மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வசதியின் மூலம் பலனடைந்த நிறுவனமான வோடபோன் உள்ளதாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
மனிதனின் புலனுறுப்புகளுள் தற்போது புதிதாக மொபைல்போன் இணைந்துள்ளது என்று கூறினால், அது மறுக்கமுடியாத உண்மையாகவே கருதப்படுகிறது. அந்த அளவிற்கு, மனித வாழ்க்கையில் மொபைல்போன் நீக்கமற நிறைந்திருக்கிறது.
5 வீட்டிற்கு ஒரு போன் இருந்த காலம் போய், ஒருவருக்கு 2 மொபைல்போன்கள் என்ற நிலை தற்போது வந்துள்ளது. தங்கள் மொபைல்போன் சார்ந்திருக்கும் நெட்வொர்க்கின் சேவைகள் திருப்தியளிக்காவிட்டால், மொபைல்போன் நம்பரை மாற்றாமல், தங்களது நெட்வோர்க்கை மாற்றிக்கொள்ளும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வசதியை தொலைதொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி ஹரியானாவில் முதற்கட்டமாகவும், பின் இந்த ஆண்டு துவக்கத்தில் அதாவது ஜனவரி 20ம் தேதி நாடு முழுவதும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்பட்டது.
மொபைல்போன் வாடிக்கையாளர்கள், தங்கள் நம்பரை மாற்றாமல், தங்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான நெட்வொர்க்கிற்கு இதன்மூலம் மாறினர். இந்தியாவில், மொத்தம் 771 மில்லியன் மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர்.
அவர்களில் 5 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி வேறு நிறுவனத்திற்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, முழுதாக, 2 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வசதியின் மூலம் பயனடைந்த தொலைதொடர்பு நிறுவனம் குறித்து செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த மொபைல் நம்பர் போர்டபிலிட்டி முறையில் பயனடைந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் பட்டியலில் வோடபோன் முதலிடத்தில் உள்ளது.
இந்த நெட்வொர்க்கில் புதிதாக 192,761வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இரண்டாமிடத்தில் ஐடியாவும் ( 150,789 வாடிக்கையாளர்கள்) உள்ளது.
முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நெட்வொர்க்கில் 148,215 பேர் புதிதாக இணைந்துள்ளனர். இவ்வாறு முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களை நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுத்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ஏர்டெல்லிற்கு அடுத்தபடியாக உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தில் இருந்து 306,417 பேர் வேறு நிறுவனத்திற்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மொபைல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதற்கு சான்றாக, கடந்த ஆண்டிலிருந்து மாதத்திற்கு 19 மில்லியன் பேர் புதிதாக மொபைல்போன் வாடிக்கையாளர்களாக இணைவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
0 comments :
Post a Comment