மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் 10 சாதனங்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாய்த் தன் விண்டோஸ் 10 இயக்க முறைமையில் இயங்கும் சாதனங்களைச் சென்ற செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6ல், அறிமுகப்படுத்தியுள்ளது. 

முதன் முதலாகத் தான் வடிவமைத்த 'சர்பேஸ் புக்' (Surface Book) என்னும் மடிக் கணினியை வெளியிட்டது. மடிக்கணினிகளில் மிகச் சிறந்த உச்சத்தை இந்த மடிக்கணினி கொண்டுள்ளது. 

அதுதான் 'சர்பேஸ் புக்', என இதனை அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவர் பனோஸ் பனாய் (Panos Panay) குறிப்பிட்டார்.


சர்பேஸ் புக் மடிக்கணினி: 

இதுவே எங்கள் முதல் மடிக் கணினி. ஆனால் இதுவரை இயங்கிய மடிக்கணினிகள் அனைத்தின் அம்சங்களையும் மாற்றி அமைக்கப்பட்ட மடிக்கணினி. புதியதாக நாங்கள் ஒரு மடிக்கணினியைக் கண்டுபிடித்துள்ளோம்” என்று அவர் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டார்.

இது மடிக்கணினி மட்டுமல்ல. இதன் திரைப் பாகத்தைத் தனியே கழட்டி ஒரு குறுங்கணினியாகவும் (“டேப்ளட் பி.சி.”) பயன்படுத்தலாம். கீ போர்டில் ஒரு கீயை அழுத்தியவுடன், திரைப் பகுதி தானாகக் கழண்டு தனியே கிடைக்கிறது. 

எனவே இது ”ஒன்றில் இரண்டு” என அழைக்கப்படும் ஒரு சாதனமாக வெளிவந்துள்ளது. இதன் திரை 13.1 அங்குல அளவில் அமைந்துள்ளது. இது சற்று மாறுதலான அளவு தான். 

வழக்கமாக நாம் பார்த்த மடிக்கணினி திரைகளைக் காட்டிலும் சற்று உயரம் கூடுதலாக இருக்கும். இந்த திரைப் பகுதியை எந்தக் கோணத்திலும் வைத்துக் காணலாம். சற்று உயர்த்திப் பிடிக்கலாம். இதற்கு வழி வகுக்கும் வகையில், மைக்ரோசாப்ட் "dynamic fulcrum hinge, என்ற ஒரு சுழல் மையப் பிணைப்பினைப் பயன்படுத்தியுள்ளது. 

இதன் ஒளிப்புள்ளி என அழைக்கப்படும் 'பிக்ஸெல்' திறன் 3000 x 2000 ஆக உள்ளது. ஒரு சதுர அங்குலத்தில் 267 பிக்ஸெல்கள். மொத்தம் 60 லட்சம் பிக்ஸெல்கள். இதனைத் தொட்டும் இயக்கலாம். 'ஸ்டைலஸ்' பேனாவும் பயன்படுத்தலாம். 

எந்தக் கோணத்தில் பார்த்தாலும், காட்சி மிகத் தெளிவாக உள்ளது. திரையைத் தனியாகக் கழட்டி குறுங்கணினியாகப் பார்க்கையில், அதன் தடிமன் 7.7. மிமீ ஆக அமைகிறது. எடை 725 கிராம். மொத்த மடிக்கணினியின் தடிமன் 28.8 மிமீ. எடை 1.587 கிலோ. 

இந்த லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் சி.பி.யு. ஐ5 வகையைச் சேர்ந்தது. இதன் தற்காலிகச் செயல் (ராம்) நினைவகத்தினை 16 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் ஹார்ட் டிஸ்க் எஸ்.எஸ்.டி. வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனை ஒரு டெரா பைட் அளவிற்கு உயர்த்தலாம். பின்புறமாக 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கேமராவும் உள்ளன. இதன் கீ போர்டில், விசைகள், பின்புறமாக ஒளியூட்டப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. 

கீழாக அமைக்கப்படும் சுட்டு தளம் (Track Pad) கண்ணாடியால் காக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தியவர்கள், நிச்சயமாக மவுஸ் பயன்பாட்டினை விரும்ப மாட்டார்கள் என்று மைக்ரோசாப்ட் அடித்துச் சொல்கிறது. விரல்ரேகை உணர்ந்து இயக்கவும் இதில் வசதி உள்ளது. 

இரண்டு யு.எஸ்.பி.3 போர்ட்கள் தரப்பட்டுள்ளன. முழு அளவிலான, எஸ்.டி. கார்ட் ஸ்லாட் இதில் இணைக்கப்பட்டுள்ளது. “ஹலோ” என்று சொன்னால், நம் முகத்தினை அடையாளம் கண்டு இயங்க, கேமராவும் கிடைக்கிறது.

இதன் பேட்டரியின் திறன் தொடர்ந்து 12 மணி நேரம் கணினியை இயக்க மின்சக்தியினைத் தருகிறது.

இந்த 'சர்பேஸ் புக்' (Surface Book) வரும் அக்டோபர் 26 முதல் விற்பனைக்கு வருகிறது. ஆனால், தேவைப்படுபவர்கள், முன்பதிவினை அக்டோபர் 7 முதல் மேற்கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், இவற்றின் விலை தான் அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், கண்களில் நீர் வரவழைப்பதாகவும் உள்ளது. 

தொடக்க நிலை சர்பேஸ் புக் கணினியின் (Core i5, 8GB RAM, and a 128GB PCIe SSD) விலை அமெரிக்க டாலர் 1,499. இதில் கிராபிக்ஸ் செயலி தனியாக இருக்காது. கிராபிக்ஸ் செயலி தனியாகவும், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. யும் கொண்டதன் விலை 1,899 டாலர். உயர்நிலையில், Core i7 with 16GB RAM and a 512GB SSD கொண்ட கணினி 2,699 டாலர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அழகான தோற்றம் மற்றும் பிரித்தெடுத்த நிலையில் செயல்பாடு போன்றவற்றைக் காண https://www.youtube.com/watch?t=1&v=XVfOe5mFbAE என்ற காணொளியைக் காணவும்.

“விண்டோஸ் பயன்படுத்தும் பயனாளர்கள் முதலில் இதனைத் தங்கள் தேவை என உணர்ந்தனர். பின்னர், அதுவே தங்கள் தேர்வு என அறிந்தனர்; இப்போது அதுவே தாங்கள் நேசிக்கும் விண்டோஸ் என உணர்கின்றனர்” என சத்ய நாதெல்லா, இந்த காட்சி அரங்கில், விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்து அறிவித்தார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes