சமூக தளங்களில் நன்னடத்தை வழிகள்

இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர்.

உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர்.

இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அது அனைவருக்கும் நலம் அளிக்கும். அவற்றை இங்கு காணலாம்.


1. உணர்வு பகிர்தலில் கட்டுப்பாடு:

என்னதான் நம் நண்பர்களுடன் நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டாலும், சிலவற்றை நம்முடனே வைத்துக் கொள்வதுதான் நாகரிகமானது. ஒரு சிலர் வேண்டும் என்றே, உண்மைக்கு மாறான தகவல்களை, வெளிப்படுத்துகின்றனர்.

நம் உடல்நலக் குறைவு, பாலியல் ரீதியான பிரச்னைகள், மற்றவரை இன்னலுக்குள்ளாக்கும் காதல் பிரச்னைகளை மற்றவர் அறியத் தருவது நம்மைப் பற்றிய அருவருப்பைத்தான் ஏற்படுத்தும். எனவே உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பிறர் அறியத் தர வேண்டாமே.


2. சமூக தளம் உங்கள் பிரச்சார மேடை அல்ல:

இணையத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் சமூகத் தளங்கள், நம் கருத்துக்களை வெளிப்படுத்தவும் தரப்பட்டிருக்கும் ஓர் இடம் தான். ஆனால், அதனையே நம் பிரச்சார மேடையாக்கி, எப்போதும் நான் எண்ணுவதே, என் கொள்கைகளே, கருத்துக்களே சரி என்ற அளவில் இயங்குவது தவறானதாகும்.

உங்கள் ஒழுக்க, அரசியல் கோட்பாடுகளை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதற்காக உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிடுவது தவறு.


3.குற்றச்சாட்டுக்கான மேடையா இது?:

சிலர் நுகர்வோர் பிரச்னைகளுக்கான மேடையாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் தவறு. ஒன்றிரண்டு பொதுவான பிரச்னைகளை தெரிவிக்கலாம். ஆனால், தொடர்ந்து ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை, அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடுவது கூடாது.


4. நீங்கள் என்ன செய்தி ஏஜென்சியா? :

இணையத்தில் இப்போது சுடச் சுட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அல்லது நடந்து முடிந்த சில நொடிகளில் அது குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், ஒரு சிலர் தங்களுக்குத்தான் முதலில் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டு அவை பற்றி தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.

இதற்கென இருக்கும் நியூஸ் ஏஜென்சிகள் அவற்றைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் நேரத்தையும், வலைத் தளங்களின் இடத்தையும் வீணடிக்கிறீர்கள்.


5.மேற்கோள்கள் தேவையா?:

சிலர் ஐன்ஸ்டீன் சொன்னது, ஷேக்ஸ்பியர் நாயகர்கள் கூறியது என எதனையாவது மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தொடர்பற்று இருக்கும் இவை தேவையா? நீங்கள் உங்களைப் பெரிய குருவாக எண்ணுவதனை நிறுத்திக் கொள்ளலாமே.


6. வீணான பெருமை வேண்டாமே!:

சிலர் தங்கள் நண்பர்கள் வட்டம் மிகப் பெரிது என்பதைக் காட்டுவதற்காக, தினந்தோறும் தொடர்பு அற்ற பலருக்கு மெசேஜ் அனுப்புவார்கள். இதனால் என்ன நேரப் போகிறது. உண்மையிலேயே நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை இருந்தால் மட்டுமே நண்பர்களின் வட்டத்தை விரிதாக்குங்கள். நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் ஆரோக்கியமான உறவினைப் பலப்படுத்துங்கள்.


7.உங்களுக்கு தகவல், மற்றவருக்கு குப்பை?:

சில தகவல்கள் உங்களுக்கு மட்டுமே தொடர்புடையதாக இருக்கும். மற்றவருக்கு அது கிஞ்சித்தும் பயன்படாததாக இருக்கலாம். அவற்றை அனைவருக்கும் அனுப்புவதனை நிறுத்தவும். ஏனென்றால், சமூக வலைத் தளம் உங்களின் பிரைவேட் டயரி அல்ல.


8. முகம் சுழிக்கும் படங்கள் தேவையா?:

என்ன ஏது என்று பார்க்காமல், சிலர் தாங்கள் ரசிக்கும் படங்களைப் பதிக்கின்றனர். மத ரீதியாக சிலர் மனதை அவை புண்படுத்தலாம். நாகரிக அடிப்படையில் சில ஒத்துக் கொள்ளக் கூடாததாக இருக்கலாம். எனவே தேவையற்ற படங்களை வெளியிட வேண்டாமே. அதே போல உங்களின் தோழர்கள் மற்றும் தோழியர்களின் படங்களை வெளியிடுவது மிகப் பெருந் தவறல்லவா. அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை பாழ்படுத்த வேண்டாமே.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at July 18, 2012 at 6:52 PM said...

நடக்கும் உண்மைகளை அட்டகாசமாக சொல்லி உள்ளீர்கள்...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes