சிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி?

நீங்கள் அடிக்கடி சிடி பயன் படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம், உங்கள் சிடி கம்ப்யூட்டரின் சிடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.

எத்தனை முறை சிடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.


முதலில் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கலவரப் படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சிடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டாப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும். இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சிடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும்.

சிக்கிக் கொண்ட சிடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும். இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள்.

உங்கள் சிடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சிடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சிடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது.

இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது. இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.

உடனே சிடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சிடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள். இதற்கும் திறக்கவில்லை என்றால் அடுத்த வழிக்குச் செல்வோம்.

வழி 3: உங்கள் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுங்கள். மின்சாரம் வரும் வயர்களை கம்ப்யூட்டர் சிபியுவில் இருந்து நீக்கிவிடுங்கள். இல்லை என்றால் இந்த வழியில் உங்கள் கம்ப்யூட்டர் சிபியு மற்றும் உங்களையே நீங்கள் காயப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். ஷட் டவுண் செய்து மின் இணைப்பை எடுத்துவிட்டீர்களா!

இனி தட்டையாக உள்ள ஒரு ஸ்குரூ டிரைவரை எடுங்கள். சிடி டிரைவின் கதவின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீள இடைவெளியில் மெதுவாக அதனை வைத்து கொஞ்சம் மிகக் கொஞ்சம் தள்ளவும். ஸ்குரூ டிரைவரின் தட்டை முனையின் பகுதி சிறிய அளவில் உள்ளே சென்று விட்டால் அப்படியே டிரைவின் கதவை இழுக்கவும்.

டிரைவ் முழுவதும் பிளாஸ்டிக்கால் ஆன சிறிய சக்கரங்கள் மற்றும் கியர்கள் இயங்குவதால் நீங்கள் இழுப்பது தானாக வர வேண்டும். பலத்தை உபயோகிக்கக் கூடாது. மின்சக்தி மூலம் இயங்குவதை நீங்கள் இப்போது பலத்தை உபயோகித்து செயல்படுத்துகிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இனி மெதுவாக இழுத்தால் டிரைவ் கதவு திறக்கப்படும்.

சிடியை எடுத்துவிட்டு டிரைவை ஒரு சோதனைப் பார்வை பார்க்கவும். நிச்சயம் அதில் ஏகப்பட்ட தூசு, ஏன் சிறிய முடி கூட இருக்கலாம். இதனை எல்லாம் ஒரு சிறிய மெல்லிதான் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்துங்கள். போகாத பிடிவாத அழுக்கு என்றால் கொஞ்சம் ஈரம் கலந்த துணி கொண்டும் சுத்தப்படுத்தலாம்.

இனி மீண்டும் கம்ப்யூட்டருக்கு மின் சக்தி கொடுத்து இயக்குங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகி நிலைக்கு வந்தவுடன் சிடி டிரைவின் எஜக்ட் பட்டனை அழுத்தி கதவு திறந்து மூடுவதனை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
சரி, இந்த ஸ்குரூ டிரைவர் வைத்தியத்திற்கும் கதவு திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். என்ன செய்யலாம்? மின் இணைப்பைத் துண்டித்து சிபியு உள்ளாக டிரைவை இணைத்திருக்கும் கேபிள்களை நீக்கி பின் டிரைவ் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்குரூகளை எடுத்துவிட்டு டிரைவைத் தனியாக எடுத்து டிரைவின் கதவைத் திறக்கலாம்.

அல்லது டிரைவை மட்டும் தனியே எடுத்து இவற்றை ரிப்பேர் செய்திடும் இடத்திற்குக் கொண்டு சென்றால் அவர்கள் சரியான முறையில் சிடியை எடுத்துத் தருவார்கள். அதன்பின் புதிய டிரைவ் ஒன்றை வாங்கி இணைப்பது இது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்கும்.


2 comments :

aotspr at October 14, 2011 at 10:30 AM said...

நல்ல பயன்னுள்ள தகவல்!......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Unknown at October 14, 2011 at 6:26 PM said...

நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes