இணைய முகவரிகளும் குக்கி பைல்களும்


இணையத்தில் இணையும் ஒவ்வொரு டிஜிட்டல் சாதனத்திற்கும், அதனை அடையாளம் காட்டும் வகையில் இன்டர்நெட் புரோட்டோகால் முகவரி (IP Internet Protocol Address) தரப்படுகிறது. 

இது உங்களுக்கு மட்டுமேயான நிலையான முகவரியாக இருக்கலாம். அல்லது அவ்வப்போது மாறும் வகையிலான முகவரி யாகவும் இருக்கலாம். ஒவ்வொரு முறை நீங்கள் இணையத்தில் இணைகையில், இந்த முகவரி மாற்றிக் கொடுக்கப்படும். 

இணையத்தில் செயலாற்ற, ஓர் இணைய முகவரி அவசியம் தேவை. இது உங்களின் முகவரி அல்ல; நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் முகவரி. எப்படி உங்கள் வீட்டினை, வீட்டு முகவரி, பல்லாயிரக்கணக்கான வீடுகளின் நடுவே, அடையாளம் காட்டுகிறதோ, அதே போல, ஐ.பி. முகவரி, இணையத்தில் உங்கள் கம்ப்யூட்டரை அடையாளம் காட்டுகிறது. 

இந்த முகவரி இருந்தால் தான், ஒரு வெப் சர்வர், தன்னிடம் உள்ள இணையப் பக்கத்தினை, உங்கள் விருப்பத்தின் பேரில், உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்ப முடியும். இந்த முகவரியினை வைத்து, உங்களுடைய தனிப்பட்ட தனிநபர் தகவல்களைப் பெற முடியாது என்றாலும், உங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனம், உங்கள் முகவரியுடன், உங்கள் பெயர், முகவரி, கிரெடிட் கார்ட் எண் போன்ற பெர்சனல் தகவல்களை தொடர்புபடுத்த இயலும்.

இதனால், பதற்றமடைய வேண்டாம். ஒவ்வொரு இணைய சேவை நிறுவனமும் தங்களுக்கென பெர்சனல் தகவல் குறித்த கொள்கைப் பிடிப்பைக் கொண்டிருக்கின்றன. உங்கள் பெர்சனல் தகவல்களை அவை தெரிந்து கொண்டாலும், அவற்றை வெளியிடாது.

குக்கி பைல்கள் (Cookies) உங்களுடைய இணைய பழக்க வழக்கங்களைக் கண்டறிவதற்காக எழுதப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்கப்படுபவை. இணைய தளம் ஒன்றை நீங்கள் பார்வையிடுகையில், அந்த தளத்தால், இவை கம்ப்யூட்டரில் பதியப்படுகின்றன. 

இதன் மூலம் உங்கள் லாக் இன் தகவல்கள், உங்கள் விருப்பங்கள், நீங்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் பெர்சனல் விபரங்கள் ஆகியவற்றை தளத்தை நிர்வகிப்பவர்களுக்கு இந்த குக்கி பைல்கள் அனுப்புகின்றன. 

அவற்றிற்கேற்ற வகையில், தளத்தை நடத்துபவர்கள் தங்களிடம் உள்ள தகவல்களை அனுப்புகின்றனர். பெரும்பாலும், வர்த்தக நோக்கில் தங்கள் வர்த்தகம் வளரவே இந்த தகவல்கள் பயன்படுகின்றன. 

மேலும், உங்கள் இணைய இணைப்பு மற்றும் செயல்பாடுகள் இதன் மூலம் எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. நீங்கள் செல்லும் இணைய தளங்களினால் பதியப்படும் குக்கிகள் Firstparty cookies என அழைக்கப்படுகின்றன. சில விளம்பர நிறுவனங்கள் இந்த தளங்களை நடத்துபவர்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டு, இந்த தகவல்களைப் பெற்று, பின், அவர்களின் வர்த்தக நோக்கில் இவற்றைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய குக்கிஸ் பைல்களை Thirdparty cookies என அழைக்கின்றனர். 

ஆனால், இந்த ஒப்பந்தத்தினை மீறி, சில நிறுவனங்கள் இவற்றைத் தவறாகப் பயன்படுத்துகையில் நமக்குப் பிரச்னைகள் எழுகின்றன. எனவே, நம்மைப் பற்றிய தகவல்களை யாரெல்லாம் பகிர்ந்து கொள்கின்றனர் என நாம் அறியவேண்டியதுள்ளது. அல்லது அவ்வாறு பகிர்ந்து கொள்வதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது. 

குக்கீஸ் மற்றும் இணைய முகவரி மட்டுமின்றி, தேடல்கள் வழியாகவும் நம்மைப் பற்றிய தகவல்கள் மற்றவர்களுக்கு மாறுகின்றன. தேடல் இஞ்சின்கள் நம்முடைய தேடல் கேள்விகளை, அவற்றின் தன்மையை, தேடும் தகவல்களை, நம் ஐ.பி. முகவரியுடன் பதிந்து வைத்துக் கொள்கின்றன. கூகுள் இவற்றை 9 மாதங்கள் வைத்துக் கொள்கிறது. 

மைக்ரோசாப்ட் 18 மாதங்கள் பாதுகாத்து வைக்கிறது. ஒருவரின் ஐ.பி. முகவரியிலிருந்து வரும் தேடல்களின் அடிப்படையில், அவர் குறித்த தகவல்களை தேடல் இஞ்சின்களை இயக்கும் தளங்கள் அறிந்து கொள்கின்றன. பின்னர், அவற்றை அவையே பயன்படுத்துகின்றன. அல்லது மற்றவர்களுக்கு அளிக்கின்றன. 

அடுத்தபடியாக, நம்மைப் பற்றிய தகவல்களை வெளிக்காட்டுபவை நம் மின்னஞ்சல்களைக் கையாளும் சர்வர்களாகும். நாம் இணைய தளம் வழங்கும், (குகூள், மைக்ரோசாப்ட், யாஹு போன்றவை) மின் அஞ்சல் சேவையைப் பயன்படுத்தினால், நம் அஞ்சல்களிலிருந்து இவை நம்மைப் பற்றிய தகவல்களைத் திரட்டி வைக்கின்றன. இவற்றைக் கைப்பற்றும் ஹேக்கர்கள், நம்முடைய ஆர்வத்தின் அடிப்படையில், ஸ்பேம் மெயில்களை அனுப்ப முடியும்.

நீங்கள் இணைய வெளியில் என்னவெல்லாம் தேடுகிறீர்கள் என்பதனை, உங்கள் கம்ப்யூட்டரில் பதிவாகும், வெப் ஹிஸ்டரி யிலிருந்து தெரிந்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி இவற்றை அனைவரும் அறிந்து கொள்ளலாம். 

இவ்வளவு வழிகளில் நம் பெர்சனல் தகவல்கள் வெளியே போகும் வாய்ப்புகள் இருப்பதைப் பார்க்கையில், இணையம் பக்கமே போக வேண்டாம் என நீங்கள் ஒரு கணம் எண்ணலாம். ஆனால், அது இயலாது. எனவே தான், இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வுகளும் உள்ளன. 

இணையம் சென்று வந்தவுடன், குக்கீஸ் பைல்களை அழிப்பது, ஹிஸ்டரி பிரிவில் பதியவிடாமல் இணையத்தில் இயங்குவது ஆகியவை இதற்கான பல வழிகளில் சிலவாகும். எல்லா பிரவுசர்களும் நீங்கள் இணைய தளம் செல்கையில், அவற்றைப் பதியாமல் இருக்க வழிகளைத் தந்து வருகின்றன. பதியப்பட்டாலும், அவற்றை உடனடியாக அழிக்கவும் முடியும். 

மேலும், நீங்கள் யாரென அறியப்படாமலேயே, இணையத்தில் உலா வருவதற்கும் anonymous Web surfing என்ற வகையில் வழிகள் உள்ளன. பாதுகாப்பான முறையில் இணையத்தைப் பயன்படுத்த ShopShield மற்றும் Anonymizer போன்ற புரோகிராம் சேவைகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை ஒவ்வொரு முறையும் நமக்கென தற்காலிக இமெயில் முகவரிகளைத் தருகின்றன. யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும் இவை வழங்குகின்றன. 

இணையத்தில் பாதுகாப்பாக இயங்க பல வழிகளை இணையத்திலேயே காணலாம். இவற்றின் மூலம், உங்களுடைய பெர்சனல் தகவல்களைப் பாதுகாக்கலாம்.


1 comments :

பொன் மாலை பொழுது at August 2, 2013 at 10:42 PM said...

விளக்கங்களுக்கு நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes