சென்ற ஜூன் மாதம் நடைபெற்ற கூகுள் டெவலப்பர்களின் கருத்தரங்கில், அடுத்து வெளியிடப்பட இருக்கும், தன் ஆண்ட்ராய்ட் எல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, கூகுள் கோடி காட்டியது.
சென்ற வாரத்தில், லாலிபாப் என்ற பெயரில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய பதிப்பு 5.0 னை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகி, ஏறத்தாழ ஓராண்டிற்குப் பின்னர், இந்தப் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகியுள்ளது.
இந்த சிஸ்டத்தின் இயக்கம் முழுவதும், முற்றிலும் புத்தம் புதிய கட்டமைப்பு காட்டப்படுகிறது. லாலிபாப் கட்டமைப்பில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும், கிட் கேட் அமைப்பில் உள்ளனவற்றைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் இயங்குகின்றன. அப்ளிகேஷன்களைத் தொடங்குகையில் இந்த வேகத்தினை நன்கு உணரலாம்.
நோட்டிபிகேஷன்கள் தரப்படுவது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல பணிகளை எடுத்துச் செயல்படுத்துவதில் மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் இன்னும் சில கூடுதல் வசதிகளும் தரப்பட்டுள்ளன.
புதிய தோற்றம்:
லாலிபாப் சிஸ்டத்தின் இயக்கத்தைப் பார்த்தவுடன் நம்மை ஈர்க்கும் ஒரு மாற்றம் அதன் கட்டமைப்பில் தான். கூகுள் இதனை Material Design என்றழைக்கிறது. மிகவும் பளிச் என்ற ஆழமான வண்ணங்கள் கண்களுக்கு இதமாக உள்ளன.
இவற்றினால் ஏற்படும் நிழல் தோற்றங்கள், குறைந்த அளவிலான தோற்றத்தினைக் கொடுக்கின்றன. டெக்ஸ்ட்டுடன் அதிக அளவில் வெள்ளை இடம், குறிப்பாக டெக்ஸ்ட்டைச் சுற்றி தரப்பட்டுள்ளது.
திரையுடன் நாம் தொடர்பு கொள்ளும்போது, நகரும் காட்சிகள் தோன்றி பரவசப்படுத்துகின்றன. வண்ணங்கள் குமிழ்களாகத் தோன்றி மறைகின்றன. கடந்த சில ஆண்டுகளில், கூகுள் தந்திருக்கும் அருமையான மாற்றங்களில் ஒன்றாக இது உள்ளது.
இந்த புதிய இடைமுகத்தில் (interface), தொடர்புகளுக்கான படங்கள் சற்றுப் பெரிதாகக் காட்டப்படுகின்றன. தொடர்பு கொள்ள ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கையில், காண்டாக்ட் கார்ட் என ஒன்று மேலெழுகிறது. இதன் வண்ணம், எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அறிவிப்புகள் (Notifications):
லாலிபாப், நோட்டிபிகேஷன் வகையில் புதிய அமைப்பினைத் தருகிறது. நோட்டிபிகேஷன் கார்ட், லாக் ஸ்கிரீனின் நடுவே காட்டப்படுகிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மற்றும் மோட்டோ அலர்ட்ஸ் வகைகளில் தரப்படுவது போல் உள்ளது.
ஒவ்வொரு அறிவிப்பும் ஒரு கார்ட் வழி தரப்படுகிறது. இதன் கீழ் விரி மெனுவினைப் பார்க்கும் போதும், அதே கார்ட் அமைப்பு காட்டப்படுகிறது. கூகுள் தான் வழங்கும் நோட்டிபிகேஷன்களை, தன் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளது.
அத்துடன், நாம் விரும்பும் வகையில் இந்த நோட்டிபிகேஷன் அறிவிப்புகளைச் சற்று மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து மின் அஞ்சல் கிடைக்கையில், இந்த அறிவிப்பு வரவேண்டும் என நீங்கள் விரும்பினால், அதனை அமைக்கலாம்.
அதே வேளையில், அந்த அறிவிப்பில், எந்த அளவில் தகவல்கள் இருக்க வேண்டும் என்பதனையும் வரையறை செய்திடலாம். எடுத்துக் காட்டாக, அஞ்சல் குறித்த அறிவிப்பில், அஞ்சல் 'சப்ஜெக்ட் லைன்' தேவையில்லை என நினைத்தால், கூகுள் மெயில் சென்று அமைத்திடலாம்.
0 comments :
Post a Comment