மைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்


1. டெக்நெட் (TechNet): 

இந்த 2013 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கைவிடப்பட்ட பெரிய திட்டம் டெக்நெட் என்பதாகும். இதனைப் பலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும், திருட்டுத்தனமாகக் காப்பி எடுத்துப் பயன்பாட்டிற்கு பரப்புவதாகவும் கூறி மைக்ரோசாப்ட் இதனை நிறுத்தியது.

தகவல் தொழில் நுட்ப துறையில் இயங்கும் வல்லுநர்களுக்கு, விண்டோஸ் க்ளையண்ட் மற்றும் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு, நிலைத்த உரிமம் வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 

பயனாளர்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்தியதால், பாதுகாப்பு நிறைந்த எம்.எஸ்.டி. என். நெட்வொர்க்கிற்கு (MSDN network) பயனாளர்களை மாற்றிவிட்டு, டெக் நெட் திட்டத்தினை மைக்ரோசாப்ட் மூடியது. 


2. லைவ் ப்ராடக்ட்ஸ் (Live Products): 

இந்த 2013 ஆம் ஆண்டில், தன்னுடைய பல திட்டங்களை குழுக்களாக மைக்ரோசாப்ட் ஒருங்கிணைத்தது. அதன் ""லைவ் ப்ராடக்ட்ஸ்'' பல பிற புரோகிராம்களாக மாற்றி அமைக்கப்பட்டது. 

லைவ் மெயில் மற்றும் ஹாட் மெயில் அவுட்லுக் டாட் காம் (Outlook.com) உடன் இணைக்கப்பட்டது. லைவ் மெஷ் (Live Mesh) திட்டம் ஸ்கை ட்ரைவ் இருப்பதால் கைவிடப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே லைவ் மெசஞ்சர் (Live Messenger) ஸ்கைப் உடன் இணைக்கப்பட்டு மூடப்பட்டது.


3. சர்பேஸ் ப்ரோ: 

2013 பிப்ரவரியில் வந்த இந்த திட்டம், அக்டோபரில் கைவிடப்பட்டது. ஆனால், இதனைக் கைவிட்டதற்கு மைக்ரோசாப்ட் சரியான காரணத்தினைத் தெரிவித்திருந்தது. சர்பேஸ் ப்ரோ 2 டேப்ளட் பி.சி., சென்ற சர்பேஸ் ப்ரோவினைக் காட்டிலும் அதிக மேம்பாட்டு திறனுடன் வடிவமைக்கப்பட்டதால், சர்பேஸ் ப்ரோ கைவிடப் பட்டது. இதன் பேட்டரி திறன் 75 சதவீதம் கூடுதலாகவும், பொதுவான இயங்கும் திறன் 20% கூடுதலாகவும் இருப்பதாக, மைக்ரோசாப்ட் அறிவித்தது.


4. விண்டோஸ் ஸ்மால் பிசினஸ் சர்வர்: 

விண்டோஸ் சர்வர் 2012 வெளியான பின்னர், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறிய வர்த்தக ரீதியான சர்வர் சிஸ்டத்தினை வெளியிடப் போவதில்லை என இத்திட்டத்தை மூடியது. 

இதற்குப் பதிலாக, சிறிய வர்த்தக நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் வழங்கும் க்ளவ்ட் சொல்யூசன்ஸ் வசதியைப் பயன்படுத்த கேட்டுக் கொண்டது. எனவே, இந்த சர்வர் அமைப்பை விரும்புபவர்கள், அஸூர் (Azure), எக்சேஞ்ச் சர்வர் மற்றும் ஷேர் பாய்ண்ட் அல்லது சர்வர் 2012க்கு மாறிக் கொள்ளலாம்.


5. என்கார்டா (Encarta): 

மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டம் பதித்த கம்ப்யூட்டர்களை வாங்கியவர்களுக்கு, ஒரு சிறிய அரும்பொருள் களஞ்சியமாக ""என்கார்டா'', சிடியில் பதியப்பட்டு தரப்பட்டது. 

இது முதலில் 1993ல் வெளியிடப்பட்டது. விக்கிபீடியாவின் தகவல்கள் சரியானவையா என்ற சர்ச்சை இருந்ததால், மைக்ரோசாப்ட் வழங்கிய என்கார்டா, அனைவராலும் விரும்பப் பட்டது. இணைய தளப் பதிப்பும் வெளியிடப்பட்டது. இதனால், கவரப் பட்ட மைக்ரோசாப்ட், என்சைக்ளோபீட்யா பிரிட்டானிகாவை வாங்கிட முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 

என்கார்டா, விக்கி பீடியாவின் முன் எடுபடவில்லை என்பதால், அதற்கான வரவேற்பு குறையத் தொடங்கியது. ஆனாலும், என்கார்டா குழுவினர், தொடர்ந்து அதற்கான அப்டேட் வழங்கி வந்தனர். 2006ல் இத்தகைய அப்டேட் வழங்கப்பட்டது. 

என்கார்டா பிரிமியம் என மேம்படுத்தப்பட்ட திட்டத்தில், 62 ஆயிரம் கட்டுரைகள் இருப்பதாக, மைக்ரோசாப்ட் பெருமைப் பட்டது. ஆனால், விக்கி பீடியாவில் பத்து லட்சத்திற்கும் மேலாகக் கட்டுரைகள் இருந்தன. 

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனம், சிடி வடிவில் வந்த என்கார்டாவினையும், அதன் இணைய தளத்தினையும் மூடுவதாக அறிவித்தது.


6. ப்ளைட் சிமுலேட்டர் (Flight Simulator): 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப் பழைய திட்டம் இந்த ப்ளைட் சிமுலேட்டர். 1978ல் இதனை சப் லாஜிக் (subLOGIC) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

பின்னர், இந்நிறுவனத்தினை மைக்ரோசாப்ட் 1982ல் வாங்கியது. இது ஒரு ஆர்வமூட்டும் கம்ப்யூட்டர் விளையாட்டு. இதற்கென தனி ஆர்வலர்கள் இருந்தனர். மைக்ரோசாப்ட் இந்த விளையாட்டினை மூடியபோது இவர்கள் மிகவும் கவலைப்பட்டனர்; ஆத்திரப்பட்டனர். 

யாராவது இந்த விளையாட்டினை வர்த்தக ரீதியாக விலை கொடுத்து வாங்கி, உயிர் கொடுக்க மாட்டார்களா என்று ஆதங்கப்பட்டனர். ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிதிநிலை 2009ல் சற்று சரிந்த போது, விளையாட்டுப்பிரிவு மூடப்பட்டது. அதோடு இந்த FlightSim கேம் காணாமல் போனது. 


7. ஸூன் (Zune): 

""நானும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து வந்த ப்ராடக்ட் தான்'' என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது ஸூன். டிஜிட்டல் மியூசிக் சந்தையில் சற்று தாமதமாக இது வந்தது. 2007ல் அறிமுகமாகி, ஐ பாட் முன் தாக்குப் பிடிக்க முடியாமல், 2011ல் மூடப்பட்டது. ஆனால்,இந்த சாப்ட்வேர் பிளேயர் இன்னும் எக்ஸ்பாக்ஸ் லைவ் மற்றும் விண்டோஸ் போன் 8ல் இடம் பெற்றுள்ளது. 


8. விண்டோஸ் ஹோம் சர்வர் (Windows Home Server): 

வீடுகளிலும், சிறிய அலுவலகங்களிலும், கம்ப்யூட்டர்களை இணைத்துப் பயன்படுத்த, இந்த விண்டோஸ் ஹோம் சர்வரை, 2007 ஆம் ஆண்டு நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் அரங்கில், பில் கேட்ஸ் அறிமுகப்படுத்தினார். 

பைல் பகிர்தல், டேட்டா பேக் அப், பிரிண்ட் சர்வர், ரிமோட் இணைப்பு எனப் பல வசதிகள் இதன் மூலம் கிடைத்தன. ஆனால், இதனைத் தன் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மைக்ரோசாப்ட் விற்பனை செய்திடவில்லை. இதனை டவுண்லோட் செய்து, பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடும் வகையில் மைக்ரோசாப்ட் வழங்கி வந்தது. அதனாலேயே, இது தானாகவே மறைந்து போனது.

அதிகம் புழக்கத்திற்கு வராமலேயே பலவற்றை மைக்ரோசாப்ட் கைவிட்டது. அவற்றில், Microsoft Works, FrontPage, Microsoft Expression, IronRuby, Microsoft Money, Windows Live OneCare மற்றும் Xbox One DRM ஆகியவை முக்கியமானவையாகும். 

இவ்வாறு பல ஆண்டு ஆய்வுக்குப் பின்னர், வெளியாகும் பல சாப்ட்வேர் திட்டங்களை, அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களும், பல சூழ்நிலைகளில் கைவிட்டுவிடுகின்றன. 

எனவே தான், எதனையும் நம்பி, முழுமையாக ஒன்றைப் பயன்படுத்த முன்வரும் முன், நாம் சற்றுப் பொறுமையாக இவற்றின் பயன்பாட்டு சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டியுள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes