் பார்த்து செயல்பட வேண்டிய மெயில்களை, உடனடியாக இன்பாக்ஸ் மூலம் காண முடியும். இதன் மூலம், தகவல் தொழில் நுட்பத்தில், கிட்டத்தட்ட ஒரு குப்பைத் தொட்டியாக மாறிவிட்ட ஜிமெயிலைத் திருத்தி அமைக்கும் பணியில் கூகுள் இறங்கியுள்ளது.
ஜிமெயில் பயன்படுத்தாதவர்களை, இக்காலத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் அனைவருமே ஜிமெயில் பயனாளர்களாக இருக்கிறோம். இருப்பினும் சில பிரச்னைகளை இதன் மூலம் நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம்.
சில்லரை வர்த்தகர்களின் விளம்பர அஞ்சல்கள், ஸ்பாம் மெயில்கள், மால்வேர்களைத் தாங்கி வரும் மெயில்கள் போன்ற பல வேண்டத்தகாத, நாம் விரும்பாத அஞ்சல்கள் தொடர்ந்து நம் அஞ்சல் இன்பாக்ஸ் பெட்டியில் வந்து விழுகின்றன.
இவற்றின் இடையேதான், நமக்கு முக்கியமான நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சல்களும் வருகின்றன. இதனால், சில வேளைகளில் நமக்குத் தேவையான அஞ்சல்கள நாம் கவனிக்கத் தவறுகிறோம். இந்த பிரச்னைகளைத் தீர்க்கவே, கூகுள் புதியதாக இன்பாக்ஸ் என்ற அப்ளிகேஷனைத் தருகிறது.
இன்பாக்ஸ் எனப் பெயரிடப்பட்டாலும், இது ஜிமெயிலின் இன்பாக்ஸ் வசதியை மட்டும் கொண்டிருக்காது. இதன் மூலம் நம் விமானப் பயணங்கள், நமக்கு வர வேண்டிய பொருட்கள், நினைவூட்டல்கள் என்பன போன்றவற்றையும் இதில் நிர்வாகம் செய்திடலாம்.
ஜிமெயிலை வடிவமைத்து பராமரிப்பவர்களே, இந்த இன்பாக்ஸ் அப்ளிகேஷனையும் வடிவமைத்துள்ளனர் என்றாலும், இது முற்றிலும் மாறுபட்ட கூடுதல் வசதிகளைத் தரும் வகையில், அதிகமான பணிகளை மேற்கொள்ளும் என கூகுள் நிறுவனத்தில் அண்மையில் உயர் பதவிக்கு உயர்த்தப்பட்ட சுந்தர் பிச்சை தன் வலைமனைப் பதிவில் தெரிவித்துள்ளார்.
புதிய இன்பாக்ஸ், ஜிமெயிலுக்கு மாற்றானது அல்ல. ஏற்கனவே நமக்குக் கிடைக்கும் இன்பாக்ஸினை முற்றிலுமாக மாற்றி அமைக்கிறது. ஜிமெயில் நமக்கு அறிமுகமாகி ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நாம் பல வகைகளில், பரிமாணங்களில் நம் பணிக் கலாச்சாரத்தினை மாற்றி வளப்படுத்தியிருக்கிறோம். ஆனால், நம் வாழ்வோடு இணைந்த ஜிமெயில் மாற்றம் பெறாமல் இருந்து வருகிறது. அதற்கு வளமையான மாற்றம் தரும் ஒரு முயற்சி தான் இந்த இன்பாக்ஸ்.
”முன்பிருந்த காலத்தைக் காட்டிலும், இப்போது அதிகமான எண்ணிக்கையில் நம் அக்கவுண்ட் இன்பாக்ஸில் மெயில்கள் குவிகின்றன. நமக்கு வரும் முக்கிய அஞ்சல்களும், இந்த குப்பையில் மாட்டிக் கொள்கின்றன.
இதனால், ஏற்படும் சிறிய இடைவெளிகளில், நமக்கு வரும் மிக முக்கிய அஞ்சல்கள் நழுவிப் போகலாம். குறிப்பாக, நாம் நம் மொபைல் போன்கள் வழி, அஞ்சல்களைப் பார்க்கையில், இந்த தவறுதல்கள் ஏற்படுகின்றன.
இங்கு நமக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டதே புதிய இன்பாக்ஸ்” என கூகுள் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment