இனி, பி.டி.எப். பைல்களைப் படிக்க, இன்னொரு புரோகிராமினைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வேர்ட் தொகுப்பிலேயே அவற்றைத் திறந்து படிக்கலாம். வியப்பாக இருக்கிறதா! மேலே படியுங்கள்.
தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 8 வெளியிடுவதில் மும்முரமாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அதிக ஆரவாரமின்றி, தன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் பதிப்பு 15 ஐ வடிவமைப்பதிலும் கவனம் செலுத்தி உழைத்து வருகிறது.
இதனை ஆபீஸ் 15 எனத் தற்போதைக்கு அழைத்தாலும், இதன் பெயர் பின்னர் வெளியிடப்படுகையில் மாறலாம். 2012ல் வெளி வந்தால், ஆபீஸ் 2012 என இருக்கலாம்; 2013 எனில் அதற்கேற்ப பெயர் மாறலாம்.
சில மாதங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த தொகுப்பின் தொடக்க பதிப்பினை ஒரு சில தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு மட்டும் வழங்கி கருத்து கேட்டுள்ளது. பொதுமக்களுக்கான சோதனை தொகுப்பு விரைவில் வெளியிடப் படும் எனத் தெரிகிறது.
இந்த தொகுப்பு இணையவெளியில் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையிலும் கிடைக்கலாம். இந்த தொகுப்பு குறித்து பால் என்பவர்http://www.winsupersite.com/article/office/office-15-milehigh-view-142847 என்ற இணையப் பக்கத்தில் பல குறிப்புகளைத் தந்துள்ளார். இதிலிருந்து ஆபீஸ் 15 பதிப்பில் தொழில் நுட்ப ரீதியாக இன்னும் பல மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிகிறது.
இந்த தொகுப்பில் மிக மிக முக்கிய சிறப்பு பி.டி.எப். பைல்களைப் படிக்கும் வசதிதான். .doc, .rtf பார்மட் பைல்களைத் திறந்து படிப்பது போல, .pdf பைல்களையும் இதில் திறந்து படிக்கும் வசதி தரப்படுகிறது.
மைக்ரோசாப்ட் அடுத்து தர இருக்கும் தன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10ல் ப்ளாஷ் இணைத்துத் தர இருப்பதால், ஆபீஸ் தொகுப்பில் பி.டி.எப். படிக்கும் வசதி தரப்படுவதில் சிக்கல் இருக்காது. நமக்கு இது மிகவும் பயன் தரும் ஒரு வசதியாக இருக்கும்.
இத்துடன், சென்ற அக்டோபரில் அனுமதிக்கப்பட்ட Open Document Format ODF 1.2 என்ற பார்மட் டாகுமெண்ட் களையும், ஆபீஸ் 15ல் படிக்க இயலும். இதே போல இன்னும் பல சிறிய மாற்றங்கள் இருக்கும். பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பு, 16:9 பார்மட்டினைத் தன் மாறா நிலையில் கொண்டிருக்கும். பழைய பார்மட்டுகளையும் கையாளலாம்.
ஆபீஸ் தொகுப்பு பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அனைவரும், ஆபீஸ் 15க்கு மாறுவார்களா என்பது, இது போல பல புதிய அரிய வசதிகளை தருவதன் அடிப்படையிலேயே அமையும் என்பதனை மைக்ரோசாப்ட் உணர்ந்துள்ளது. எனவே தான் இந்த புதிய வசதிகளைத் தரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
0 comments :
Post a Comment