கூகுள் தன் நிறுவனங்களின் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, அனைத்திற்கும் முதன்மையானதாக 'ஆல்பபெட்' என்னும் நிறுவனத்தை உருவாக்கியது. இந்த மாற்றத்தின் போது கூகுள் நிறுவனப் பிரிவின் தலைவராக, தமிழர் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.
இப்போது, கூகுள் நிறுவனப் பிரிவின் இலச்சினை மாற்றப்பட்டு புதிய இலச்சினை ஒன்று வெளியாகியுள்ளது.
மாற்றி அமைக்கப்பட்ட இலச்சினையிலும் அதே நீலம், சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வண்ணங்கள் உள்ளன. இந்த நிறங்கள், கூகுள் நிறுவனத்தின் கடந்த 17 ஆண்டுகள் வரலாற்றில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டவையாகும்.
ஒரு காலத்தில், கூகுள் தேடல் சாதனமாகப் புகழ் பெற்று வளர்ந்து கொண்டிருந்த நிலையில், அதனைப் பெர்சனல் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமே பெற்று வந்தோம். தற்போது, கூகுள் தளத்தினைப் பல சாதனங்கள் வழியாக, பல இயக்க முறைமைகள் வழியாகப் பெற்று வருகிறோம்.
ஒரே நாளில், பலவகை சாதனங்கள் மூலம் ஒருவர் கூகுள் தளத்திற்கு செல்வதையும் பார்க்கலாம். டேப்ளட் பி.சி.,மொபைல் போன்கள் மட்டுமின்றி, இப்போது தொலைக் காட்சிப் பெட்டி, கை கடிகாரங்கள், ஏன் கார் டேஷ் போர்ட் வழியாகக் கூட, கூகுள் தளத்தினைக் காண்கிறோம். இவை அனைத்திலும் தரப்படும் சேவைகள், ஒரே நிறுவனத்தினிடமிருந்து வருகின்றன என்ற எண்ணத்தைக் காட்ட, கூகுள் தனது இலச்சினையை மாற்றியுள்ளது.
எனவே, சிறிய திரைகளில் கூட, கூகுள் நமக்காகச் செயல்படும் தருணத்தை நன்கு காட்ட, இந்த இலச்சினை மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் தன் வலைமனைச் செய்தியில் அறிவித்துள்ளது.
மொபைல்போன் போன்ற சிறிய சாதனங்களில், புதிய இலச்சினையில், எழுத்து 'G' பெரிய (Capital) எழுத்தாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு வெள்ளை வண்ணத்தில், சிறிய (lower case letter) எழுத்தாக இருந்தது. கூகுள் நிறுவனத்தின் வேறு சேவைகள் தரப்படுகையிலும், நம் ஒலி வழி கட்டளைக்குக் கூகுள் செயல்படும்போதும், இந்த எழுத்தினைச் சுற்றி சிறிய அளவில் வண்ணப் புள்ளிகள் சுழன்று வருவதனைக் காணலாம். இதுவும் புதிய மாற்றமே.
முதன் முதலில், 1977ஆம் ஆண்டில், கூகுள், இலச்சினை ஒன்றைத் தனக்கென வெளிக் காட்டியது. அது அப்போதைய வேர்ட் ஆர்ட் என்னும் டூல் மூலம் உருவானது போன்ற தோற்றத்தினைக் கொண்டிருந்தது. இது செப்டம்பர் 1998 வரை பயன்படுத்தப்பட்டது. பின்னர், அக்டோபர் 1998 முதல் மே, 1999 வரை இருந்த இலச்சினையில், ஆச்சரியக்குறி ஒன்று இறுதியில் இருந்தது.
பின்னர் பத்தாண்டுகளுக்கு, முப்பரிமாண அடிப்படையில் அமைக்கப்பட்டு, மே 31, 1999 முதல், மே 5, 2010 வரை பயன்படுத்தப்பட்டது. அடுத்ததாக வந்த இலச்சினையில், எழுத்துகள் எளிமையாக்கப்பட்டு, ஒரு 'O' மட்டும் ஆரஞ்சு வண்ணத்தில் அமைந்திருந்தது. இது மே 6, 2010 முதல் செப்டம்பர் 18, 2013 வரை இருந்தது.
இறுதியாக தற்போது விலக்கப்பட்ட இலச்சினை செப்டம்பர் 19, 2013 முதல், செப்டம்பர் 1, 2015 வரை இருந்தது. இப்போது காட்டப்படும் இலச்சினை செப்டம்பர் 2, 2015 முதல் இருந்து வருகிறது. கூகுளின் இலச்சினை சில சோக நிகழ்வுகளைக் காட்டுகையில், வண்ணங்களில் இல்லாமல், அந்த நிகழ்வுகள் நடந்த நாட்டினைச் சுற்றிக் காட்டப்பட்டு வந்தது.
முதன் முதலாக,போலந்து நாட்டில் நடைபெற்ற விமான விபத்தின் போது கூகுள் போலந்து என்ற பிரிவின் லோகோ, எந்த வண்ணத்திலும் இல்லாமல் இருந்தது. இந்த விபத்தில், போலந்து நாட்டின் அதிபர் மரணமடைந்தார். அடுத்து சீனாவில் நடந்த பூகம்பத்தில் பலர் இறந்த போது இதே போலக் காட்டப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டின் சில விசேஷ தினங்களில், தன் மாறா நிலையில் உள்ள இலச்சினையை மாற்றி, கூகுள் டூடில் என அவ்வப்போது அந்த தினங்களின் நிகழ்வுகளுக்கேற்ப சிறிய அனிமேஷன் படங்களாகக் காட்டப்படுவதனையும் நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
0 comments :
Post a Comment