“ராமாயணம்” விஞ்ஞான யுகத்தில் நடப்பது மாதிரியான கதை...
கட்டப் பஞ்சாயத்துக்கள் நடத்தி ஊரையே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் விக்ரம். ஒரே தங்கை பிரியாமணி உயர் சாதி இளைஞனை காதலிக்கிறார். இரு குடும்ப சம்மதத்துடன் திருமணம் நடக்கையில் மண மேடையில் அசம்பாவிதம். என் கவுண்டர் போலீஸ் சூப்பிரண்டு பிருதிவிராஜ் மண்டபத்தில் புகுந்து விக்ரமை சுடுகிறார். பிரியாமணியை போலீசார் இழுத்து சென்று கற்பழிக்கின்றனர். அவமானத்தில் அவர் தற்கொலை செய்கிறார்.
பழிதீர்க்க பிருதிவிராஜ் மனைவி ஐஸ்வர்ராயை விக்ரம் கடத்தி காட்டுக்குள் வைக்கிறார். அவரை மீட்க போலீஸ் படையுடன் பிருதிவிராஜ் காட்டில் நுழைகிறார். அங்கு இருவருக்கும் நடக்கும் யுத்தமும் ஐஸ்வர்யாராய் மீட்கப்பட்டாரா என்பதும் கிளைமாக்ஸ்.
முரட்டுத்தனமாக இருவருக்குள் நடக்கும் மோதலில் கவித்துவமான காதலை வைத்து இதயங்களை கனக்க செய்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
போலீசாரை விக்ரம் உயிரோடு எரித்து கொல்வது போல் எதிர்பார்ப்போடு கதை ஆரம்பிக்கிறது. படகில் செல்லும் ஐஸ்வர்யாராயை கடத்தியதும் சூடு பிடிக்கிறது. பிறகு போலீஸ் சேசிங் சண்டை என நீள்கிறது.
கட்டுமஸ்தான முரடனுக்குள் விக்ரம் வாழ்கிறார். டப டப வென்ற கூச்சலுடன் மண்டையில் அடித்து எதிரிகளை ஆவேசமாக துவம்சம் செய்கையிலும் ஐஸ்வர்யாராயை கை கால்கள் கட்டி இம்சிப்பதிலும் அசல் ராவணனாகவே தெரிகிறார். ஐஸ்வர்யாராயை சுட்டுக் கொல்ல துணிவது திக்.
ஐஸ் அழகில் கிறங்குவது அவரை தொடாமலேயே ரசிப்பது அழுத்தமானவை. காட்டில் என்னுடனேயே இருந்து விடுகிறாயா என கேட்கும் ஏக்கமும் பிருதிவிராஜ் மேல் காட்டும் பொறாமையும் நடிப்பில் உச்சம் தொடுபவை...
சந்தேகித்த கணவனை உதறி விட்டு ஐஸ்வர்யாராய் காட்டுக்குள் திரும்பி வந்ததை பார்த்து உருகுவதில் உயிரைத் தொடுகிறார். அப்போது இருவருக்கும் நடக்கும் வசன உரையாடல் ஜீவன். தொங்கு பாலத்தில் பிருதிவிராஜுடன் மோதும் சண்டை காட்சி சீட் நுணிக்கு இழுக்கிறது.
ஐஸ்வர்யாராய், அழகிலும் விக்ரமுடன் போட்டி போடும் நடிப்பிலும் ஜொலிக்கிறார். மழையில் சகதி காட்டில் எதிரிகளிடம் சிக்கி ஜீவமரண போராட்டம் நடத்துகிறார். குழிகள், குகைகள் சறுக்கு பாறைகளில் ஏறி இறங்கி நிறைய மெனக்கட்டுள்ளார். கணவன் சந்தேகத்தில் உடைவதும் விக்ரமுக்குள் ராமன் இருப்பதை உணர்ந்து காப்பாற்ற துடிப்பதும் வலுவானவை..
பிருதிவிராஜ் மிடுக்கான வில்லன் போலீஸ். விக்ரம் அண்ணனாக பிரபு, தங்கையாக பிரியாமணி, தம்பியாக முன்னா வலுவான கேரக்டர்கள். வன ஊழியராக வரும் கார்த்திக் கலகலப்பு.... ராசாத்தி என்ற அரவாணியாக வையாபுரி வருகிறார்.
ஏ.ஆர். ரகுமான் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் நீர் வீழ்ச்சி, பசுமைகளை அள்ளி கண்களில்அப்பும் சந்தோஷ் சிவன், மணிகண்டன் ஒளிப்பதிவும் தூக்கி நிறுத்துகின்றன.
விக்ரமின் கட்ட பஞ்சாயத்துகளும் அங்கு வசிக்கும் மக்களும் வட இந்திய சாயலில் தமிழுக்கு அன்னியப்படுகின்றனர். ஆரம்ப சீன்கள் பிரமாண்டத்துக்குள் மெதுவாய் நகர்கிறது. ஆனாலும் இடைவேளைக்கு பிறகு வரும் விறு விறுப்பும் முத்திரை பதிக்கும் கிளைமாக்சும் குறைகளை மறக்கடிக்க செய்கின்றன.
மணிரத்னம் கட்டிய வலுவான ராவண ராஜ்ஜியம்.
2 comments :
hayyo hayyo. gud vimarsanam.thnks
regards
ram
www.hayyram.blogspot.com
Movie super. A R Music very very super pa!!
Post a Comment