பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த கூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ் வசதி சென்ற மாத இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. கிளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஒரு வசதியாக இந்த இணைய ஸ்டோரேஜ் ட்ரைவ் வசதி தரப்பட்டுள்ளது.
கூகுள் அக்கவுண்ட் உள்ள யாரும் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 ஜிபி அளவிலான பைல்களை இதில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அந்த பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பின் மூலம், கூகுள் ட்ரைவ் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
5 ஜிபி அளவிற்கும் மேலாக ட்ரைவ் இடம் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி 16 டெராபைட் (!) வரை டிஸ்க் ஸ்பேஸ் பெற்றுக் கொள்ளலாம். இலவச 5 ஜிபிக்கு மேலாக, 25 ஜிபிக்கு மாதந்தோறும் 2.49 டாலர், 100 ஜிபிக்கு 4.99 டாலர், ஒரு டெராபைட் 49.99 டாலர் செலுத்த வேண்டும். இந்த வகையில் ஆண்டுக்கு 100 டாலர் செலுத்தி 400 ஜிபி இடமும் பெற்றுக் கொள்ளலாம்.
2006 ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனம் குறித்து பேசுகையில், இந்த கூகுள் ட்ரைவ் ஒரு வதந்தியாக உலா வந்து கொண்டிருந்தது. அப்போதிருந்தே பல நிறுவனங்கள், இணையத்தில் பைல்களை சேவ் செய்து வைக்க வசதிகளை அளித்து வந்தன. அந்த வரிசையில் ட்ராப் பாக்ஸ் (Dropbox), ஸ்கை ட்ரைவ் (SkyDrive), ஐ கிளவ்ட் (iCloud), பாக்ஸ் (Box) எனக் கிடைத்தன.
கூகுள் ட்ரைவ் தரும் இலவச 5 ஜிபி இடம் குறிப்பிடத்தக்கது. ட்ராப் பாக்ஸ் 2ஜிபி இடம் தருகிறது. ஸ்கைட்ரைவ் 25 ஜிபி கொள்ளளவு தருகிறது. இதில் 5 ஜிபி, உங்கள் கம்ப்யூட்டர் பைல்களுடன் இணைக்கப்பட்ட இடமாகக் கிடைக்கிறது. கூகுள் தன் மற்ற சேவைகளிலும் இந்த இணைய பைல் சேவையினைத் தந்து வருகிறது.
ஜிமெயில் இன்பாக்ஸ் 7 ஜிபிக்கு மேலாகவே இடம் தருகிறது. கூகுள் டாக்ஸ் போல்டர் 1 ஜிபி, பிகாஸா வெப் ஆல்பம் 1 ஜிபி, கூகுள் மியூசிக் தளத்தில் 100 ஜிபி பாடல்கள் சேமிப்பு, கூகுள் ப்ளஸ் வசதியில் எல்லையற்ற போட்டோ மற்றும் வீடியோ பைல் சேமிப்பு எனப் பல ஸ்டோரேஜ் வசதிகள் கூகுள் மூலம் கிடைக்கின்றன. கூகுள் ட்ரைவில் போல்டர்களைப் பயன்படுத்தி, உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் இருந்து பைல்கள் தாமாக இங்கு சென்று சேவ் செய்திடும் வகையில் அமைக்கலாம்.
இந்த வகையான கிளவ்ட் பைல் ஸ்டோரேஜ் சேவை அனைத்தும், உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட மாட்டாது. இவை இன்னொரு தர்ட் பார்ட்டியின் சர்வரில் இடம் பெறும். இவற்றைப் பெற உங்கள் பாஸ்வேர்ட் மட்டும் இருக்குமா? அல்லது அந்த சர்வரை நிர்வகிப்பவர் அல்லது கூகுள் சேவையை வழங்குபவரிடமும் பைல் பெறுவதற்கான பாஸ்வேர்ட் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
இந்த கிளவ்ட் சேவை மற்றொரு நிறுவனத்தின் தொழில் நுட்ப வசதியை இதற்கென பயன்படுத்துகையில், நம் பைல்களை அவர் களும் பார்க்க, இறக்கிக் கொள்ள வழி கிடைத்துவிடுமே? அப்போது நம் பைல்களின் ரகசியத் தன்மைக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்?
நாம் இப்போதெல்லாம், பலவகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, வெவ்வேறு மொபைல் சாதனங்களில் பயன்படுத்தி வருகிறோம். விண்டோஸ், லேப்டாப், ஆப்பிள் ஓ.எஸ்., ஆண்ட்ராய்ட் போன் என இவை விரிகின்றன. இவை அனைத்தின் மூலமும் இந்த கிளவ்ட் சேவையினைப் பெறும் வசதி நமக்குக் கிடைக்க வேண்டும்.
இல்லையேல், இதன் முதன்மைப் பயன் நமக்குக் கிடைக்காது. அல்லது நாம் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற் கேற்ப, இந்த கிளவ்ட் ஸ்டோரேஜ் வசதியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக, மேக் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் தரும் ஐகிளவ்ட் சேவையைப் பயன் படுத்தலாம். கூகுள் ட்ரைவ் பொறுத்த வகையில், விண்டோஸ், மேக் பிசி, ஐபோன், ஐபேட் (விரைவில் வர உள்ளது) மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்கள் ஆகியவற்றிற்கான இடைமுக இணைப்பு வசதி தரப்பட்டுள்ளது.
கூகுள் சேவையில் நிச்சயமாக அதன் தேடுதல் வசதி நிச்சயம் கிடைக்கும். பைல் பெயர், திருத்தப்பட்ட நாள் போன்றவற்றின் அடிப்படையில் பைல்களைத் தேடலாம். படங்களைப் பயன்படுத்தியும் பைல் களைத் தேடலாம்.
எடுத்துக்காட்டாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரத்தின் படத்துடன் ஒரு கட்டுரை அடங்கிய பைலைப் பதிந்திருந்தால், கோபுரத்தின் படத்தைக் கொண்டு அந்த பைலைத் தேடிப் பெறலாம். இதற்கு Google Goggles என்ற தொழில் நுட்பம் பயன் படுத்தப்படுகிறது.
பைல்களை இணையத்தில் உள்ள பிரவுசர் மூலமே திறந்து பார்க்கும் வசதி தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக, உங்கள் நண்பர் ஒரு அடோப் பேஜ்மேக்கர் பைல் ஒன்றை அனுப்புகிறார். அதனை கூகுள் ட்ரைவில் பதிந்து வைத்தால், நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் பேஜ் மேக்கர் சாப்ட்வேர் இல்லாமலேயே, அந்த பைலைத் திறந்து பார்க்கலாம். இந்த வகையில் 30 வகையான பார்மட்களில் உள்ள பைல் களைத் திறந்து பயன்படுத்தலாம்.
மற்ற கூகுள் சேவைகளில் எந்த வகை யில் இயக்க வழிமுறைகள் உள்ளனவோ அதே போலவே, கூகுள் ட்ரைவ் இயக்கமும் உள்ளது. எனவே கூகுளின் மற்ற சேவைகளைப் பயன்படுத்தியவர்களுக்கு, கூகுள் ட்ரைவ் பயன்படுத்துவது எளிது.
கூகுள் ட்ரைவ் வெறும் ஸ்டோரேஜ் வசதி தரும் சாதனம் மட்டுமல்ல; கூகுள் டாக்ஸ் வசதியின் மேம்படுத்தப்பட்ட, நீட்டிப்பு வசதியாகும். இங்கும் டாகுமெண்ட்ஸ், மீடியா மற்றும் பைல்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வசதி தரப்படு கிறது. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இணைந்து ஒரு பைலை எடிட் செய்திடலாம். உங்கள் நண்பர்கள் உலகின் பல மூலைகளில் இருந்தாலும், இணைந்து செயலாற்றலாம்; அவர்கள் எந்த சாதனத்தைப் பயன்படுத்தியும் இந்த செயல்பாட்டில் இணையலாம்.
இந்த சேவைகள் கூகுள் ட்ரைவின் தொடக்க நிலையிலேயே தரப்படுகின்றன. இவை தொடக்கம் தான்; இன்னும் பல சேவைகள் வர இருக்கின்றன என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்த வசதியைப் பெற இணையத்தில் https://drive.google.com/start#home என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் நுழையவும். உடன் உங்கள் பதிவை ஏற்றுக் கொண்டு, பின்னொரு நாளில் உங்களுக்கு கூகுள் ட்ரைவ் அனுமதியை வழங்கியுள்ளதாக, உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரிக்கு கூகுள் அறிவிக் கும். இடது பக்கம் உள்ள “Download Google Drive” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சின்னதாக ஒரு இன்ஸ்டலேஷன் நடை பெறும்.
பின்னர், கூகுள் ட்ரைவ் போல்டர் உங்கள் டெஸ்க்டாப்பில் இடம் பெறும். இது நேரடியாக கூகுள் ட்ரைவுடன் இணைக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களில் மாற்றம் ஏற்படுகையில், அது கூகுள் ட்ரைவில் உள்ள பைலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதே போல உங்கள் அனுமதி பெற்றவர்கள், அங்கே ஸ்டோர் செய்து வைக்கப்பட்டுள்ள பைல் களில் மாற்றம் ஏற்படுத்தினால், கம்ப்யூட்டரில் உள்ள பைலிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும்.
Google Drive for PC (அல்லது மேக்) என்ற புரோகிராம் நம் கம்ப்யூட்டருக்கும் கூகுள் ட்ரைவிற்கும் இடையே ஒருங்கிணைப்பு பாலத்தினை ஏற்படுத்துகிறது. விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் மேக் ஆகியவற்றிற்கான புரோகிராம்கள் கிடைக்கின்றன.
இந்த புரோகிராம் பின்னணியில் இயங்கி, கூகுள் ட்ரைவின் போல்டரில் காப்பி செய்யப்படும் பைல்களை அப்டேட் செய்கிறது. நம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பைல் மேனேஜர் பகுதியில் ஒரு டைரக்டரியாக இது இடம் பெறுகிறது.
கூகுள் ட்ரைவ் பயன்படுத்துபவர்கள், இதற்கு அனுப்பப்படும் பைல்களின் எக்ஸ்டன்ஷன் பெயரில் சிறிய மாற்றம் இருப்பதனைக் காணலாம். கூகுள் ட்ரைவுடன் சம்பந்தப்பட்டது என்று காட்டவே இந்த ஏற்பாடு.
இந்த ட்ரைவினை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்கள் சற்று கவனத்துடன் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கூகுள் அக்கவுண்ட் ஒன்று வைத்திருப் பவர், கூகுள் தரும் அனைத்து வசதி களையும் பயன்படுத்த முடியும். எனவே கூகுள் ட்ரைவ் பயன்படுத்துபவருக்கு, கூகுள் மெயில், வெப்மாஸ்டர் டூல்ஸ், கூகுள் டாக்ஸ் அல்லது யு ட்யூப் என அனைத்திலும் பங்கேற்கலாம்.
எனவே, இந்த எச்சரிக்கையின் பின்னணியிலேயே ஒருவர் கூகுள் ட்ரைவினைப் பயன்படுத்த
வேண்டும். கூடுமானவரை கம்ப்யூட்டர் இயங்கும்போதே, கூகுள் ட்ரைவ் வசதியும் இயக்கப்படாமல் இருப்பதே நல்லது. நாம் விரும்பும்போது மட்டும் இதனைப் பயன்படுத்தும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். googledrivesync.exe பைல் திறக்கப்பட்டு இயங்கா நிலையில் கூட, ராம் நினைவகத்தில் 50 எம்பி இடத்தை எடுத்துக் கொள்கிறது. இது மற்ற கிளவ்ட் கம்ப்யூட்டிங் ட்ரைவ் புரோகிராம்களைக் காட்டிலும் மிக அதிகமாகும். இருப்பினும், இன்றைய நிலையில் குறைந்தது 2 ஜிபி ராம் நினைவகம் உள்ள கம்ப்யூட்டரை நாம் பயன்படுத்துவதால், இதனால் சிக்கல் ஏதுமில்லை என்ற முடிவிற்கு வரலாம்.
0 comments :
Post a Comment