"என் கதையான, "ரோபாட் தொழிற்சாலையை, "எந்திரன் படமாக வெளியிட்ட இயக்குனர் சங்கர் மீதும், துணையாக இருந்தவர்கள் மீதும் காப்புரிமை சட்டப்படி வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என எழுத்தாளர் ஆர்னிகா நாசர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.
டைரக்டர் ஷங்கர் இயக்கிய, "எந்திரன் படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் கதை தன்னுடையது என்று புலனாய்வு பத்திரிகை துணை ஆசிரியரான அமுதா தமிழ்நாடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார்.
இந்நிலையில், எழுத்தாளர் ஆர்னிகா நாசர், நேற்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது:
நான், கடந்த 25 ஆண்டுகளாக சிறுகதைகள், விஞ்ஞான கதைகள் மற்றும் நாவல்கள் எழுதி வெளியிட்டு வருகிறேன். கடந்த 1995ம் ஆண்டு எழுதிய, "ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல், குமுதம் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான, மாலைமதி இதழில், ஜூலை 13, 1995 இதழில் வெளியானது.
சமீபத்தில் வெளிவந்த, "எந்திரன் படத்தை பார்த்த என் வாசகர்கள் பலர், என் கதையில் இருந்து பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டு, அந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். படத்தை நானும் பார்த்தேன். என் கதையில் வந்த பல சம்பவங்கள் படத்தில் முக்கியமான காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
காப்புரிமை சட்டப்படி நான் முதல் உரிமையாளர். அப்படி இருக்கும்போது, இயக்குனர் ஷங்கர், இந்த கதையின் முக்கிய பகுதிகளை தன் சொந்த கற்பனையில் உருவான கதை என்று லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் திரித்து கூறி, பலரை ஏமாற்றி, " எந்திரன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
காப்புரிமை சட்டப்படி, முதல் உரிமையாளரான என் அனுமதியில்லாமல், என் கதையை திரைப்படமாக்கி வெளியிட்டதன் மூலம், எனக்கு பல கோடி ரூபாய் சட்டவிரோத நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். எனவே, என் கதையை திருடியவர்கள் மீது இந்திய காப்புரிமை சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து எழுத்தாளர் ஆர்னிகா நாசர் கூறுகையில், எனது "ரோபாட் தொழிற்சாலை கதையின் பிரதி, என்னிடம் இல்லாததால், சமீபத்தில், பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டேன். இதை அறிந்த கடலூர், சிப்காட் ஊழியர் துரை என்பவர், பிரதியை எனக்கு வழங்கினார்.
என் கதையை, இயக்குனர் ஷங்கர் படமாக எடுத்துள்ளது குறித்து கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். அவர், உதவி கமிஷனர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். அத்துடன், 50 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சிவில் வழக்கும் தொடர உள்ளேன், என்றார்.
1 comments :
அப்ப அது சுஜாதா கதை இல்லியா?..
நல்ல வேள! வியாசர் கம்பர் வால்மீகி எல்லாம் இப்ப இல்ல, இருந்தா மணிரத்னம் எத்தின வழக்க சமாளிக்கிறது?? இவுங்க எப்பவும் இப்பிடித்தான் பாஸ்...
Post a Comment