விண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பேக் அப் வசதிக்கு புதிய சில டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. File History மற்றும் Refresh என்னும் பேக் அப் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பேக் அப் டூல்ஸ்களுக்குப் பதிலாகத் தரப்பட்டுள்ளது. 

இருப்பினும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் இணைந்தே இருக்கிறது. ஆனால், இவை மறைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 

இவற்றை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். ஏனென்றால், விண் 7 டூல்ஸ் பயன்படுத்தி, முழு சிஸ்டம் இமேஜ் பேக் அப் உருவாக்க முடியும். 

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த டூல்ஸ் “backup” போன்ற சொற்களை சர்ச் பாக்ஸில் போட்டு தேடினாலும் கிடைக்காது. 

இவற்றைப் பெற, விண்டோஸ் கீயினை அழுத்தவும். பின்னர் “backup” என்பதற்குத் தேடவும். பின்னர், Settings category தேர்ந்தெடுத்து, Save backup copies of your files with File History என்ற விண்டோவினைத் திறக்கவும். இந்த File History விண்டோவில், கீழ் இடது மூலையில், Windows 7 File Recovery என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். 

இங்கு பழைய விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் “Windows 7 File Recovery.” என்ற பெயரில் இருப்பதனைக் காணலாம். இதனை இயக்கினால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் செயல்பட்டது போலவே இதுவும் செயல்படுவதனைக் காணலாம். 

ஆனால், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் என இரண்டினையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடாது, என விண்டோஸ் 8 சிஸ்டம் கூறுகிறது. எனவே, விண்டோஸ் 7 அடிப்படையில் பேக் அப் காலத்தினை செட் செய்திருந்தால், விண்டோஸ் 8 தரும் File History கிடைக்காது. 

இந்த விண்டோவினை உடனடியாகப் பெறுவதற்கு இன்னொரு வழியும் உள்ளது. recovery எனச் சொல்லிட்டு தேடினால், Windows 7 File Recovery கிடைக்கும். 

1.முழு சிஸ்டம் பேக் அப் ஆக:

விண்டோஸ் 8 பேக் அப் டூல்ஸ் போல இல்லாமல், விண்டோஸ் 7 பைல் ரெகவரி டூல்ஸ் பயன்படுத்தி, முழு சிஸ்டம் இமேஜ் ஒன்றை பேக் அப் செய்திடலாம். சிஸ்டம் இமேஜ் என்பது, நம் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களின் காப்பி ஆகும். 

இந்த இமேஜை மீட்டு செயல்படுத்தினால், அனைத்து பைல்களும் நமக்குக் கிடைக்கும். பைல்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள் மற்றும் செட்டிங்ஸ் அமைப்புகளும் மீளப் பெறலாம். 

சிஸ்டம் இமேஜ் பேக் அப் செய்திட, சைட் பாரில் உள்ள Create a system image option என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இமேஜை ஹார்ட் டிஸ்க்கில் பதியலாம்; அல்லது பல டிவிடிக்களில் பதியுமாறு கட்டளை கொடுக்கலாம். 

நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இருந்தால், பிற கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அல்லது இணைக்கப்பட்ட போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் என எதிலும் பதியலாம். கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களின் இமேஜ் என்பதால், இது சற்று பெரியதாகவே இருக்கும்.

2. பேக் அப் இமேஜ் ரெஸ்டோர் செய்திட:

கம்ப்யூட்டரில் உள்ள அனைத்தையும் ஒரு இமேஜாகப் பேக் அப் செய்திட்ட பின், என்றாவது ஒரு நாள், அவற்றை விரித்துப் பைல்களைப் பெற்று பயன்படுத்த வேண்டும். இதற்கு PC settings ஸ்கிரீனைத் திறக்கவும். அடுத்து Windows Key+C அழுத்தவும். 

Settings கிளிக் செய்து, அதில், Change PC settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் General category என்பதைனைத் தேர்ந்தெடுத்து, கீழாக Advanced startup என்ற ஆப்ஷன் கிடைக்கும் வரை செல்லவும். 

இப்போது கம்ப்யூட்டரை மீண்டும் இயக்க, இந்த மெனுவில், Restart now என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது Advanced options என்ற திரை காட்டப்படும். இதில் Troubleshoot > Advanced Options > System Image Recovery எனச் செல்லவும். இங்கு சிஸ்டம் இமேஜ் கிடைக்கும். 

இதிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை ரெஸ்டோர் செய்திட இயலும். விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திட பல முறை முயற்சித்தும் இயலவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டர் தானாக அட்வான்ஸ்டு ஸ்டார்ட் அப் ஆப்ஷன்ஸ் என்னும் வழிமுறைக்குச் செல்லும். 

அல்லது பூட் செய்திடுகையில், ஷிப்ட் கீயினை அழுத்தியவாறு இருப்பதன் மூலம் பூட் செய்திடலாம். இல்லை எனில், விண்டோஸ் 8 இன்ஸ்டலேஷன் டிஸ்க் அல்லது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம் பூட் செய்து, பின்னர் பேக் அப் செய்த பைல்களைப் பெறலாம். 

3. பேக் அப் காலம் செட் செய்திட: நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் பைல் ஹிஸ்டரி வழி பேக் அப் விரும்பாமல், விண்டோஸ் 7 சிஸ்டத்தின் பேக் அப் வழிகளை விரும்பினால், Windows 7 File Recovery விண்டோவில், Set up backup லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதில் விண்டோஸ் 7 சிஸ்டம் பாணியில், சிஸ்டம் ஷெட்யூல் செட் செய்திடலாம். 

விண்டோஸ் 8 பைல் ஹிஸ்டரி பேக் அப் டூலில் சில வரையறைகள் உள்ளன. இந்த வழியின் மூலம், சிஸ்டம் லைப்ரரீஸ் பிரிவில் உள்ள பைல்களை மட்டுமே பேக் அப் செய்திட முடியும். எனவே, இதனைத் தவிர்த்து வேறு போல்டரில் உள்ள பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் எனில், அவற்றை லைப்ரரீஸ் பிரிவில் சேர்க்க வேண்டும். 

ஆனால், விண்டோஸ் 7 டூல்ஸ், முழுக் கம்ப்யூட்டருக்குமான பைல்களை இமேஜ் பைலாகத் தருவதால், இதுவே எளிய வழியாகவும், அனைவரும் விரும்பும் சாதனமாகவும் உள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes