கோவையில் கொடூர வதந்தி; மக்கள் பெரும் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த விபத்தில், எல்.கே.ஜி., குழந்தைகள் 30 பேர் இறந்து விட்டதாக, பரப்பப்பட்ட வதந்தியால், பொது மக்கள் பெரும் பீதிக்குள்ளாயினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மொபைல்போன் சந்தாதாரர் பலருக்கு, வந்த எஸ்.எம்.எஸ்.,சில், "கோவில்பட்டி பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்தில், கே.ஆர்.பள்ளியைச் சேர்ந்த, 30 எல்.கே.ஜி., மாணவர்கள் இறந்து விட்டனர்; 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்; அவர்களுக்காக மன்றாடவும்' என, ஆங்கிலத்தில் தகவல் இருந்தது.



இந்த தகவலை உறுதிப்படுத்தாமலே பலர், தங்களது நண்பர்களுக்கு அனுப்பி, இரவு 8.00 முதல் 9.00 மணிக்குள், பல ஆயிரம் மொபைல் சந்தாதாரர்களை சென்றடைந்தது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், அந்தப் பகுதியில் உள்ள தங்களது உறவினர் மற்றும் நண்பர்களிடம், இத்தகவலைப் பற்றி, விவரம் கேட்டனர்.


"டிவி'யிலும், இணைய தளங்களிலும், "பிளாஷ் நியூஸ்'லும் தகவல் வராத காரணத்தால், பத்திரிகை அலுவலகங்களை துளைத்தெடுக்க ஆரம்பித்தனர்.


போலீஸ் அதிகாரிகளும், அங்குள்ள போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். நீண்ட நேர விசாரணைக்குப்பின், "அப்படி ஒரு விபத்து நடக்கவே இல்லை' என்று தெரியவந்தது; ஆனாலும், எஸ்.எம்.எஸ்., பரிமாற்றம் நின்றபாடில்லை. இப்படி ஒரு வதந்தி, எங்கிருந்து, எதற்காக கிளப்பி விடப்பட்டது என்று, மெசேஜ் அனுப்பிய நண்பர்களில் ஆரம்பித்து, ஒவ்வொருவராகப் பின் தொடர்ந்து பார்த்தபோது, பலருக்கு அறிமுகமில்லாத மொபைல் எண்களில் இருந்து, இந்த எஸ்.எம்.எஸ்., வந்திருப்பது தெரியவந்தது. மதப் பிரசாரம் செய்யும் ஓர் அமைப்பில் இருந்து, இந்த மெசேஜ் வந்ததாக ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள இந்த சபைக்கு, சென்று விவரம் கேட்டபோது, அவர்களுக்கும் வேறு எங்கிருந்தோ தகவல் வந்ததாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், எங்கிருந்து முதன் முதலாக இந்த, "மெசேஜ்' கிளம்பியது என்பதை, யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes