கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர்

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போது மாடுகளுக்கும் பொருந்துகிறது.


இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது.


படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள "பகீர்' தகவல்கள் வருமாறு: மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது.

கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர். அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது.

எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது.


மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர்.


அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர்.


அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.



சாப்பிடும் ஜெலட்டின்:


இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் 50 முதல் 60 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை சேர்க்கப்படுகிறது.



பார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்:


டியூப் மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள் மற்றும் "சிரப்'களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. போட்டோ ஜெலட்டின்கள், பட பிலிம்கள், எக்ஸ்ரே பிலிம்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.



எலும்பு பவுடர் உரம்:


வெளிநாடுகளில், எலும்பு பவுடர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில் எலும்பு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த உரமாக இருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுகளின் விவசாயிகள் உணர்ந்துள்ளனர்.


மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிகளவில் உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு எலும்பு பவுடர்களை உரமாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு பவுடர்கள், கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.


கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று மாதங்களில் அவை இறைச்சிக்கு தயாராகி விடுகின்றன. இப்படி, மாட்டு எலும்புகள், உணவு, மருத்துவம், உரம் ஆகியவற்றில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு பொருட்களில் பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிந்தால், விற்பனை பாதிக்கும் என்பதால், அவற்றை தயாரிப்பாளர்கள் மறைக்கின்றனர்.



0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes