பேஸ்புக் நிறுவனம் பன்னாட்டளவில், 18 நாடுகளில், இணைய இணைப்பினை இலவசமாகத் தருவதற்கென தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளது.
Internet.org என்ற பெயரில், ஒவ்வொரு நாட்டிலும், ஒரு மொபைல் சேவை நிறுவனத்துடன் இணைந்து, அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய இணைப்பில் முக்கியமான தளங்களுக்கான இணைப்பினைத் தருவதாக அறிவித்தது.
இந்தியாவில், இதற்கென ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த இலவச திட்டம், சென்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.
ஆனால், இது அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு என்ற அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்ற எதிர்ப்புக் குரல் பெரிய அளவில் எழுப்பப்பட்டது.
இதனை, Free Basics என்ற பெயரில் மாற்றம் செய்து சென்ற அக்டோபர் 19ல், பேஸ்புக் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம், இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்ற பெயரில் உள்ள இணையதளத்தினையும், அதே பெயரில் பேஸ்புக் தரும் அப்ளிகேஷனையும் பிரித்துக் காட்டுவதே ஆகும் எனவும் பேஸ்புக் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த திட்டம் இந்தியாவில் பலத்த எதிர்ப்பினை சந்தித்து வருகிறது. முதலில் இந்த திட்டத்தில் இணைந்த பல நிறுவனங்கள், அதிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு, தனியே அதே போன்ற திட்டங்களை அறிவித்தன.
பேஸ்புக், இந்த திட்டத்தின் வழியாக, எந்த அடிப்படையில் இலவசமாகத் தரும் இணையதளங்களை அறிவிக்கிறது என்ற கேள்வி அனைத்து மக்களிடமும் எழும்பியது.
மொபைல் சேவை நிறுவனங்களுடன், பேஸ்புக் சதி செய்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இது தீவிரமாகி, சென்ற மே மாதம், 70 குழுக்கள் இணைந்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள்.
அதில், இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டம், அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு என்ற கொள்கைக்கு எதிரானது என்று கூறி, பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்களையும் எழுப்பினார்கள்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில், தன் வலைமனை ஒன்றில் தன் விளக்கத்தினை 7 நிமிடங்கள் ஓடும் விடியோ காட்சி மூலம் (http://www.wired.com/2015/05/internetorgexpandsnetneutrality/) மார்க் அளித்தார். எந்த மொபைல் சேவை நிறுவனங்களையும் இந்த திட்டம் கட்டுப்படுத்தாது என்றும், அனைவருக்கும் அனைத்து தளங்களையும் இலவசமாக அளிப்பது நடைமுறையில் சிரமம் என்றும் கூறினார்.
எந்த வழியிலும் இணையத்தை அணுக இயலாத மக்களுக்கு, இந்த திட்டம், பொருளாதார ரீதியில் இயலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் பங்கு பெறாத ஓர் இணையம் எப்படி அனைவருக்கும் சமமான இணையமாக இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதே வேளையில், மக்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், பேஸ்புக் நிறுவன நிர்வாகிகள் சில புதிய வழிமுறைகளை அறிவித்தனர். இந்த திட்டத்தில் எந்த ஒரு நிறுவனத்தையும் விலக்கி வைக்கப்போவதில்லை எனத் தெரிவித்தனர்.
அதன் பின்னர், Free Basics திட்டத்தில் 60 புதிய சேவை வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பயனாளர்கள், இவற்றில் எந்த சேவைகள் தங்களுக்கு வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். இந்த சேவைகளில், வேலை வாய்ப்பு விளம்பரங்கள், உடல் நலம் பேணுதல், விக்கிபீடியா தளங்கள் போன்றவை உள்ளன.
இத்துடன், இணையத்தில் பாதுகாப்பும், தனிநபர் தகவல்களின் தனித்தன்மை காப்பற்றப்படுவதும் இருமுறை உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, இணைய இணைப்பின்போது, பாதுகாப்பான வழிமுறைகள் பல அடுக்குகளாக இயங்கும் என்று மார்க் உறுதி அளித்தார்.
“Free Basics” என்பது இணையத்திற்கு வழி நடத்தும் ஓர் அப்ளிகேஷனே தவிர, அது மட்டுமே இணையம் அல்ல என்று அறிவித்தார். இணைய இணைப்பு என்பது, அனைத்து மனிதர்களுக்குமான அடிப்படை உரிமை என்றும், அதனை உறுதிப்படுத்த பேஸ்புக் முயற்சி செய்கிறது என, அனைத்து நாடுகளின் ஆட்சியாளர்களிடமும் எடுத்துரைத்து வருகிறார். தன் அலுவலக வளாகத்திற்கு வரும்படி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment