ஆப்பிள் நிறுவனம் தன் ஐபேட் வரிசையில் புதிய சாதனங்களைச் சென்ற வாரம் அறிமுகப்படுத்தியது. இவை iPad Air 2 மற்றும் iPad mini 3 எனப் பெயரிட்டு கிடைக்கின்றன.
தன் ஐபோன்களின் திரையில் பெரிய அளவில் மாற்றங்களை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம், ஐபேட் சாதனங்களின் வடிவமைப்பில் சொல்லப்படும் வகையில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
இவற்றின் அறிமுக விழா கூட மிக அமைதியாகவே, அதிக விளம்பரம் இன்றி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இவற்றின் செயல் திறனில், பெரிய அளவில் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
ஐபேட் ஏர் 2:
ஏற்கனவே வெளியான iPad Air இடத்தில் இது வெளியாகியுள்ளது. வழக்கம் போல சில்வர் பூச்சிலான வெள்ளை மற்றும் கிரே கலந்த கருப்பு வண்ணங்களில் இது கிடைக்கிறது.
இவற்றுடன், ஐபோன் போல, தங்க நிறத்திலும் இது வெளி வருகிறது. இந்த மாடல், 16, 64 மற்றும் 128 ஜி.பி. கொள்ளளவுகளில் கிடைக்கிறது. ஆப்பிள் நிறுவனம் 32 ஜி.பி. மாடல் ஐபேடினை தவிர்த்துவிட்டது.
அந்த அளவில் வெளியிட்டால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதனை மட்டுமே வாங்கிட விரும்புவார்கள் என்று கருதி, ஆப்பிள் இதனைத் தவிர்த்துவிட்டது.
வை- பி இணைப்பு மட்டும் கொண்டதன் விலை 499 டாலர் முதல் 699 டாலர் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வை பி மற்றும் எல்.டி.இ. இணைப்பு கொண்ட மாடல் விலை 629 முதல் 829 டாலராக குறிக்கப்பட்டுள்ளது. இனி இவற்றின் தொழில் நுட்ப சிறப்புகளைக் காணலாம்.
1. டச் ஐ.டி.( Touch ID): ஐபோன் 5 எஸ், ஐபோன் 6 மற்றும் ப்ளஸ் மொபைல் போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள, தொடு உணர் அடையாள அனுமதி, இந்த ஐபேட்களில் தரப்பட்டுள்ளது. முந்தைய ஐபேட்களில் இல்லாத இந்த வசதி, நிச்சயம் புதிய மாடலை உயர்ந்ததாகக் காட்டும்.
2. ப்ராசசர்: இதில் A8X processor with M8 motion coprocessor இணைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஐபேட் ஏர் சாதனத்தில் இருந்ததனைக் காட்டிலும் திறன் கூடியதாகும்.
3. டிஸ்பிளே: இரண்டு சாதனங்களிலும், காட்சித் திரை 2048 x 1536 பிக்ஸெல்களுடன் 9.7 அங்குல அளவில் அமைந்துள்ளன. ஆனால், தற்போது முழுமையாக லேமினேட் செய்யப்பட்டு, ஒளி பிரதிபலிக்காத பூச்சும் தரப்பட்டுள்ளது. இதனால், ஓரளவிற்கு நேரடி வெளிச்சம் உள்ள இடங்களிலும் சிரமம் இல்லாமல் திரைக் காட்சியைக் காணலாம்.
4. அளவு/எடை: ஐபேட் ஏர் சாதனத்தின் அமைப்பு, முந்தையதைப் போலவே 9.4 x 6.6 அங்குல அளவில் உள்ளது. ஆனால், இதன் தடிமன் 0.05 அங்குலம் குறைவாக, 0.24 அங்குல அளவில் உள்ளது. எடையும் ஓரளவிற்குக் குறைவாக உள்ளது.
5. கேமரா: குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் மேம்பாடும் மாற்றமும் கொண்டதாக இதன் கேமரா உள்ளது. ஐபேட் ஏர் 2 சாதனத்தில், ஐபோன் 6ல் உள்ள அதே 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது.
இதற்கு முன், இதன் முன்னோடி ஐபேடில், 5 மெகா பிக்ஸெல் கேமரா இடம் பெற்றது. புதிய கேமரா, Burst mode மற்றும் slow motion வசதிகளைக் கொண்டுள்ளது. முன்புறமாகத் தரப்பட்டுள்ள கேமராவில் எந்தவித மாற்றமும் இல்லை. குறிப்பிட்டுச் சொல்லும் வசதிகளும் இல்லை.
6. சென்சார்: முந்தைய ஐபேட்களில் தரப்பட்ட Three-axis gyro, accelerometer மற்றும் ambient light sensor ஆகியவற்றுடன், பாரோமீட்டர் மற்றும் டச் ஐ.டி. வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
மற்றவை எதுவும், பேட்டரி உட்பட, மாற்றத்திற்கு உள்ளாகவில்லை.
ஐபேட் மினி 3:
ரெடினா டிஸ்பிளே கொண்ட ஐபேட் மினி மற்றும் ஐபேட் மினி என இரண்டு பெயர்களில், முன்பு ஐபேட் மினி தரப்பட்டது. இப்போது ஐபேட் மினி 3 அறிமுகமாகியுள்ளது. ரெடினா டிஸ்பிளேயுடன் கூடிய ஐபேட், இப்போது ஐபேட் 2 என அழைக்கப்படுகிறது. புதிய ஐபேட் மினி 3யுடன், பழைய இரு சாதனங்களும் விலை குறைக்கப்பட்டு விற்பனையாகின்றன.
ஐபேட் மினி 3ல் புதியதாகச் சொல்லத்தக்க மாற்றங்கள் எதுவுமில்லை. தங்க வண்ணத்தில் புதிய மாடல் ஒன்று கிடைக்கிறது. மற்றும் டச் ஐ.டி. இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முந்தைய ஐபேட் சாதனங்கள் போல, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களிலும் இது கிடைக்கிறது. ஐபேட் ஏர் 2 போல, 16,64 மற்றும் 128 ஜி.பி. அளவுகளில் ஐபேட் மினி 3 கிடைக்கிறது.
விலை: ஐபேட் மினி 3 விலை 399 முதல் 599 டாலர் என்ற அளவில், மாடல்களுக்கேற்ற வகையில் விலையிடப்பட்டுள்ளது. வை பி / எல்.இ.டி. வசதிகள் கொண்ட ஐபேட் மினி ஏர் 3 529 முதல் 729 டாலர் விலையில் உள்ளது. ஆனால், முந்தைய ஐபேட் மினி 2, 32 ஜி.பி. திறன் கொண்டது 349 டாலர் என விலையிடப்பட்டுள்ளது, வாடிக்கையாளர்களுக்கு லாபமே.
0 comments :
Post a Comment