15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

சென்ற ஆகஸ்ட் 16ல் தன் பதினைந்தாவது பிறந்த நாளை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொண்டா டியுள்ளது. நிறுவனங்கள் பயன்பாடு, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படுவது போன்ற பல கூறுகளால், இன்னும் தன் முதல் இடத்தைப் பிரவுசர் சந்தையில் தக்கவைத்துள்ள இந்த பிரவுசர், இதற்கென தொடர்ந்து மேற்கொண்டு வரும் போராட்டம் கவனிக்கத்தக்கதாகும்.

2001 ஆம் ஆண்டில் விண்டோஸ் எக்ஸ்பி அறிமுகப்படுத்தப்பட்ட போது, மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் குறித்த தன் நடவடிக்கை களில் சிறிது மந்த நிலையை மேற்கொண்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் பயர்பாக்ஸ் பிரவுசர் வெளியாகி, நல்லதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டது.

தொடர்ந்து கூகுளின் குரோம் பிரவுசரும் வெளியாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுக்குத் தரத் தொடங்கியது. இதனால் தன் 15 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த மாதத்தில், பிரவுசர் சந்தையின் முதல் ஹீரோவாக இருந்தாலும், சுற்றிலும் பல போட்டியாளர்களைச் சந்திக்கும் நிலையிலேயே இ.எ. பிரவுசர் உள்ளது. ஜூலை இறுதியில் இ.எ. பிடித்துள்ள இடம் 60%; பயர்பாக்ஸ் 23%, குரோம் 7% மற்றும் சபாரி 5%.

கூகுள் தன் பிரவுசரான குரோம் தொகுப்பின் தன்மையை வேறு எந்த பிரவுசரும் கொண்டிருக்கவில்லை என்று பெருமைப்படுகிறது. இணைய வழி சேவைகள் என்று பார்க்கையில் கூகுள் தான் மிக அதிகமாக சேவைகள் தருவதாகவும், அதனாலேயே இதன் பிரவுசர் தனித்தன்மை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் வெளியாகும்போது, இந்த உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனைச் சமாளிக்கும் வகையில் இ.எ. பிரவுசர் பதிப்பு 9 வெளியாக உள்ளது. தற்போதைய கம்ப்யூட்டர்களில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கும் கிராபிக்ஸ் பயன்பாட்டினை இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் இணைத்து, இதன் வலிமையை நிரூபிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில சோதனைப் பதிப்புகளையும் காட்டியுள்ளது.

இந்நிலையில் ஒரு கேள்வி நம் மனதில் எழுகிறது. எது முக்கியம்? ஆப்பரேட்டிங் சிஸ்டமா? பிரவுசரா? மைக்ரோசாப்ட் எப்போதும் ஒரு பிரவுசர், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டு வருகிறது. இங்கு தான் பிரச்னையே எழுகிறது. ஏன் மைக்ரோசாப்ட் இந்த நிலையை எடுக்கிறது என்று பார்க்கலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ல் வெளியானது. தன் விண்டோஸ் 95 தொகுப்பினை வெளியிட்டு ஒரு மாதம் கழித்து இந்த பிரவுசரை வெளியிட்டது. விண்டோஸ் 95 சிஸ்டத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத் தந்தது.

இணையத்தின் வலிமையை, திறனைத் தான் தெரிந்து கொண்ட தாகவும், அதனால் தன் அனைத்து சாதனங்களிலும், இணையப் பயன்பாட்டினை இணைக்க இருப்ப தாகவும் அறிவித்தது. அப்போது பிரவுசர் உலகில் கொடி கட்டிப் பறந்த நெட்ஸ்கேப் பிரவுசரை, இன்டர்நெட் எக்ஸ்புளோரரால் உடனே வெளியே தள்ள முடியவில்லை. 1997 ஆண்டு, முதல் ஆறு மாதம் வரை இ.எ. பிரவுசர் 50% இடத்தை மட்டுமே கொண்டிருந்தது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 3, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு வெளியானபோதுதான், இ.எ. பிரவுசருக்கு நல்ல காலம் ஏற்பட்டது. உடனே இது போல இணைத்துத் தருவது, நிறுவனக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விடுவதாகும், எல்லை மீறிய செயல் என்று அப்போது ஐரோப்பிய கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. சென்ற ஆண்டு தான் இந்த வழக்கு முடிவு மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தண்டிக்கும் வகையில் வெளியானது.

ஐரோப்பிய நாடுகளில் மட்டும் தன் பிரவுசரைக் காட்டாமல் இருக்கப்போவதாக, மைக்ரோசாப்ட் அச்சுறுத்திப் பார்த்தது. இறுதியில் மற்ற பிரவுசர்களையும் வாடிக்கையாளர்கள் விரும்பினால், டவுண்லோட் செய்து பயன்படுத்த வழிகளைத் தருவதாக அறிவித்தது.

நெட்ஸ்கேப் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளி, இருக்கும் இடம் காணாமல் ஆக்கியபின், மைக்ரோசாப்ட் சற்று நிதான போக்கினைக் கடைப்பிடித்தது. அடுத்த புதிய வசதிகள், இ.எ. பதிப்பு 6ல் தான் தரப்பட்டது.

இந்த வேளையில் பயர்பாக்ஸ் டேப் பிரவுசிங் உட்பட பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இது போன்ற சில புதுமைகள் எதனையும் தராததால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சற்றுத்
தள்ளாடியது.

இதனால், தன் இ.எ. பிரவுசர் பதிப்பு 8 மற்றும் பதிப்பு 9ல், இன்டர்நெட் உலகம் எதிர்பார்க்கும் நவீன வசதிகளைத் தர முனைந்து செயல்பட்டது. தொடர்ந்து இந்த முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.

1995: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.0

விண்டோஸ் 95 வந்த பின் ஒரு மாதம் கழித்து “Internet Jumpstart Kit” என அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக வெளியாகவில்லை.

1995: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 2.0.

அந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. மேக் மற்றும் விண்டோஸ் ஆகிய இரு சிஸ்டங்களையும் இது சப்போர்ட் செய்தது.

1996: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 3.0.

1996 ஆகஸ்ட்டில் வெளியானது. இமெயில் சப்போர்ட் தரப்பட்டது. இமேஜ் பைல்கள் காட்டப்பட்டன. ஆடியோவும் இதிலேயே இயக்கப்பட்டது.

1997: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 4.0.

வாடிக்கையாளர்களுடன் தகவல் சேர்க்கும் வகையில், இன்ட்ராக்டிவ் இணைய தளங்கள் சப்போர்ட் செய்யப்பட்டன. மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 4.0. இமெயில் சேவையை வழங்கும் வகையில் வெளியானது.

1998: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 5.0.

தொழில் நுட்ப ரீதியாகச் சில திறன்கள் மேம்பாடடைந்தன.

2001: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6.0.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக வெளியானது. பல ஆண்டுகள் இதன் கூறுகளே, பிரவுசர் ஒன்றின் வரையறைக்கப்பட்ட கூறுகளாக இருந்து வந்தன.

2006: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0.

2006 அக்டோபர் மாதம் வெளியானது. விண்டோஸ் சர்வீஸ் பேக் 2 பயன்படுத்துபவர்களுக்கென உருவாக்கப்பட்டு கிடைத்தது. பின்னர் விஸ்டாவின் ஒரு பகுதியானது. டேப் பிரவுசிங் வசதி தரப்பட்டது.

2009: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8.0.

மார்ச், 2009ல் வெளியானது. தன் பிரவுசிங் இன் ஜினை, நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கியது மைக்ரோசாப்ட். இந்த பிரவுசரின் ஒரு பகுதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ஒரு பகுதியானது.

2011? இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9.0.

பெரிய அளவிலான அடுத்த அப்டேட் இதுவாகத்தான் இருக்கும். எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பத்திற்கான மேம்படுத்தப்பட்ட சப்போர்ட் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக இயங்கும் ஜாவா ஸ்கிரிப்ட் இன் ஜின் கிடைக்கும். கம்ப்யூட்டரின் கிராபிக்ஸ் சிப்பின் திறனைப் பெற்று, டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸ் திறனை மேம்படுத்திக் காட்டப்படும் வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes