புதிய கம்ப்யூட்டர் ஒன்று வீட்டிற்கு வந்துவிட்டது. சில டிஜிட்டல் சாதனங்கள் இணைக்கப்பட்டு, ஒன்றுமே எழுதப்படாத புதிய பேப்பராகத்தான் அது உங்களை அடையும்.
ஆனால், உங்கள் வீட்டு பட்ஜெட்டை நிர்வகிப்பது முதல், கேன்சர் நோயைக் குணப்படுத்துவது வரை, அதனால் அனைத்து செயல்களையும் மேற்கொள்ள முடியும் என்ற தகவல் வியப்பாக உள்ளதல்லவா?
எந்த கம்ப்யூட்டருக்கும், என்ன பயன்பாட்டினை நீங்கள் மேற்கொண்டாலும், அதில் சில புரோகிராம்கள் இருப்பது அவசியத் தேவையாகும். அவற்றை இங்கு காணலாம்.
பிரவுசர்:
வரிந்து கட்டிக் கொண்டு, சாப்ட்வேர் புரோகிராம்களைக் கம்ப்யூட்டருக்குள் புகுத்துவதற்குள், முதலில் உங்கள் பிரவுசரைத் தீர்மானியுங்கள். விண்டோஸ் சிஸ்டத்துடன், மாறா நிலையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தரப்பட்டிருக்கும்.
ஆனால், ஏற்கனவே நீங்கள் வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்திப் பழகி இருந்தால், இது விருப்பமில்லாத ஒன்றாக, வேறு ஒருவரின் ஆடையை உடுத்தியது போல இருக்கும்.
எனவே, உங்களுக்குத் தேவையான பிரவுசரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். அனைத்து பிரவுசர்களும் இலவசமாகவே கிடைக்கின்றன என்பதுவும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று.
நினைட் (Ninite):
புதிய கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வதனை ”நினைட்” இணைய தளம் மிக மிக எளிதாக்குகிறது. இதன் இணைய தளம் செல்லவும். (https://ninite.com/) அங்கு உங்களுக்கு எந்த சாப்ட்வேர் தொகுப்பு வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் முகப்பு பக்கத்தில், நமக்கு வேண்டிய, தேவையான பல புரோகிராம்கள் வகை வாரியாக அடுக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து, Get Installer என்பதில் கிளிக் செய்தால், அதற்கான இன்ஸ்டாலர் புரோகிராம், ஒரு சிறிய .exe பைலாகத் தரப்படும்.
இந்த புரோகிராம் மூலம், நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து புரோகிராம்களும் இன்ஸ்டால் செய்யப்படும். இடையே, நமக்குத் தேவையில்லாத புரோகிராம்கள் குறுக்கிட்டால், அவற்றை நினைட் புறந்தள்ளிவிடும். இன்ஸ்டால் செய்வதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. மிகவும் பயனுள்ள, ஆச்சரியப்பட வைத்திடும் தளம் நினைட்.
ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ்:
உங்கள் கம்ப்யூட்டரை நிச்சயம் இணையத்துடன் இணைத்தே பயன்படுத்துவீர்கள். எனவே, வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் கம்ப்யூட்டர் ஆளாகும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.
இணையத்துடன் இணையவில்லை என்றாலும், நீங்கள் பயன்படுத்தும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் மூலமும் வைரஸ்கள் வரலாம். எனவே, ஏதேனும் ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை கம்ப்யூட்டரில் நிறுவ வேண்டும். பலரும் பரிந்துரைத்தபடி, ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை நிறுவலாம்.
இதில் secure shredder, Do Not Track பாதுகாப்பு, தானாக குறிப்பிட்ட நாளில் ஸ்கேன் செய்வதனை அமைக்கும் வசதி ஆகியவை கூடுதல் வசதிகளாகக் கிடைக்கின்றன.
இந்த தொகுப்பு இல்லாமல், அவாஸ்ட் (Avast) தொகுப்பினையும் நிறுவலாம். நினைட் தளத்தில் இவை இரண்டுமே கிடைக்கிறது. விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட தொகுப்பாக உங்கள் கம்ப்யூட்டர் இருந்தால், அதில் உள்ள Windows Defender ஆண்ட்டி வைரஸ் தொகுப்பே போதுமானது. மாறா நிலையில் இது தரப்படுகிறது.
மால்வேர் பைட்ஸ் (Malwarebytes Anti-Malware Free):
ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறப்பாகச் செயல்பட்டாலும், புதியதாக வைரஸ் ஒன்று வருகையில், எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பும் பயனளிக்காது.
இவற்றை “zero day” threats என அழைக்கின்றனர். அண்மைக் காலங்களில், இது போன்ற ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுக்குச் சவால் விடும் வகையில் பல மால்வேர் புரோகிராம்கள் கம்ப்யூட்டர்களை ஊடுருவுகின்றன.
இத்தகைய புரோகிராம்களைத் தடுக்க Malwarebytes Anti-Malware Free நமக்கு உதவுகிறது. இதனை முழுமையான ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாகப் பயன்படுத்த இயலாது. வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் செயல்படாமல் உள்ள நிலைகளில் இது உதவிடும்.
1 comments :
பயனுள்ள தகவல்கள்! நன்றி!
Post a Comment