பேஸ்புக் அக்கவுண்ட்டிற்கு வாரிசு

சமூக இணைய தளமாகிய பேஸ்புக், அண்மையில், 'Legacy Contact' என்னும் டூல் ஒன்றைப் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் மூலம், இத்தளத்தில் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர் இறந்தால், அவருடைய அக்கவுண்ட்டினை, அவரின் பக்கத்தினை நிர்வகிக்க ஒருவரை நியமிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.

நாமே நமக்கான வாரிசை நியமிக்கலாம். இவர் நம் பக்கத்தில் தகவல்களைப் பதியலாம்; நண்பர்களின் வேண்டுகோள்களை நிர்வகிக்கலாம். நம் முகப்பு பக்கம், அதில் உள்ள போட்டோக்கள் மற்றும் நாம் தேக்கி வைத்துள்ள தகவல்களை, இறந்தவர் சார்பாக நிர்வகிக்கலாம். 

ஆனால், அவர்கள் நாம் லாக் இன் செய்வது போல நம் பக்கத்தில் செல்ல முடியாது. நம் தனிப்பட்ட தகவல்களைப் படிக்க இயலாது. டைம்லைன் மற்றும் முன்பு நாம் இட்ட லைக் மற்றும் கமெண்ட்களைப் படிக்க முடியாது.

பல வாடிக்கையாளர்கள், தாங்கள் இறந்த பின்னர், தங்களின் பக்கத்திற்கு என்ன கதி ஏற்படும் எனக் கவலைப் பட்டதால், இந்த ஏற்பாட்டினை பேஸ்புக் மேற்கொண்டுள்ளது என பேஸ்புக் நிறுவன வலை மனைப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இதனை http://newsroom.fb.com/news/2015/02/addingalegacycontact/ என்ற முகவரியில் உள்ள தளப் பக்கத்தில் காணலாம். 

பேஸ்புக் என்பது நண்பர்கள் மற்றும் நம் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, ஒருவருக்கொருவர் தகவல்களை, அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கான இடம் ஆகும். 

ஆனால், பலருக்கு இதுவே நம்மைவிட்டுப் பிரிந்த ஒருவரின் நினைவைப் போற்றும் இடமாகவும் உள்ளது. பேஸ்புக் வாடிக்கையாளர் ஒருவர் இறந்த பின்னர், அவரின் பக்கத்தினை அவரின் வாழ்க்கை, நண்பர்கள் மற்றும் அனுபவத்தின் நினைவிடமாக மாற்றிப் போற்றலாம்.

இந்த வகையில் இந்த 'Legacy Contact' டூல் நமக்கு உதவுகிறது. ஒருவர் இறந்து விட்டார் என்பது உறுதியாகத் தெரிந்தவுடன், அவருடைய அக்கவுண்ட், அவரின் நினைவிடமாக மாற்றப்படும். 

அவரின் வாரிசாக அறியப்பட்டவர், அவருடைய காலப் பக்கத்தின் தலைப்பில் அவர் மரணம் குறித்த தகவலை அமைக்கலாம். இதுவரை அவருடன் தொடர்பில் இல்லாமல், தற்போது பேஸ்புக் தளத்தில் இணையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வேண்டுதல்களுக்குப் பதில் அளிக்கலாம். பக்கத்தில் உள்ள படத்தையும், கவர் போட்டோவினையும் அப்டேட் செய்திடலாம். 

இந்த வாரிசை நியமிப்பவர், தன் மரணத்திற்குப் பின்னால், தன் வாரிசாகச் செயல்பட இருப்பவர், தன்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள், போட்டோக்கள் ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்திட முன்பாகவே அனுமதி அளிக்கலாம். 

ஆனால், வாரிசாகச் செயல்படுபவர், இறந்தவர் போல அவர் பக்கத்தில் லாக் இன் செய்து, செயல்பட முடியாது. அவரின் தனிப் பட்ட தகவல்களைப் பெறவும் முடியாது. 

இந்த வாரிசு நியமனம் செய்திட, எப்படி 'Legacy Contact' டூலைப் பயன்படுத்துவது? உங்கள் பக்கம் சென்று செட்டிங்ஸ் (settings) திறக்கவும். தொடர்ந்து Security தேர்ந்தெடுக்கவும். 

பின்னர், அப்பக்கத்தின் கீழாக உள்ள Legacy Contact என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்த பின்னர், நீங்கள் வாரிசாக நியமிப்பவருக்கு, மெசேஜ் ஒன்று அனுப்பலாம். விருப்பப்பட்டால், தேர்ந்தெடுத்த தகவல்களை, படங்களின் தொகுதியை தரவிறக்கம் செய்திட அனுமதி தரலாம்.

குறிப்பிட்டவர் இறந்த பின்னர், அத்தகவல் உறுதி செய்யப்பட்ட பின்னர், அவரின் பக்கத்தில் அவரின் பெயருக்கு மேலாக, “அவர் நினைவாக” என்னும் பொருளில், “Remembering” என்ற சொல் சேர்க்கப்படும். 

இந்த வாரிசு அமைக்கும் டூல், முதலில் அமெரிக்க நாட்டின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர், படிப்படியாக, மற்ற நாட்டவருக்கும் வழங்கப்படும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes