பேஸ்புக்கில் 83 சதவீத இந்திய மாணவர்கள்




இணையற்ற ஒரு தொழில் நுட்ப புரட்சியில், அதனால் ஏற்படும் மாற்றங்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

இன்னும் பத்தாண்டுகள் கழித்து பள்ளி செல்லத் தொடங்கும் சிறுவனுக்கு, எப்படி நாம் இன்டர்நெட் இல்லாமல் வாழ்ந்தோம் என்பதைச் சுட்டிக் காட்டவே முடியாது. அந்த அளவிற்கு இணையம் நம் வாழ்வின் ஓர் அங்கமாக, நம் வாழ்வின் நடைமுறையை மாற்றும் சாதனமாக மாறி வருகிறது.

இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 15 கோடியை எட்டியுள்ளது. சீனா (57.5 கோடி) அமெரிக்காவினை (27.4 கோடி) அடுத்து, மூன்றாவதான இடத்தை இந்தியா எட்டியுள்ளது. 

அண்மையில் டாட்டா கன்சல்டன்சி சேவை (டி.சி.எஸ்.) நிறுவனம், 17 ஆயிரம் மாணவர்களுக்கும் மேலானவர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுக@ள இங்கு தரப்படுகின்றன. இந்திய மெட்ரோ நகரங்களில் உள்ள மாணவர்களில், நான்கில் ஒருவர், தங்கள் மொபைல் போன்களில், இன்டர்நெட் பிரவுஸ் செய்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் 1 முதல் 2 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். 72 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் ஐந்தில் ஒருவர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போன் வழி இணையப் பயன்பாடு, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 

ஆனால், சிறிய நகரங்களில், இணைய இணைப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருப்பதால், அங்கு வசிக்கும் மாணவர்கள், இன்னும் இன்டர்நெட் மையங்களிலேயே இணையத் தேடலை மேற்கொள்கின்றனர். 

சிறிய மற்றும் பெரிய நகரங்களில் இயங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வி கற்றுத் தரும் முறையினை, டிஜிட்டல் மயமாக மாற்றினாலும், 83 சதவீத மாணவர்கள் இணைய உலாவிற்கு வீடு அல்லது இன் டர்நெட் மையங்களையே விரும்புகின்றனர். 

இது இன்டர்நெட், மொபைல் மற்றும் சமுதாய இணைய தளங்களின் காலமாக மாறிவிட்டது. மாணவர்கள் உட்பட, பலரும் மக்களைச் சந்திக்கும் இடமாக, சமுதாய இணைய தளங்கள் மாறி வருகின்றன. 

ஒவ்வொரு சமுதாய இணைய தளமும் அதன் தன்மைக்கேற்ப, தன் மக்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 83.38 சதவீத மாணவர்கள் பேஸ்புக் இணைய தளத்தில் தங்களைப் பதிந்துள்ளனர். 

இதனுடன் ஒப்பிடுகையில், மற்ற சமூக இணைய தளங்களான ட்விட்டர், லிங்க்டு இன் மற்றும் ஆர்குட் போன்றவை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன. இருப்பினும் லிங்க்டு இன் போன்ற தளங்கள், மெட்ரோ நகரங்களில் உள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்களைக் கொண்டுள்ளது என்பதைப் பார்க்கையில், மெட்ரோ மற்றும் சிறிய நகரங்களில் உள்ள மாணவர்களின் மன நிலையையும் விரும்பும் விஷயங்களையும் அறிய முடிகிறது.

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களையே தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள, 73.68 சதவீத இந்திய மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். இப்போது மின் அஞ்சல் பயன்பாடு, இதனால் தொடர்ந்து குறைந்து வருகின்றது. 

பத்தில் நான்கு மாணவர்கள் இணையம் வழி பொருட்கள் வாங்குவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். கிரெடிட் கார்ட் மட்டுமின்றி, டெபிட் கார்ட், நெட் பேங்கிங், பொருள் வழங்கும்போது பணம் எனப் பல வசதிகளை ஆன்லைன் ஷாப்பிங் மையங்கள் அளிப்பதால், ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 

ஆனால், இந்திய மாணவர்களிடையே எந்த எந்த பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கும் பழக்கம் உள்ளது என்பதனைப் பார்க்கையில், அது இடத்திற்கேற்ற வகையில் வேறுபடுகிறது. மிக அதிகமாக விற்பனை செய்யப்படுவது திரைப்படங்களுக்கான அனுமதிச் சீட்டுகளே. 61.71 சதவீத இந்திய இணைய மாணவர்கள், திரைப்பட டிக்கட்களை இணையம் வழியாகவே வாங்குகின்றனர். 

இதில் என்ன வேடிக்கை என்றால், மெட்ரோ நகர மாணவர்களைக் காட்டிலும், சிறிய நகரங்களில் வாழும் மாணவர்களே, அதிகம் டிக்கட்களைப் பெறுகின்றனர். அடுத்ததாக, இணையத்தில் மாணவர்கள் அதிகம் வாங்குவது டிவிடி/ நூல்கள் மற்றும் மியுசிக் சாதனங்களே. இதனை அடுத்து வருவது விமான மற்றும் ட்ரெயின் டிக்கட்களாகும். 

இந்திய மாணவர்கள் இணையத்தில் அதிகம் மேற்கொள்ளும் செயல்பாடு எது? 74 சதவீத மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த ஆய்வு குறித்த தகவல்களைப் பெற இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். 62.35 சதவீத மாணவர்கள் இணையம் வழி அரட்டை, வலைமனை வழி தகவல் பரிமாற்றம், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளல் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர். 

49.10 சதவீத மாணவர்கள் மின் அஞ்சலுக்கும், 45.47 சதவீத மாணவர்கள் இசை சார்ந்த கோப்புகளை டவுண்லோட் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். 

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், டாட்டா கன்சல்டன்சி நிறுவனம், டி.சி.எஸ். ஜென் ஒய் சர்வே 2012 என்ற தலைப்பில், இந்தியாவின் 12 நகரங்களில், 17,478 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்விலிருந்து அறியப்பட்ட தகவல்களாகும். 

இந்த ஆய்வு, ஆகஸ்ட் 2012 முதல், டிசம்பர் 2012 வரை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1660 பள்ளிகளில் படிக்கும் 12 முதல் 18 வயதான மாணவர்களும் கலந்து கொண்டனர்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes