தென்னாப்பிரிக்காவில் காந்தி தங்கியிருந்த வீடு விற்பனை

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வீட்டில்தான் மகாத்மா காந்தி 3 ஆண்டுகள் தங்கியிருந்தார்.

இந்த வீடு விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியும், இதை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களில் சிலர் மட்டுமே சிறிதளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜோகன்னஸ்பர்க்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு மரங்கள் சூழ கட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராயிருந்த ஹெர்மான் காலின்பாக் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார்.

மேற்கூரை வேயப்பட்ட இந்த வீட்டில் 1908-ம் ஆண்டிலிருந்து காந்தி மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் நான்சி பால் கடந்த 25 ஆண்டுகளாக இதில் வசித்து வந்தார். இவர் தற்போது கேப் டவுனுக்கு குடிபெயரத் திட்டமிட்டுள்ளார்.

பிரசித்தி பெற்ற இந்த வீட்டை வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் அவர் விளம்பரம் கொடுத்து இதை விற்க முடிவு செய்துள்ளார் என்று அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த வீட்டின் விலையை அவர் தெரிவிக்கவில்லை

இதனிடையே விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக் கழகத்தின் இந்திய கல்வி குறித்த பிரிவை உருவாக்கிய ஸ்டீபன் கெல்ஃபின் உதவியை நான்சி பால் நாடியுள்ளார்.

இந்த வீட்டை வாங்கக் கூடிய இந்தியர்களை தேடி வருகிறார் ஸ்டீபன் கெல்ஃப். இந்த வீட்டை வாங்கி இங்கு வரும் பேராசிரியர்கள் தங்கிச் செல்லும் இல்லமாக இதை மாற்றுவது குறித்தும் அவர் ஆராய்ந்து வருகிறார்.

இந்திய வம்சாவளி சமுதாயத்தினர் வெகு குறைவாகவே இப்பகுதியில் உள்ளனர். அவர்களில் யாரும் இந்த வீட்டை வாங்குவது தொடர்பாக ஆர்வம் காட்டவில்லை என்று கெல்ஃப் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கில் மற்றொரு இடமும் மிகவும் பிரபலமானது. இங்குள்ள காந்தி பண்ணையில்தான் தனது ஆதரவாளர்களுடன் சத்யாகிரஹத்தை அவர் போதித்தார்.

தொடக்கத்தில் டர்பனின் வட பகுதியில்தான் மகாத்மா காந்தியின் ஆதரவாளர்கள் பலரும் குடியேறினர். இங்குதான் சத்யாக்கிரஹத்தை அவர் போதித்தார். பின்னரே அவர் தனது போராட்டத்தை இனவெறிக்கெதிரான போராட்டமாக மாற்றினார். 1800 மற்றும் 1900-ம் ஆண்டுகளில் அவர் நடத்திய போராட்டத்தின் விளைவு இன்றும் நினைவு கூரப்படுகிறது. பல நிறுவனங்களும், தெருக்களும் காந்தியின் பெயரை தாங்கி நிற்கின்றன.

மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் சமீபத்தில் லண்டனில் ஏலத்துக்கு வந்தது. அதை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பெரும் தொகை கொடுத்து வாங்கி அரசிடம் ஒப்படைத்தார். தற்போது காந்தி வசித்த வீடு விற்பனைக்கு வர உள்ளது


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes