வருகிறது அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்

எடை மற்றும் அளவு குறைவாக வடிவமைக்கப்பட்டு, பெர்சனல் கம்ப்யூட்டரின் இடத்தை லேப்டாப், நோட்புக் கம்ப்யூட்டர்கள் பிடித்தன. லேப்டாப் கம்ப்யூட்டர்கள் தயாரித்த நிறுவனங்கள், அவற்றின் தடிமனை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து, இந்த போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.

சென்ற மே மாதம் நடைபெற்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பக் கண்காட்சியில், இன்டெல் நிறுவனம், மிக மிக எடை குறைந்த, ஒரு அங்குலத்திற்கும் குறைவான தடிமனில் இனி கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்படும் என்று அறிவித்தது.

இது அதிக நேரத்திற்கு மின்சக்தி வழங்கும் பேட்டரியைக் கொண்டு, உடனடி யாக புரோகிராம்களைச் செயல் பாட்டிற்குக் கொண்டு வரும் திறனைக் கொண்டிருக்கும் என்றும் அறிவித்தது. இதனை அல்ட்ராபுக் கம்ப்யூட்டர் என்றும் பெயரிட்டது.
இப்போது மிக மிக குறைந்த தடிமனில் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர் என்ற பெயரில், புதியதாக கம்ப்யூட்டர்களை வடிவமைப்பதில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதனை அல்ட்ரா போர்ட்டபிள் லேப்டாப் (Ultra Portable Laptop) எனவும் அழைக்கின்றனர்.

இவை தற்போது வேகமாக வளர்ந்து வரும் நோட்பேட் கம்ப்யூட்டருக்குப் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன் முதலில் ஆப்பிள் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், தன் ஐபேட் கம்ப்யூட்டரை வெளியிட்ட போது, அதன் மெல்லிய வடிவமைப்பிலும், குறையாத பயன் பாட்டிலும் மயங்கிய மக்கள் பெரும் அளவில் அவற்றை வாங்கிப் பயன்படுத்தினர். இதனால், கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் நோட்பேட் கம்ப்யூட்டரைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்தன.

இப்போது டேப்ளட் கம்ப்யூட்டரைக் காட்டிலும் அதிக திறன் கொண்ட தாகவும், அழகாகவும் இந்த அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கும் அசூஸ் (Azus) நிறுவனம் இந்த அல்ட்ரா புக் கம்ப்யூட்டரை முதன் முதலில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்று தெரிகிறது. ASUS UX21 என்ற பெயருடன் வரும் 2012 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இது கிடைக்கலாம். அநேகமாக இது ரூ.45,000 முதல் ரூ.50,000 வரையில் விலையிடப்படும்.

இதனைத் தொடர்ந்து ஏசர் (Acer) நிறுவனமும் இந்த முயற்சியில் இறங்கி யுள்ளது. அடுத்ததாக ஏசர் (Acer) நிறுவனம் Acer Aspire 3951 என்ற பெயரில் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர் ஒன்றை விரைவில் கொண்டு வரும் எனவும் உறுதியாகத் தெரிகிறது.

அல்ட்ரா புக் கம்ப்யூட்டர் வடிவமைப்பின் பின்னணியில் இன்டெல் நிறுவனத்தின் முயற்சி அதிகமாக இருக்கிறது. இதற்கான தொழில் நுட்ப வளர்ச்சிக்கென 30 கோடி டாலர் நிதியகம் ஒன்றை இன்டெல் ஏற்படுத்தி, ஆய்வினை மேற்கொள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறது. 2012 இறுதிக்குள், தற்போதுலேப்டாப் பயன்படுத்தி வருபவர்களில் 40% பேரை அல்ட்ராபுக் கம்ப்யூட்டருக்கு மாற்ற இன்டெல் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஒரு அல்ட்ராபுக் கம்ப்யூட்டரின் தடிமன் ஒரு அங்குலத்திற்கும் குறைவாக இருக்கும். உலோகக் கலப்பிலான வெளிப்பக்கங்கள் கொண்ட இதன் எடை ஒரு கிலோ அளவில் இருக்கலாம். 11 முதல் 13 அங்குல டிஸ்பிளே திரை கிடைக்கும். பின்புற ஒளியுடன் கூடிய கீ போர்டு, யு.எஸ்.பி. 2 அல்லது 3 வசதி கொடுக்கப்படும். இதில் டிவிடி ட்ரைவ் இருக்காது. (இனிமேல் எந்த கம்ப்யூட்டரிலும் இது இருக்குமா என்பது சந்தேகமே!)

இந்த அல்ட்ராபுக் கம்ப்யூட்டருக்குப் போட்டியாக இப்போதே ஒன்று போர்ட்டபிள் கம்ப்யூட்டர் சந்தையில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன் பெயர் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர் இல்லை என்றாலும், அதன் அனைத்து அம்சங்களும் இதில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் என்னும் கம்ப்யூட்டராகும். நெடுநேரம் மின்சக்தி தக்க வைத்து தரும் பேட்டரி, குறைவான தடிமன் என இந்த கம்ப்யூட்டரும் உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் 9 என்ற வகைக் கம்ப்யூட்டரும் இதே போன்றதே என்று எண்ணப்படுகிறது.

அல்ட்ராபுக் கம்ப்யூட்டரின் அம்சங்கள் என்னவாகும் இருக்கும் என்று தேடியபோது, கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன. இன்டெல் நிறுவனத்தின் Core i3/i5/i7 ப்ராசசர்களில் ஒன்று, 160 ஜிபி சாலிட் ஸ்டேட் ஹார்ட் டிஸ்க், புளுடூத் 4.0., குறைந்தது 6 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் பேட்டரி, 13.3 அங்குல திரை, 13மிமீ தடிமன் மற்றும் எடை 1.4 கிலோவிற்கும் குறைவாக இது அமையும். திரையின் ரெசல்யூசன் 1366x768 பிக்ஸல்களாக இருக்கலாம். எடை குறைந்த, தடிமன் அதிகம் இல்லாத கம்ப்யூட்டர் என்றால், யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்!


1 comments :

Unknown at September 6, 2011 at 1:52 PM said...

நல்ல பயனுள்ள செய்தியை பதிவு செய்துள்ளீர். வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes