பெர்சனல் கம்ப்யூட்டிங் உலகம் மாறி வருகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் விற்பனை அறிக்கைகளை வைத்துப் பார்க்கையில், டெஸ்க் டாப் விற்பனை பின்னுக்குச் செல்கிறது. லேப்டாப் அதன் இடத்தைப் பிடித்துள்ளது.
கம்ப்யூட்டர் என்றால் அது லேப்டாப் தான் என்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விற்பனையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எடுத்துச் செல்ல எளிதாக இருப்பதாலும், விலை குறைந்து இருப்பதாலும், கம்ப்யூட்டர் செயல்பாட்டு எதிர்பார்ப்பில் சிலவற்றை தியாகம் செய்து, மக்கள் நெட்புக் கம்ப்யூட்டரினைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர்.
இவை எல்லாவற்றைக் காட்டிலும், இவற்றின் இடத்தை ஸ்மார்ட் போன்கள் பிடித்து வருகின்றன. இவற்றின் இயக்கம் முற்றிலும் ஒரு கம்ப்யூட்டர் போலவே இருப்பதால், கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனாலேயே இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள், பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை, ஸ்மார்ட் போனுக்கு இணைவாக உருவாக்கி வெளியிட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்துபவருக்குப் பணம் செலவானாலும், நேரத்தின் அருமை கருதி, பலரும் ஸ்மார்ட் போன்களைக் கம்ப்யூட்டரின் இடத்தில் பயன்படுத்தத் தொடங்கி வருகின்றனர்.
இந்த மூன்று சாதனங்களுக்குமான விற்பனை விலையில் வேறுபாடு அப்படி ஒன்றும் அதிக அளவில் வித்தியாசமானதாக இல்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆஹா! இப்படிச் சொன்னால் எப்படி! எதனை நாங்கள் வாங்க வேண்டும் எனப் பட்டியலிட்டால் தானே, ஒரு முடிவு எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறீர்களா!
இதோ நம் வேலை அடிப்படையில் இவற்றின் நிறை, குறைகளைப் பார்க்கலாம். இவை எல்லாமே மொபைல் சாதனங்கள் என்ற அடிப்படையில் வருகின்றன. கைகளில் எடுத்துச் சென்று, எந்த இடத்திலும் நம் கம்ப்யூட்டர் வேலைகளை நாம் மேற்கொள்ள முடியும்.
1. நிறுவன, அலுவலக வேலைகள்: நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள நிறுவன, அலுவலக வேலைகளுக்கு நீங்கள் கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்துகிறீர்களா! பெரிய வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஒர்க் ஷீட்கள், மல்ட்டிமீடியா காட்சித் தொகுப்புகள், உங்கள் நிறுவனத்திற்கென அமைத்துத் தரப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம்கள் ஆகியன உங்கள் பணியை நிர்ணயம் செய்கின்றனவா?
இந்த சாதனங்கள் உங்களுக்கு எப்படி பயன்படும் என்று பார்க்கலாம்?
இத்தகைய வேலைகளுக்கு ஒரு முழுமையான லேப்டாப்தான் சிறந்த தேர்வாக அமையும். அதிக சக்தியுடன் கூடிய சி.பி.யு., ராம் மெமரி, எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருந்து இடர்களைத் தாங்கும் சக்தி லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கே உள்ளது. ஆனால் ஒரு நல்ல பிசினஸ் லேப்டாப், மற்ற இரண்டு சாதனங்களின் விலையைக் காட்டிலும் இரு மடங்காக இருக்கும்.
இந்த வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் கொஞ்சம் இடவசதி குறைவான கீ போர்ட், திரை மற்றும் திறன் குறைந்த சிபியு, ராம் மெமரி, அலுவலகப் பயன்பாட்டிற்கு இதனைத் தேர்ந்தெடுக்கத் தடையாய் உள்ளன. இத்தகைய வேலைகளில் ஈடுபடுவோருக்கு ஸ்மார்ட் போன் ஒன்று நிச்சயம் தேவையாய் இருக்கும்.
ஆனால் அது லேப்டாப் கம்ப்யூட்டரில் கிடைக்கும் வேகத்தினைத் தருவதில் இன்னும் பின்தங்கியே உள்ளது. எனவே இந்த பணியில் ஈடுபடுபவர்கள், நல்ல திறன் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றையும், ஸ்மார்ட் போன் ஒன்றையும் தங்களுக்கென வாங்கிக் கொள்ளலாம்.
2. வீடுகளிலும் மாணவர்களிடமும்: பெரிய அளவில் நிறுவன வேலைகள் இல்லாதவரா? மாணவரா? இந்த இருவகையினரும் வெளியே அலைந்து திரிந்து தங்கள் நாளைக் கழிப்பவர் என்றாலும், ஒரு நிறுவன ஊழியர் அளவிற்குக் கம்ப்யூட்டர் தேவை இருக்காது. குறிப்பாக மாணவர்களுக்கு நோட்ஸ் எடுக்க, இணையம் பார்க்க, பிரசன்டேஷன் காட்சிகள் அமைக்க, கட்டுரைகளை எழுத எனப் பல கல்வி சார்ந்த வேலைகளைத் தாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று கனமான தாகவும், புத்தகங்கள் மற்றும் பைகளுடன் தூக்கிச் செல்லச் சற்று சிரமமானதாகவும் இருக்கும். எனவே இவர்கள் நெட்புக் கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்கலாம்.
இதன் திரை, கீ போர்டு இவர்களின் வேலையை அவ்வளவாகப் பாதிக்காது. ஏனென்றால் இவர்களின் பணி சற்றுப் பொறுமையாக மேற்கொள்ளும் வகையில் அமையும். இவர்களுக்கு ஸ்மார்ட் போன் நல்ல துணைவனாக இருந்தாலும், கற்பனை மற்றும் உழைப்பின் அடிப்படையில் அமைக்கப்படும் திட்டங்களுக்கு அது உதவாது.
3. இணைய உலா வர: இணையத்தில் எதனையேனும் திடீர் திடீரெனப் பார்க்க வேண்டியதிருக்கும். யாரேனும் நண்பர் போன் செய்து, உனக்கு ஒரு பைல் அனுப்பி உள்ளேன். பார்த்து உடன் பதில் அனுப்பு என்பார். அல்லது இந்த இணைய தளத்தில் புதிதாக ஒன்றின் விலை வந்துள்ளது. வாங்கி மாற்றிவிடலாமா? என்பார்.
அப்போது நீங்கள் வீட்டில் இருந்து வெளியே இருக்கலாம். இணையத் தொடர்பிற்கென லேப் டாப் கம்ப்யூட்டரைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா? இணைய உலா மேற்கொள்ள, நெட்புக் கம்ப்யூட்டர்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்டதாக அமையும். ஆனால் ஸ்மார்ட் போன்கள், நெட்புக் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதலாகப் பயன்களைத் தரும். இவை எப்போதும் இணையத் தொடர்பினை மேற்கொள்ளத் தயாராய் இருக்கும். எனவே இதற்கு ஸ்மார்ட் போன் தான் சிறந்தது.
6.சமுதாயத் தளங்கள் தொடர்பு: சோஷியல் நெட்வொர்க் என்னும் இணையத் தொடர்புகளை மேற்கொள்வது, தற்போது பெரும்பாலோரால் மேற்கொள்ளப்படும் தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. தங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டு, நிகழ்வுகளை அவ்வப்போது மேம்படுத்த, இந்த சமுதாய தளங்கள் உதவுகின்றன.
இந்த வகையில் ட்விட்டர், பேஸ்புக், லிங்க்டு இன் மற்றும் போர் ஸ்குயர் போன்ற தளங்கள் இயங்குகின்றன. இதற்கு மிகவும் உதவுவதும் பயன்படுவதும் ஸ்மார்ட் போன்களாகும். லேப்டாப் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விரைவாக விரித்து இயக்குவதில் இதில் பின்வாங்குகின்றன. ஆனால் போட்டோக்களை அனுப்ப, அவற்றை எடிட் செய்திட, ரியல் டைம் சேட் செய்திட, ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும் நெட்புக் கம்ப்யூட்டர்களே கை கொடுக்கின்றன.
எனவே இந்த தேவைகளுக்கும் நெட்புக் கம்ப்யூட்டர்களே நமக்குச் சிறந்த சாதனமாக உள்ளன.
மேலே கூறப்பட்ட தேவைகள் அனைத்துமே பலருக்கு இருக்கலாம். எந்த வகை தேவைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கணக்கிட்டு அதற்கான சாதனத்தை வாங்குவதே சிறந்தது.
0 comments :
Post a Comment