லூமியா ஸ்மார்ட் போன் விலை குறையலாம்


மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தை வாங்கியதனால், அதன் முதல் முயற்சி, விண்டோஸ் ஸ்மார்ட் போன் மூலம், மொபைல் போன் சந்தையில், தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பதிலேயே அமையும். 

அந்த வகையில், 2014 ஆம் ஆண்டில், தற்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு சந்தைக்கு வந்து கொண்டிருக்கும், லூமியா போன்களின் விலை, இந்தியா உட்பட, பல நாடுகளில் விலை குறைக்கப்படலாம் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

87 கோடி பேர் மொபைல் பயனாளர்களாக உள்ள இந்தியாவில், 8.7 கோடி பேர் மட்டுமே, ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்தியாவில், ஸ்மார்ட் போன் விற்பனையை உயர்த்தி, அதில் பெரும்பான்மையான பங்கினைக் கொள்ள, மைக்ரோசாப்ட் விலை குறைப்பு முயற்சியை எடுக்கலாம். விலை குறைப்பு ரூ.2,000 முதல் ரூ.2,800 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்திய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் களான, கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற நிறுவனங்கள், ஸ்மார்ட் போன் விலையில் பெரும் சவாலைச் சந்திக்க வேண்டியதிருக்கும். கொரியாவின் சாம்சங் நிறுவனமும், இதில் சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் தொடக்கவிலை ரூ.5,000, இந்திய நிறுவனங்களின் ஸ்மார்ட் போன் விலை ரூ. 3,500 மற்றும் நோக்கியாவின் விலை ரூ. 9,000 ஆக உள்ளது. எனவே, நோக்கியா சாதனங்களின் விலை, வேண்டும் என்றே குறைக்கப்படுகையில், மற்ற நிறுவனங்கள் பெரிய போட்டியைச் சந்திக்க வேண்டும்.

நோக்கியாவின் லூமியா போன்கள் தற்போது 12 மாடல்களில், பல்வேறு நிலைகளில் வெளியாகி விற்பனையாகின்றன. அதிக விலையாக ரூ.33,000 என்ற விலையில் ஒரு மாடல் விற்பனையாகிறது. 

இத்தகைய ஸ்மார்ட் போன்கள், உலகின் மற்ற நாடுகளில் அதிகம் விற்பனையான போது, இந்தியாவில், இந்த விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் விற்பனை அவ்வளவாக எடுபடவில்லை. இதனால் தான், மொத்த மொபைல் விற்பனையில் தான் கொண்டிருந்த முதல் இடத்தை, நோக்கியா 2013 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தில், சாம்சங் நிறுவனத்திற்கு தர வேண்டியதாகிவிட்டது. 

மொத்த போன் சந்தையில், 70% விற்பனை மேற்கொண்டு இருந்த நோக்கியா, 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 27% என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தியாவில், பயனாளர்களிடையே அதிகம் விரும்பப்பட்ட இரண்டு சிம் இயக்க மொபைல் போன்கள் குறித்து, நோக்கியா கண்டு கொள்ளாததும் ஒரு காரணமாகும். 

மைக்ரோசாப்ட், ஸ்மார்ட் போன் விற்பனையில் மட்டுமே தன் முழு முயற்சிகளை எடுக்கும் எனத் தெரிகிறது. சில குறிப்பிட்ட வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் மொபைல் போன்களின் விற்பனைச் சந்தையிலிருந்து, மைக்ரோசாப்ட் விலகி இருக்க எண்ணலாம். 

பீச்சர் போன் என அழைக்கப்படும் இந்த சிறப்பு வசதிகள் கொண்ட போன் சந்தையில் தான், நோக்கியா நல்ல இடத்தைக்கொண்டுள்ளது. ஆனால், ஸ்மார்ட் போன் பயன்பாடு வளர்ந்து வருவதால், மைக்ரோசாப்ட் அதில் தன் ஈடுபாட்டினைக் காட்டாது என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அதிவேகமாக வளரும், ஆனால் இன்னும் அதிகம் கவனிக்கப்படாத ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தை, தொடர்ந்து சூடு பிடிக்கும் என சில கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

இது குறித்து ஆய்வு நடத்திய மெக்கின்ஸே அமைப்பு, இனி அடுத்து வரும் 20 கோடி இணையப் பயனாளர்கள், தங்களின் இணையத் தொடர்புக்கு, ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துவார்கள் என்று அறிவித்துள்ளது. 

இந்தியா மட்டுமின்றி, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் இலத்தீன் நாடுகளிலும் இதே நிலை உருவாகி வருவதாக, மெக்கின்ஸே குறிப்பிட்டுள்ளது. சென்னையில் உள்ள நோக்கியாவின் தொழிற்சாலையில், ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


2 comments :

திண்டுக்கல் தனபாலன் at September 22, 2013 at 1:00 PM said...

தகவல்களுக்கு நன்றி...

s at September 25, 2013 at 9:27 AM said...

Thanks for your information.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes