மொபைல் போன்: சில ஆலோசனைகள்

மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.

இயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.

மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.

பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.

போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.

உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.

கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை
ஓரமாக நிறுத்திப் பேசவும்.

பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.

அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.

அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.

விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது.

சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.

மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes