இந்தியா முழுவதிலும் ஆற்றில் மணல் சுரண்டப்படுகிறது. மலைகள் உடைக்கப்படுகின்றன. சுரங்கங்கள் வெட்டி, கனிமங்கள் எடுக்கப்படுகின்றன.
விடுதலை பெற்ற இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய கனிமச் சுரண்டல்கள் மிகப் பெருமளவில் நடக்கத்தொடங்கி, சுற்றுச்சூழல் பாதிப்பு மோசமடைந்ததால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அறிவியல் அறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்திய பின்னர் இப்போதுதான் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்காற்றுச் சட்டம் 1957-ல் சில புதிய நிபந்தனைகளைப் புகுத்தும்படி மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்.
அமைச்சகம் கூறியுள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், அவர்கள் இன்னும்கூட இதைத் தீவிரமானதாக எண்ணவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரலை ஓய்ப்பதற்காக எடுக்கப்படும் கண்துடைப்பு நடவடிக்கையோ என்றுகூடத் தோன்றுகிறது.
எது சாதாரணமான கனிமங்கள், எவை முக்கியமான கனிமங்கள் என்று பாகுபடுத்துவதை, அவற்றின் பொருளாதார மதிப்பை வைத்துத் தீர்மானிக்க வேண்டும் என்பது, இப்போது மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்படும் முக்கிய நிபந்தனை.
தற்போதைய நிலவரப்படி, ஆற்றுமணல், சுண்ணாம்புக் கற்கள் வெறும் கற்கள் போன்றவை சாதாரணமான, முக்கியமல்லாத கனிமங்கள் பட்டியலில் உள்ளன. இதுநாள்வரை இவற்றை ஏலம் விடுவதில் எத்தகைய கட்டுப்பாடும் இருக்கவில்லை. அதனால், மாநிலங்கள் அனைத்திலும், தமிழகம் உள்பட, எத்தகைய மோசமான விளைவுகள் நடந்தன, நடந்துகொண்டிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
தமிழ்நாட்டில் உள்ள எந்த ஆற்றுப்படுகையை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் மணல் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மிக மோசமான மண் சுரண்டல் நடந்து முடிந்துவிட்டது. இப்போது புதிய விதிமுறைகள் மூலம் இந்த மணல் அதன் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏலம் விடப்படவேண்டும் என்கிற புதிய நிபந்தனையால் என்ன பயன் விளையப் போகிறது?
மிகக் குறைந்த கட்டணத்துக்கு ஆற்றுமணல், பாறைகள், சுண்ணாம்புக் கற்கள் போன்றவற்றை அள்ளவும் வெட்டவும் நம் அரசியல்வாதிகளின் பினாமிகளுக்கு அனுமதி வழங்கி அவர்களும் முடிந்தமட்டும் சுரண்டிவிட்டார்கள். இப்போது இந்த விதிமுறைகள் அவர்களை எப்படித் தடுத்துவிடப்போகிறது.
ஆற்று மணல் அள்ளும்போது 3 மீட்டர் ஆழத்துக்குமேல் போகக்கூடாது என்றும், பாலங்கள் அருகில் மணல் அள்ளும் பணி நடக்கக்கூடாது என்றும் புதிய விதிமுறை கூறுகிறது. 3 மீட்டர் ஆழத்துக்குமேல் ஆற்றுமணல் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனை தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் இருக்கிறது. ஆனாலும்கூட, ஒரு லாரியே மறையும் அளவுக்கு பள்ளம் தோண்டி மணலை அள்ளிச் செல்லும் படங்களை பத்திரிகைகள் வெளியிட்டதுதான் மிச்சம். ஆனால் இந்த முறைகேடுகள் தடுக்கப்படவே இல்லை என்பதுதான் உண்மை.
தமிழ்நாட்டில் ஆறுகளின் குறுக்காக கட்டப்பட்டுள்ள பாலங்கள் அருகில் மிக மோசமான மணல் கொள்ளை நடந்துள்ளதால், இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பாலங்கள் பலம் குறைந்துபோய், விழும் அல்லது சரியும் என்கிற கசப்பான உண்மைதான் நாம் நடைமுறையில் காண்பதாக இருக்கிறது. மணலும் போய், பாலமும் போய், ஆற்றுப்படுகை கட்டாந்தரையானதால் நிலத்தடி நீரும் போய் எல்லாவற்றையும் இழந்துவிட்ட நிலையில் இப்போது புதிய நிபந்தனைகளை அறிவிக்கிறார்கள்.
இந்தப் புதிய நிபந்தனைகளில்கூட ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதைக் காணலாம். எந்தவொரு சாதாரண கனிம ஏலங்கள் எதுவென்றாலும், குறைந்தபட்சம் 5 ஹெக்டேருக்குக் குறையாமலும், 5 ஆண்டுகளுக்குக் குறையாத கால அளவிலும் அமைய வேண்டும் என்கிறது புதிய நிபந்தனை. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் என்பது, சுரண்டல்பேர்வழிகளுக்கு மிகமிக பெரிய அவகாசத்தை அரசே வழங்குவதற்கு ஒப்பானது.
ஒரு மாநில அரசு பதவியேற்றதும் பழைய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, 5 ஆண்டுகளுக்கு (அடுத்த தேர்தல்வரை) தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களை விருப்பம்போல அள்ளியும் வெட்டியும் செல்ல அனுமதிக்கத்தான் இந்த கால அளவு உதவுமே தவிர, வேறு எதற்கும் இல்லை.
சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுக்க சிமென்ட் ஆலைகள் அரசுக்குத் தரும் பணத்தையும், அவர்கள் அதனை சிமென்டாக மாற்றி விற்கும்போது ஏற்படும் விலைமாற்றத்தையும் ஒப்பிட்டால் பல நூறு மடங்கு இடைவெளி இருப்பதைக் காண முடியும்.
அரசுக்குப் பெரும் இழப்பும், இயற்கைக்குப் பெரும் பாதகமும் நடந்து முடிந்தபிறகு, எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள், இப்போதாவது விழிப்படைந்தார்களே என்கிற பெருமூச்சு வரவழைக்கிறதே தவிர, நம்பிக்கை தருவதாக இல்லை.
சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்படும் பல சட்டங்கள் கண்துடைப்புச் சட்டங்களாக இருக்கின்றனவே தவிர, பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் உள்ளார்ந்த நோக்குடன் நிறைவேற்றப்படுவதாகத் தெரியவில்லை. சட்டத்தில் காணப்படும் ஓட்டைகளை அடைப்பதற்குப் பதிலாக, ஓட்டைகள் நிறைந்த சட்டங்களை நிறைவேற்றி பாலுக்குக் காவலாகவும் பூனைக்குத் தோழனாகவும் இருக்க விரும்பும் நிர்வாகத்தைத்தான் நாம் தொடர்ந்து சகித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்.
காடுகளை அழிக்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. வனப்பாதுகாப்புக்காக ஒரு துறையே இயங்குகிறது. ஆனால், காடுகளை அழித்துக் கனிமங்களைத் தோண்டி எடுத்து ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியும் வழங்கப்படுகிறது. இரண்டுக்குமே சட்டங்கள் இருக்கின்றன. நாயைச் சுடுவதானால்கூடக் காரணம் கண்டுபிடித்துச் சட்டப்படிதான் சுடுவோம் என்று எக்காளமிட்டார்கள் ஆங்கிலேயக் கும்பினியார்.
கொள்ளையடிப்பதற்குக்கூட சட்டத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்ளும் சாமர்த்தியசாலிகள் சுதந்திர இந்திய அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும்.
குதிரைகள் ஓடிப்போனபின் லாயத்தைப் பூட்டிய கதையாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் இப்போது திடீரென்று விழித்துக் கொண்டிருக்கிறதே, இதன் பின்னணிதான் என்ன? யாரைப் பாதுகாக்க இப்படி ஒரு திடீர் யோசனை?
1 comments :
செவிடன் காதில சங்குதுன கதைதான்...நல்ல பதிவு
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு என் பதிவு தமிளிஷ்யில் வெளியாகி உள்ளது. எனக்கும் ஒரு ஓட்டு போடுங்க...
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html
Post a Comment