இதுவரை தயாரித்து வழங்கிய இணைய பிரவுசர் தொகுப்பு பதிப்புகளில், அதிகப் பேராவலுடன் மைக்ரோசாப்ட் ஈடுபட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 என்றால் அது மிகையாகாது. பிரவுசர் சந்தையில் எப்படியும் தன் இடத்தை விட்டுவிடக் கூடாது என்ற முயற்சியில் அனைத்து பிரிவுகளிலும் உயர்ந்த இலக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரவுசராக, இது உள்ளது.
இதன் சோதனைத் தொகுப்பினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திய அனைவரும் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமைந்த இதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை இங்கு காணலாம். இந்த பிரவுசர் தொகுப்புடன், பிரவுசரை, பிரவுசராகத் தராமல் அதற்கும் மேலாக ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக மைக்ரோசாப்ட் வடிவமைத் துள்ளது.
இப்போது கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையோர், இணையத்திலேயே இயங்கு கின்றனர். அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் இணையத்திலேயே பெறப்பட்டு பயன்படுத்தப்படும் முழுமையான காலம் வெகு தூரத்தில் இல்லை.
இந்நிலையில் இணையப் பக்கங்களை, ஒரு பிரவுசர் மட்டுமே தர முடியும் என்று எண்ணுவது பொருத்தமில்லை என்று மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. மேலும் ஒரு பிரவுசரில், தேவைப்படும் அப்ளிகேஷன் களையும் பதித்து வழங்க முடியும் என்ற நிலையும் இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய பிரவுசர் பதிப்பில், திறன் கூடிய ஹார்ட்வேர் மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் செயல்பாடு உதவியுடன், பிரவுசரின் இயங்கு திறன் வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய இணையப் பக்கங்களின் வரையறைகள் அனைத்தும் இதில் மேற்கொள்ளப்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
புதிய இன்டர்பேஸ்:
இந்த பிரவுசரின் புதிய முகப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பிரவுசரின் முகம் மறைக்கப்பட்டு, பார்க்கப்படும் இணையப் பக்கம் முழுமையாகத் தெரிகிறது. டைட்டில் பாரில் லோகோ மற்றும் பெயர் இல்லை. தரப்படும் இணையப் பக்கத்தைச் சுற்றி ஒரு கட்டமாகத்தான் இது தரப்பட்டுள்ளது. தேவையில்லாத அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
லோகோ, டூல்பார், மெனு, பட்டன் என எதுவும் காட்டப்படவில்லை. வலது மேல் பக்கத்தில் சர்ச் பாக்ஸ் எதுவும் காட்ட்டப்படவில்லை.கமாண்ட் பார் மற்றும் பேவரிட் பார் மறைத்து வைக்கப் பட்டுள்ளன. கீழாக ஸ்டேட்டஸ் பார் இல்லை. ரெப்ரெஷ் மற்றும் ஸ்டாப் பட்டன்கள் வண்ணத்தில் இருப்பதற்குப் பதிலாக, கிரே கலரில் உள்ளன.
வலது மேல் பக்கத்தில் மூன்று பட்டன்கள் கிரே கலரில் தரப்பட்டுள்ளன. இவற்றை இயக்குவதன் மூலம், ஹோம் பேஜ், பேவரிட்ஸ் மற்றும் டூல்ஸ் மெனுக்களைப் பெறலாம். இவற்றின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், இவை வண்ணம் பெறுகின்றன. திறக்கப்பட்டுள்ள இணையப் பக்கங்களுக்கான டேப்கள், மிகவும் சிறியதாகவும், அதே நேரத்தில் மிகவும் தெளிவாகவும் துல்லிதமாகவும் இருக்கின்றன.
இவை அட்ரஸ் பாருக்கு வலது புறத்தில் அமைக்கப்படுகின்றன. முன்பு இருந்த அனைத்தும் மறைக்கப்பட்டு அல்லது சிறியதாக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், முந்தைய பிரவுசர்களில் இருந்த பட்டன்களில், இடது மேலாக கருநீல வண்ணத்தில் இருந்த பட்டன் தான் சற்று சிறிதாகக் காட்டப்படுகிறது. இன்னும் சில அம்சங்களைக் கூறுவது இங்கு நல்லது.
இந்த பிரவுசரில் எச்சரிக்கை மற்றும் பிற டயலாக் பாக்ஸ்கள் கிடைப்பதே இல்லை. இவற்றிற்குப் பதிலாக, இந்த செய்திகள் எல்லாம், விண்டோவின் கீழாக உள்ள, நீள பாரில் காட்டப்படுகின்றன. இடோரா இமெயில் கிளையண்ட் பயன்படுத்துபவர்கள் இதே போல பெற்றிருப்பார்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இவை நம் வேலைக்குக் குறுக்கிடும் டயலாக் பாக்ஸ்களாகக் கிடைக்கும்.
இன்னொரு சிறப்பு அம்சம், தேவைப்படாத டேப்களை இழுத்து ஒரு ஓரத்தில் வைத்திடும் வசதி ஆகும். இதில் கூகுள் குரோம் பிரவுசரில் உள்ளது போல, அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பாக்ஸ் இணைக்கப்பட்டு தரப்படுகிறது. மைக்ரோசாப்ட், இதனை பிரைவேட் ஒன் பாக்ஸ் என அழைக்கிறது.
மிக மிக என்னைக் கவர்ந்த ஒரு சிறப்பம்சம், இதன் குறித்து எடுத்துவைத்துக் கொள்ளும் ஷார்ட் கட்களாகும் (Pinned Shortcuts). இதன் மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த ஓர் இணைய தளத்தினை ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் போல வைத்து இயக்கலாம்.
இதற்கான டேப்பினை இழுத்து டாஸ்க் பாரில் போட்டு வைத்து, தேவைப்படும்போது புரோகிராம் இயக்குவது போல, கிளிக் செய்து இயக்கலாம். இது புரோகிராம் ஒன்றின் ஷார்ட் கட் போலவே அமைக்கப்படுகிறது. இதனை பேவரிட் ஐகான் என்ற பாணியில் “Favicon” என்று அழைக்கலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் தரப்பட்டிருந்த பல பாதுகாப்பு கூறுகள் இதில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அத்துடன் முக்கியமாக ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். இந்த பிரவுசர் மிக மிக வேகமாக இயங்குகிறது. இணையப் பக்கங்கள் படு வேகமாக எடுத்துத் தரப்படுகின்றன.
இவற்றின் ஊடே செல்வதும் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இதனை வேறு பிரவுசருடன் ஒப்பிட்டெல்லாம் பார்க்க முடியவில்லை. அவ்வளவு வேகமாக உள்ளது. இரண்டு பிரவுசருக்கிடையேயான வேறுபாடெல்லாம், ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்காகத்தான் உள்ளது. இந்த பிரவுசர், விண்டோஸ் 7 தொகுப்பில் நன்றாக இயங்குகிறது.
விண்டோஸ் விஸ்டாவுடன் அதன் சர்வீஸ் பேக் 2 பதியப்பட்டிருந்தால், அதிலும் இதனைப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்தவே முடியாது. அதற்கு மைக்ரோசாப்ட் பல காரணங்களைச் சொல்லி உள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐப் பயன்படுத்துபவர்களிடம் பிரவுசர் குறித்த கருத்துக் களைக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் தான், பதிப்பு 9 உருவாக்கப்பட்டது. பல லட்சக்கணக்கான கருத்துரைகள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் மிகச் சிறப்பானவை என்று எண்ணிக் கொண்டிருக்கும் சில வசதிகளை, மொத்தத்தில் 1.5% பேர் தான் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது போன்ற பல தகவல்கள் இந்த கணிப்புக் கருத்துரைகள் மூலம் தெரியவருகிறது.
எடுத்துக்காட்டாக, பேவரிட்ஸ் பட்டியலை, தற்போது இந்த பிரவுசர் பயன்படுத்தும் 18% பேர்தான் விரும்புகிறார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நூற்றில் ஒருவர் கூட இந்த புக்மார்க் பட்டியலில் போல்டரை உருவாக்கியதில்லை என்ற செய்தியும் கிடைத்துள்ளது. (என்ன நீங்களும் உருவாக்கவில்லையா!) இதனால் பேவரிட்ஸ் பார் மற்றும் கமாண்ட் பார், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9ல் மறைக்கப்பட்டுள்ளன.
பதிப்பு 8ல் தரப்பட்டுள்ள டேப் குரூப் இதிலும் உள்ளது. ஏதேனும் ஒரு லிங்க்கில் கண்ட்ரோல்+கிளிக் செய்திடுகையிலும் அல்லது ரைட் கிளிக் செய்து புதிய டேப்பில் திறக்கையிலும், முதன்மைத் தளத்தின் டேப்பும், புதிய லிங்க்கின் டேப்பும் ஒரே வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன. இது இன்னும் சோதனைத் தொகுப்பு தான்.
மேலே கூறப்பட்ட அம்சங்கள் இன்னும் மேம்படுத்தப்பட்டு இறுதித் தொகுப்பில் கிடைக்கலாம். இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி : : http://windows.microsoft.com/enUS/internetexplorer/download/ie9/worldwide . இதில் 29 மொழிகளுக்கான பதிப்புகள் கிடைக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு.
0 comments :
Post a Comment