சிகரெட் மற்றும் புகையிலைப் பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களை அதிலிருந்து மீட்க, புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கான நடவடிக்கைகளை டில்லி அரசு துவக்கியுள்ளது.புகையிலை மற்றும் சிகரெட் பழக்கங்களால் புற்றுநோய் வருகிறது.
இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடப் பல்வேறு வழிமுறைகள் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக, "பயோ ரிசனன்ஸ்' இயந்திரங்கள் மூலம் இந்தப் பழக்கத்தை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதில் உலகளாவிய நிலையில் சில சர்ச்சைகள் இருக்கின்றன. இருப்பினும், இந்த இயந்திரத்தைப் பரிசோதித்தபின், டில்லி மாநில புற்றுநோய் மையத்தில் (டி.எஸ்.சி.ஐ.,) நிறுவுவது குறித்து அம்மாநில அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இந்த இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கத்தை, முதல்வர் ஷீலா தீட்சித் முன்னிலையில் ஜெர்மன் நிறுவனத்தார் செய்து காட்டினர். அதன்படி, பாதிக்கப்பட்டவர் இரண்டு நாட்கள் மட்டுமே இதில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதுமானது.
ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த இயந்திரத்தில் நோயாளி உட்கார வைக்கப்பட்டு, 40 நிமிடங்களுக்கு அவர் உடல் மீது மின்சாரம் விட்டு விட்டு செலுத்தப்படும்.
இதுகுறித்து, மாநில நலவாழ்வு அமைச்சர் கிரண் வாலியா கூறுகையில், "ஐ.சி.எம்.ஆர்., மற்றும் எய்ம்ஸ் ஆகிய இரு மருத்துவமனைகளிலும் இந்த இயந்திரம் பரிசோதிக்கப்படும். இருப்பினும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தபின்தான், புற்றுநோய் மையத்தில் நிறுவுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்' என்றார்.
0 comments :
Post a Comment