கை கழுவப்படும் விண்டோஸ் எக்ஸ்பி



விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை விட்டுவிடுங்கள்; 2014 ஏப்ரல் முதல், அது முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் என்று மைக்ரோசாப்ட் விடுத்த எச்சரிக்கை தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. 

அண்மையில் இது குறித்து, கண்காணித்து ஆய்வு செய்திடும், நெட் அப்ளிகேஷன்ஸ் (Net Applications) அமைப்பு தரும் தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு, மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களில் 33.7 சதவீதமாகக் குறைந்தது. ஒரே மாதத்தில் 3.5 சதவீதம் குறைந்தது இதுவே முதல் முறையாகும். ஜூலையில் மொத்த விண்டோஸ் சிஸ்டம் பயன்பாடு 40.6 சதவீதமாக இருந்தது. 

எக்ஸ்பியின் இடத்தில், கடந்த ஓராண்டாக இயங்கி வரும் விண்டோஸ் 8 மற்றும் நான்கு ஆண்டுகளாகச் சந்தையில் இயங்கும் விண்டோஸ் 7 ஆகியவை இடம் பிடித்துள்ளன. சென்ற மாதத்தில், விண்டோஸ் 7, மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களில், 50 சதவீத இடத்தையும், விண்டோஸ் 8, 8.4 சதவீத இடத்தையும் பிடித்தன. 

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, மைக்ரோசாப்ட், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு மங்களம் பாடச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஏப்ரல் 8, 2014க்குப் பின்னர், இதற்கான சப்போர்ட் முழுமையாக நிறுத்தப்படும் எனவும் அறிவித்து வந்தது. ஆனால்,இப்போதுதான், அந்த அறிவிப்புக்கு மக்கள் செவி சாய்க்கத் தொடங்கி உள்ளனர். 

என்னதான், மைக்ரோசாப்ட் பயமுறுத்தி வந்தாலும், விண்டோஸ் எக்ஸ்பி, உலகில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கும் எனப் பலரும் தெரிவித்து வந்தனர். 

ஆனால், சென்ற மாத நிலையைப் பார்க்கையில், அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குப் பின்னர், எக்ஸ்பியின் பயன்பாடு 23% முதல் 28% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், உலக அளவில் விண்டோஸ் சிஸ்டம் பயன்பாடு, சென்ற மாதத்தில், பத்தில் ஒரு பங்கு குறைந்து, மொத்தத்தில் 91.2% ஆக இருந்தது. லினக்ஸ் 1.5% ஆக உயர்ந்தது. ஆப்பிள் ஓ.எஸ். 7.3% ஆக உயர்ந்தது. 

மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 சிஸ்டம் 50% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகின்றன. விஸ்டா 4.5% ஆகக் குறைந்துள்ளது. விண்டோஸ் 8 பயன்பாடு, ஆகஸ்ட்டில் திடீரென அதிகரித்து, 8.4% இடத்தைப் பிடித்துள்ளது. 

விண்டோஸ் எக்ஸ்பிக்கான, இறுதி பேட்ச் பைல், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ல் வெளியிடப்படும். அதன் பின்னர், மைக்ரோசாப்ட், எக்ஸ்பி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது. 

எனவே, எக்ஸ்பி சிஸ்டத்தைக் கை கழுவும் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1 comments :

வெற்றிவேல் at September 16, 2013 at 10:37 PM said...

நான்லாம் அத கை கழுவி வருசம் ரெண்டு ஆகுது...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes