கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை.
இருப்பினும் இதனை எளிதாகவும், விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் பயன்படுத்தக் கூடியவையே.
சில குறிப்புகள் பெர்சனல் கம்ப்யூட்டருக்கானவையாக இருக்கலாம். சில விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8க்கானவையாக தரப்படுகின்றன.
போல்டர்கள் & பைல்களை அமைத்தல்
நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும் My Documents போல்டரிலேயே சேமித்து வைத்தால், நிச்சயம் பைல் ஒன்றைத் தேடிப் பெறுவது சிரமமாக இருக்கும்.
எனவே, அலுவலக பைல்கள், சொந்த தனிவாழ்க்கைக்கான பைல்கள், குடும்ப உறுப்பினர்களுக்கான பைல்கள் என பல போல்டர்களை அமைத்து, சேமித்து வைப்பது நல்லது. இவற்றில் துணை போல்டர்களையும் அமைத்து, பைல்களைப் பிரித்து அடுக்க வேண்டும்.
டெஸ்க்டாப் சுத்தம்
டெஸ்க்டாப்பில் ஐகான்களைப் பதிந்து வைப்பது, நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை, விரைவாக இயக்கிப் பயன்படுத்த முடியும் என்பதனால்தான்.
ஆனால், இதற்காக, அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் அவற்றிற்கான ஐகான்களை டெஸ்க்டாப்பில் வைத்தால், அந்த நோக்கமே கெட்டுவிடும். எனவே, அடிக்கடி தேவைப்படாதவற்றிற்கான ஐகான்களை நீக்கிவிடுவதே நல்லது.
மேலும், தொடர்புள்ள ஐகான்களை ஒரு குழுவாகவும் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, Word, Excel and PowerPoint ஆகியவற்றிற்கான ஐகான்களை, டெஸ்க்டாப்பில் அருகருகே அமைத்தால், நாம் தேடி அலைய வேண்டியதில்லை.
போல்டர்களைப் பின் செய்திடுக
போல்டர்களை எளிதாக அடைவதற்கு அவற்றை டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கலாம். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து, போல்டர்களை அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் பின் செய்திடலாம்.
டாஸ்க் பாரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஐகானை ரைட் கிளிக் செய்தால், பின் செய்யப்பட்ட போல்டர் முதலில் காட்டப்படும். அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் போல்டர்களை மட்டும் இது போல பின் செய்திடவும். இல்லை எனில், இங்கும் கூட்டம் அதிகமாகி, நீங்கள் தேடிப் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.
ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்
மேலே, டெஸ்க்டாப்பில் அதிகமாகும் ஐகான்களை நீக்குவது குறித்து டிப்ஸ் தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினையும் நீங்கள் உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
ஒரு டெஸ்க்டாப் விளையாட்டுகள், இன்னொன்று அப்ளிகேஷன்களில் உருவாக்கும் பைல்களுக்கு, இன்னொன்று பாடல், விடியோ காட்சிகளுக்கான அப்ளிகேஷன்கள் எனப் பிரித்து அமைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட டெக்ஸ்டாப் அமைக்க விண்டோஸ் 10 வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.
தற்போதைக்கு Dexpot என்ற அப்ளிகேஷன் மூலம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8லும் இதனை அமைக்கலாம். இந்த அப்ளிகேஷனை http://download.cnet.com/Dexpot/3000-2346_4-10580780.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
0 comments :
Post a Comment