கம்ப்யூட்டர் இயக்கம் "டிவி'யில் காண

டிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது.

இவர்களின் சந்தேகம் அனைத்தும் எவ்வகை கம்ப்யூட்டர், எந்த வகை டிவிக்களுடன் இணைக்கலாம் என்பதில் தொடங்கி, அதற்கான கேபிள்கள் எப்படி பெறலாம் என்பதுதான். அவற்றைச் சற்று விரிவாக இங்கு காணலாம்.

கம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பழைய வகை சி.ஆர்.டி. ட்யூப் கொண்ட டிவிக்களுடன் இணைக்கலாம். இந்த டிவிக்களில் இவற்றை இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக்க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம்.


1.எச்.டி.எம்.ஐ. (HDMI):

புதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.


2. டி.வி.ஐ. (DVI):

இதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட்டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.


3. வி.ஜி.ஏ. (VGA):

இப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்களிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.


4. எஸ்-வீடியோ (Svideo):

இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர் களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும்.

ஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை. டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன.

இவ்வாறு இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூசனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes