தகவல் தொடர்பு செயற்கை கோளை (ஜி சாட் -5 பி) சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி., எப்- 6 ராக்கெட் தோல்வியில் முடிந்தது. இந்த தோல்வி காரணமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிரையோஜெனிக் எரிபொருள் வேலை செய்வதில் பிரச்னை இருந்ததால் கிளம்பிய சில நொடிகளில் முதல்கட்டத்தில் இந்த ராக்கெட் திசைமாறி சென்றது. பல பகுதிகளாக வெடித்து
சிதறியது. கட்டுப்பாட்டை இழந்த சில நொடிகளில் கடலில் விழுந்தது.
ஏற்கனவே கடந்த வாரம் 20 ம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது ஆனால் கவுண்டவுன் துவங்கும் போது திடீர் தொழில் நுட்ப கோளாறு (வால்வில் கசிவு) ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது.
கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று (சனிக்கிழமை) மாலை 4மணி 1 நிமிடம் அளவில் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்டது. முன்னதாக இதற்கான கவுண்டவுன் நேற்று காலை 10 மணி அளவில் துவங்கியது.
கிளம்பிய சில நிமிட துளிகளில் ராக்கெட் திசைமாறியது. உஉரிய இலக்கு நோக்கி செல்லாமல் கடலில் விழுந்தது. இதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் நிருபர்களிடம் தெரிவிக்கவுள்ளனர்.
செயற்கைகோள் ஜிசாட் - 5பி தகவல் தொடர்பு துறையை மேம்படுத்த உதவும்.இந்திய விண்வெளி ஆய்வு மையம், எஸ்.எல்.வி., - 3, ஏ.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., என நான்கு வகையான ராக்கெட்கள் மூலம் இந்திய மற்றும் பிற நாட்டு தயாரிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட் வரிசையில் ஏழாவதாகும்.
இது 51 மீட்டர் உயரமும், 418 டன் எடையும் உடையது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதி முன்னோக்கி செலுத்தும் 138 டன் திட எரிபொருளையும், 42 டன் ஹைபர்கோலிக் திரவ எரிபொருளையும் உடையது. இரண்டாம் பகுதி 39.4 ஹைபர்கோலிக் எரிபொருளையும், மூன்றாவது பகுதி 15.2 டன் எடை உடைய திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் கொண்ட கிரையோஜெனிக் பகுதியையும் உடையது.
செயற்கைக்கோள் முழுக்க, முழுக்க தகவல் தொடர்பு சேவைக்கு பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருந்தால் தொலைதொடர்பு, தொலை மருத்துவம், உள்ளிட்ட துறைகளில் பெரும் பங்காற்றியிருக்கும். தற்போதைய தோல்விக்கான காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இஸ்ரோ விளக்கம் :
ஜி.எஸ்.எல்.வி., எப்-6 ராக்கெட் வெடித்தது குறித்து 25 மற்றும் 26ம் தேதிகளில் ஆய்வு செய்யப்படும். அதன் பிறகே ராக்கெட் வெடித்ததற்கான முழு காரணம் தெரிய வரும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும் அவர் ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2.5 கி.மீ., தூரம் சென்றதும் ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. ராக்கெட்டுடனான கட்டுப்பாடு இழந்து விட்டது தோல்விக்கான காரணமாகயிருக்கலாம் எனவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
0 comments :
Post a Comment