மைக்ரோசாப்ட் வாங்கிய 'லிங்க்ட் இன்' - ஏன்? எதற்காக?


ஜூன் 13 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம், சமூக வலைத்தளம் நடத்தி வரும் 'லிங்க்ட் இன்' (LinkdIn) நிறுவனத்தை 2,620 கோடி டாலர் கொடுத்து வாங்கியுள்ளதாக அறிவிப்பு தந்தது பலருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. 

'லிங்க்ட் இன்' நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு 156 டாலர் செலுத்தி, இந்நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனம் முழுமையாகக் கை மாறுவது, இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும். 

வர்த்தகத்தில் ஈடுபடும் வல்லுநர்கள் குறித்த டேட்டாவினை, இந்த இரண்டு நிறுவனங்களும் பெற்று வந்தன. ஒருவரின் டேட்டா வட்டம் மற்றதன் வட்டத்தில் குறுக்கிடாமல் இருந்து வருகிறது. ஏனென்றால், தனித்தனியான அடிப்படையில் இவை இயங்கின. 

இப்போது 'லிங்க்ட் இன்' டேட்டா வட்டம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைவதால், மைக்ரோசாப்ட் தான் கொண்டுள்ள தொழில் வல்லுநர்களின் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளும் நிகழ்வு ஏற்பட இருக்கிறது. மைக்ரோசாப்ட் வலைப்பின்னலில், நபர் தொடர்புகள், தகவல்கள், செய்திகள், காலண்டர் பதிவுகள் மற்றும் ஆவணங்கள் என இடம் பெற்றுள்ளன. 

'லிங்க்ட் இன்' வலைப் பின்னலில், வேலைகள், பணியாளர்கள், வல்லுநர்கள், கற்றுக் கொள்ளுதல், ஒரே வகையான பணி செய்பவர்கள், எதிர்பார்ப்புகள், வேலைக்கு சரியான நபர் தேடி எடுத்தல், பணிக்கு அமர்த்துதல் என இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு வலைப்பின்னலும் இனி மைக்ரோசாப்ட் வசம் வரும். இதனால், பொதுவான தொழில் வள வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கும். உற்பத்தி திறனும் வர்த்தக வாய்ப்புகளும் இணைந்து இந்த வாய்ப்புகளை அதிகரிக்கும்.

'லிங்க்ட்இன்' தன் வருமானத்தை உயர்த்த வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வர்த்தக வணிகம் தேவையா? எனப் பலரும் கருதுகின்றனர். சென்ற 2011 ஆம் ஆண்டில் ஸ்கைப் நிறுவனத்தை வாங்கிய தொகையைப் போல மூன்று மடங்கு தொகை தற்போது செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், பலர் மைக்ரோசாப்ட் எதிர்காலத்திற்கான திட்டங்கள் இன்றி இதனை வாங்கியிருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதன் வழியாக, மைக்ரோசாப்ட் புதிய சகாப்தம் ஒன்றைப் படைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். 

'லிங்க்ட் இன்' சமூக வலைத்தளம் 2002ல் வடிவமைக்கப்பட்டு, தன் செயல்பாட்டினை 2003ல் தொடங்கியது. இதன் அடிப்படை இலக்கு, வல்லுநர்களை இணைப்பதுதான். இதன் மூலம், திறமை உள்ளவர்கள் ஒவ்வொருவரும் இணைந்து கொள்ள முடிகிறது. தங்கள் திறமையைப் பிறருக்கு அளித்து வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளலாம். 

தங்களுக்கு வேண்டிய திறன்களையும் பிறரிடமிருந்து பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம். ஒருவருக்கொருவர் பரிந்துரையின் பேரில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். சென்ற மார்ச் இறுதியில், 43.3 கோடி உறுப்பினர்கள் இதில் உள்ளனர். இவர்களில், 10.6 கோடி பேர் தொடர்ந்து இயங்கி வருகின்றனர். 

இதில் பதிந்து இயங்குபவர்கள், தங்களுக்குள் குழுக்களை அமைத்துக் கொண்டும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். பெரும்பாலும் வேலை வாய்ப்பு தேடும் குழுக்களாக இவை இருந்தாலும், கல்வி மற்றும் ஆய்விற்கெனப் பல பயனுள்ள குழுக்களும் இயங்கி வருகின்றன. ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. வீணான தகவல்களைப் பிறர் விரும்பாமல் அனுப்பும் ஸ்பேம் வகைத் தகவல்களும் இக்குழுக்களில் இடம் பெறுகின்றன.

அமெரிக்காவில் தன் தலைமை இடத்தைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், உலகின் 24 மொழிகளில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதற்கு அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. மொத்தத்தில், இந்த நிறுவனத்தில் ஏறத்தாழ 9,500 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மைக்ரோசாப்ட் தற்போது, தன் போட்டி நிறுவனமான, ஆப்பிள் நிறுவனத்தின் இயக்க முறைமைகளுக்குப் (ஐபோன் மற்றும் ஐ.ஓ.எஸ்.) போட்டியாக எதனையும் வடிவமைக்க முயற்சி எடுக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக, 43.3 கோடி உறுப்பினர்கள் இயங்கும் இந்த சமூக வலைத்தளத்தை வாங்கியுள்ளது. உலக அளவிலான வல்லுநர்கள், பயனாளர்களுடன் மைக்ரோசாப்ட் தொடர்பு கொள்ளும் முயற்சியே இது. 

உலகில் ஒவ்வொரு நபரையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைக்க இது போன்ற சமூக தளங்கள் அவசியம் என மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்ய நாதெள்ளா கருதுகிறார். அவ்வாறு கொண்டு வருவதன் மூலம், அவர்களை மேலும் ஆக்கபூர்வமான வழிகளில், மைக்ரோசாப்ட் செலுத்த முடியும் எனத் திட்டமிடுகிறார். 

அவுட்லுக், ஆபீஸ் 365 மற்றும் மைக்ரோசாப்ட் எக்சேஞ் ஆகியவற்றை “லிங்க்ட் இன்” தளம் கொண்டிருக்கின்ற பெரிய அளவிலான டேட்டா நெட்வொர்க்குடன் இணைத்து இந்த இலக்கை அடைய சத்ய நாதெள்ளா திட்டமிடுகிறார். இந்த இணைப்பின் மூலம், இவர்களுக்கு தொழில் நுட்பத்தினையும், சேவையையும் எளிதாக வழங்க முடியும். அதன் வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமூக அளவில் ஒரு நல்ல பலம் கொண்ட சக்தியாக மாறும். 

இந்த இணைப்பில் வரும் தொழில் வல்லுநர்கள், ஒருவருக்கொருவர் தங்களின் திறமையைப் பகிர்ந்து கொள்ள முடியும். இது அவர்களின் திறனை முழுமைப்படுத்தி, வர்த்தக வாய்ப்புகளை வளம் நிறைந்ததாக மாற்ற முடியும். மைக்ரோசாப்ட் உலகின் முதல் நிலை நிறுவனமாக இருந்தாலும், பெரிய அளவில் இதற்கு சமூக இணைப்பு இல்லை. 

இந்தக் குறையை 'லிங்க்ட் இன்' தீர்க்கும். புதிதாக, 43.3 கோடி பேர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவைப் பெறுகின்றனர். இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்னொரு சமூகப் பரிமாணம் உறுதியாகும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes