நீங்கள் ஏதேனும் சமூக இணையதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தால், சென்ற மாத இறுதியில், சென்ற 2014 ஆம் ஆண்டில் நீங்கள் என்ன செய்தீர்கள், சிறப்பு என்ன என்று ஒரு சிறிய வீடியோ அல்லது படத் தொகுப்பு காட்டப்பட்டிருக்கும்.
பேஸ்புக் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவை இதனைச் சரியாக மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பார்த்த போது, இணையம் இதுவரை என்ன செய்தது? எப்படி வளர்ந்தது? என்று யாராவது வீடியோ காட்சியாகக் காட்டினால், அதனை இணையத்தில் பதிந்து வைத்தால், எப்போது வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணம் வந்தது.
இந்த எண்ணத்துடன் இணையத்தில் தேடியபோது, இணையத்தின் கதை என்ற தலைப்பிலேயே (Story of the Web) ஒரு தளம் இருப்பது தெரிய வந்தது. இந்த தளத்தின் முகவரி http://storyoftheweb.org.uk/
”இப்படி எல்லாம் செய்திட முடியும் என்று எண்ணியது கூட இல்லையே” என்று முதலில் இணையத்தைப் பார்த்தவர்கள் சொல்லி இருப்பார்கள். இப்போதோ, ”இணையம் இல்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று சொல்பவர்களே அதிகம்.
ஏன், அப்படிச் சொன்னால்தான், நம்மை இப்போதைய உலகின் மனிதர்களாக நம்மை மதிக்கிறார்கள். 18 கோடிக்கு மேலான இணைய தளங்கள் இன்று உள்ளன. தொடர்ந்து இதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டும் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை இந்த இணைய தளம் காட்டுகிறது.
இதில் நுழைந்தவுடன், இதனைக் காண இரு வழிகள் இருந்தன. இதில் உள்ள Auto Play என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அது தானாகவே, படிப்படியாகப் படங்களுடன், இணையத்தின் வளர்ச்சியை, அதன் சிறப்பான பயணத்தினைக் காட்டுகிறது.
இன்னொரு வழியாக, நீங்களே உங்களின் கட்டுப்பாட்டில் இதனை இயக்கிக் காணலாம். நான் ஆட்டோ ப்ளே இயக்கினேன். 1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏற்பட்ட மாற்றங்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் படங்கள், ஏற்பட்ட மாற்றங்கள் என அனைத்தும் அழகாகத் தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.
நாம் இணையம் பயன்படுத்தத் தொடங்கிய அந்த நாட்களை நாம் எண்ணி அசைபோடும் வகையில், பல காட்சிகள் நம் நெஞ்சைத் தொடுகின்றன. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இணைய தளம் இது.
0 comments :
Post a Comment