மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்துவிடுகிறது.
குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும்.
உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?
வழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது.
இந்த வழியைக் கண்டறிந்து சரி செய்த பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். விண்டோஸ் சேப் மோடில் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.
1. சேப் மோடில் autoexec.bat அல்லது config.sys பைல் இயக்கப்பட மாட்டாது.
2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்குத் துணை புரிபவை.
3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, சேப் மோடில் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.
4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில்testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.
5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sysஎன்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.
6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு (batch) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் (Virtual Device Drivers – VxDs) என்று அழைக்கப் படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.
7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registry செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் win.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.
8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது.
நாமும் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி சேப் மோடுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.
சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல், எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும்.
அதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும்.
இதே போல ஏதேனும் கேம்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம்.
ரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.
1 comments :
ரொம்ப நாளா எனக்கு இருந்த சந்தேகம்
நன்றி
Post a Comment