மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் புதிய விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்னும் அதிகமான எண்ணிக்கையில், மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின், விண்டோஸ் மற்றும் சாதனங்கள் பிரிவின் செயல் துணைத் தலைவர் டெர்ரி மையர்சன், இது குறித்து தன் வலைமனைப் பதிவில் (http://blogs.windows.com/windowsexperience/2015/10/29/making-it-easier-to-upgrade-to-windows-10/) பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெறுவதற்கான நடைமுறைக்கான நிலைகள் குறைக்கப்பட்டு எளிதாக்கப்படுகின்றன. இதுவரை, விண்டோஸ் 10 க்கு மேம்படுத்துகையில், பயனாளர்கள் எதிர் நோக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் வகையில் இந்த நிலைகள் இருக்கும்.
ஜூலை 29 அன்று, விண்டோஸ் 10 தரவிறக்கம் செய்திட அனுமதிக்கப்பட்டாலும், அதற்கு முன்பாகவே, முன்பதிவு செய்திட வழி தரப்பட்டது. 11 கோடி பேர் இது போல முன்பதிவு செய்து, விண்டோஸ் 10 சிஸ்டத்தைப் பெற்றதாக, சென்ற மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.
இப்போது, முன்னதாகவே முன்பதிவு செய்து, விண்டோஸ் 10க்கு மேம்படுத்திக் கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. மைக்ரோசாப்ட் தன் புதிய சிஸ்டத்தை மக்களிடம் தள்ளிவிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருக்கிறது.
அனைத்து விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயனாளர்களுக்கு, விரைவில், இது ஒரு பயனாளர் 'விருப்ப மேம்படுத்துதலாக' இருக்கும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில், விண்டோஸ் 'பரிந்துரைக்கப்படும் மேம்படுத்தலாக' காட்டப்படும்.
யாரெல்லாம், தங்கள் கம்ப்யூட்டரில் தானாக மேம்படுத்துதலை அமைத்து வைத்திருக்கிறார்களோ, அவர்களின் கம்ப்யூட்டரில் இந்த பரிந்துரைக்கப்படும் மேம்படுத்துதல், தானாக பதியப்படும் வகையில் அமைக்கப்படும். இருப்பினும், பயனாளர்கள் விருப்பத்துடன் அவர்களாகவே விரும்பி ஏற்றுக் கொள்ளும் போதுதான் தானாக அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
பயனாளர்கள், அதன்படி, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மேற்கொண்ட பின்னர், அது குறித்து கவலைப்பட்டால், சிரமமாக உள்ளது என்று எண்ணினால், 31 நாட்களுக்குள்ளாக, பழைய விண்டோஸ் தொகுப்பிற்கு அவர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதனை மையர்சன் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார். அதற்கேற்ற வகையில், கம்ப்யூட்டரில், பழைய விண்டோஸ் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் அனைத்தும் சேவ் செய்து வைக்கப்படும். பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, டேப்ளட் பி.சி. மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் இந்த வசதி தரப்படும்.
மீண்டும் பழைய சிஸ்டத்திற்கு வர, Settings > Update and Security> Recovery > Uninstall Windows 10 எனச் சென்று இயக்கினால் போதும். “எங்களுடைய நோக்கமெல்லாம், நீங்கள் விண்டோஸ் 10க்கு மாறுவது ஓர் ஆச்சரியமாக உங்களுக்கு இருக்கக் கூடாது என்பதுதான்” என்றும் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களாகவே, பல பயனாளர்கள், தாங்கள் விரும்பாமலேயே, மைக்ரோசாப்ட் தங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பதித்திடுமோ என்று கவலைப்பட்டனர். முன்பதிவு செய்து ஆவலோடு காத்திருந்தவர்கள் கூட, மைக்ரோசாப்ட் தானாக, அப்டேட் பைல்களை இறக்குவது குறித்து கவலை அடைந்து, தங்கள் முன்பதிவை ரத்து செய்தனர்.
இப்போதும் கூட, பயனாளர்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பதிப்பதை எளிதாக்கும் வகையில், சில பைல்களை, பயனாளர்களின் கம்ப்யூட்டர்களுக்குத் தாங்களாகவே அனுப்பும் திட்டத்தினைக் கைவிடவில்லை. இது இன்னும் தொடரும் என்று மையர்சன் அறிவித்துள்ளார். ஆனால், பயனாளர்களின் முடிவே இறுதியானதாக இருக்கும்.
அடுத்த மாதம் முதல், விண்டோஸ் பயனாளர்களுக்கு, தற்போது விண்டோஸ் 10க்காக, மைக்ரோசாப்ட் அனுப்பும் பைல்கள் எத்தகையவை என்று விளக்கமாகக் கூறும். இந்த விளக்க உரை, டெவலப்பர்கள், பயனாளர்கள், அலுவலகத்தில் விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் என அவர்களின் பயன்பாட்டிற்கேற்ப மாறுபடும்.
பயனாளர்கள் எப்போது விண்டோஸ் சிஸ்டம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான நிலையில், பல்வேறு ஆப்ஷன்கள் தரப்படுவார்கள். மேம்பாட்டிற்கான பைல்கள் இறக்கிவைக்கப்பட்டாலும், என்று அவற்றை இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்பது,
பயனாளர்களின் விருப்பமாக மட்டுமே இருக்கும் என்று மையர்சன் தெரிவித்துள்ளார்.
தங்கள் கம்ப்யூட்டர்களில் பைரசி மூலம், நகல் கோப்புகளைப் பதிந்து விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தி வருபவர்களுக்கும், இலவசமாக விண்டோஸ் 10 வழங்கப்படும். ஆனால், அவர்கள் விண்டோஸ் சிஸ்டத்தை இயக்குவதற்கான “செயல்பாட்டிற்கான குறியீட்டினைப்” (Activation Code) பெற வேண்டும். இதனையும் அதிகார பூர்வ கோப்புகளையும் பெறுவதற்கான வழிகள் தற்போது எளிமைப்படுத்தப்படும்.
புதியதாக, டேப்ளட் பி.சி. போன்ற நிலையையும் இணைத்து விண்டோஸ் 10 வெளியானாலும், அதில் புதியதாகப் பல அம்சங்களும் வசதிகளும் தரப்படுகின்றன. மெயில், மியூசிக், விடியோ, காலண்டர் என இன்னும் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டு கிடைக்கின்றன.
கார்டனா என்னும் பெர்சனல் அசிஸ்டண்ட், விண்டோஸ் போன் சிஸ்டம் உட்பட அனைத்திலும் இடம் பெற்றுள்ளது. புதிய வகை தொழில் நுட்பத்தில் இயங்கும் எட்ஜ் பிரவுசர் இதன் புதிய சிறப்புகளில் ஒன்றாகும்.
1 comments :
தகவலுக்கு நன்றி அண்ணே. உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர் (Take Care emergency contacts application)
Post a Comment