இணையத்தில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எதேனும் ஒரு நிறுவனம் தன் தனித்துவம் பெற்ற புரோகிராம் மூலம், மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றிருந்தால், அதனுடன் போட்டியிட புரோகிராம் எதனையும் தயாரிக்காமல், அதனை அப்படியே விலைக்கு வாங்கி, தன் குடைக்குள் கொண்டு வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கை.
அந்த வகையில் அண்மையில் இணையத்தில் நண்பர்களுடன் வீடீயோ காட்சியுடன் பேச, சேட் செய்திட மற்றும் சார்ந்த சேவையினை, உலகளாவிய அளவில் வழங்கி வரும் ஸ்கைப் சாப்ட்வேர் நிறுவனத்தினை, மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது. இதற்கென மைக்ரோசாப்ட் செலுத்திய தொகை 850 கோடி டாலர். இனி ஸ்கைப் என்னவாகும்? என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது.
சிலவற்றிற்கான பதிலை இங்கு காணலாம்.
ஸ்கைப் சேவை தற்போது இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதனாலேயே மக்கள் ஸ்கைப் நிறுவனத்தினை மிகவும் நேசிக்கின்றனர். எனவே, மைக்ரோசாப்ட் இந்த சேவையினை கட்டண சேவையாக நிச்சயம் மாற்றப்போவதில்லை. அப்படி மாற்றினால், இந்த சேவையின் பண்பு மாறும். பல வாடிக்கையாளர்கள் இதிலிருந்து விலகிவிடுவார்கள்.
உயர்நிலையில் ஸ்கைப் சேவை கட்டணத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அது மிகவும் குறைவு என்பதுடன், தொடர்ந்து பல ஆண்டுகளாகக் குறைந்தும் வந்தது. ஸ்கைப் பயன்படுத்தும் 17 கோடிப் பேர்களில், 90 லட்சம் பேர் மட்டுமே கட்டண சேவையினைப் பயன் படுத்தி வந்தனர். இவர்களின் எண்ணிக்கையும் கடந்த மூன்று ஆண்டுகளில் 20% ஆகக் குறைந்தது. எனவே கட்டண சேவையில் மைக்ரோசாப்ட் ஆர்வம் காட்டாது என உறுதியாகச் சொல்லலாம்.
மைக்ரோசாப்ட் ஸ்கைப் சேவையினை ஒரு தனி நிறுவனப் பிரிவாக அமைத்துள்ளது. ஏற்கனவே அதன் தலைமைப் பொறுப்பில் இருந்த டோனி பிளேட்ஸ் அதே நிலையில் தொடர்கிறார். இதில் மைக்ரோசாப்ட் மேலும் முதலீடு செய்து, இந்த சேவையினை இன்னும் சிறப்பான முறையில் அதிக மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை நிச்சயம் எடுக்க இருக்கிறது.
ஏற்கனவே மைக்ரோசாப்ட் இதே போன்றதொரு சேவையினை, விண்டோஸ் லைவ் மெசஞ்சர் மற்றும் எம்.எஸ்.என்.மெசஞ்சர் என்ற பெயர்களில் நடத்துகிறது. இனி, இதனை ஸ்கைப் சேவைக்குள் கொண்டு வந்து, கூகுள் டாக் மற்றும் யாஹு மெசஞ்சர் சேவைகளுக்குப் போட்டியாக மாற்றலாம்.
இதுவரை ஸ்கைப் சேவையில் மாற்றத்திற்கான புரோகிராம் மாறுதல்கள் அறிமுகப்படுத்தப் படுகையில், முதலில் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட்டட் புரோகிராம் தரப்பட்டது. அடுத்து சில மாதங்கள் கழித்தே மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்களுக்கு அவை வழங்கப் பட்டன. அனைத்து ஸ்கைப் பயனாளர் களுக்கும், சேவை தொடர்ந்து கிடைக்கும் என மைக்ரோசாப்ட் உறுதி அளித்திருப்பதால், மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்கள் கவலைப்பட வேண்டிய தில்லை.
தற்போதுள்ள மக்களுக்கான இலவச சேவையை அப்படியே வைத்துக் கொண்டு, இதே ஸ்கைப் சேவையினை நிறுவனங்களுக்கான சேவையாகத் தனியாக வடிவமைத்து, கட்டண அடிப்படையில் மைக்ரோசாப்ட் வெளியிடலாம்.
இந்த ஸ்கைப் சேவை மைக்ரோசாப்ட் சர்வர், பிசினஸ் சாப்ட்வேர் மற்றும் நிறுவனங்களுக்கான சர்வீஸ்களுடன் இணைந்து வெளியிடப்படலாம்.
ஸ்கைப் சேவை, மைக்ரோசாப்ட் வழங்கி வரும் லிங்க், மெசஞ்சர், அவுட்லுக், எக்ஸ் பாக்ஸ் லைவ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு கிடைக்கலாம்.
ஆனால், இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு நிச்சயம் ஒரு விஷயம் மைக்ரோசாப்ட் மனதில், ஸ்கைப் சேவையை வாங்கும்போது இருந்திருக்க வேண்டும். அது விளம்பர வருமானமே. சாப்ட்வேர் நிறுவனங்கள் அனைத்துமே, தற்போது இணைய வெளி விளம்பரங்களுக்கு இடம் கொடுத்து வருமானம் ஈட்ட திட்டமிடுகின்றன. குறிப்பாக வீடியோ அடிப்படையிலான விளம்பரங்கள், ஸ்கைப் சேவையில் நிறையத் தர முடியும் என்பதால், மைக்ரோசாப்ட் இந்த வருமானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
0 comments :
Post a Comment