லினக்ஸ் எதிர்ப்பார்ப்புகள்

வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு லினக்ஸ் சிஸ்டம் மிகவும் உதவியாக உள்ளது எனவும் பலர் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் லினக்ஸ் உபுண்டு பதிப்பு 10.10, பயன்படுத்துபவருக்கு இயக்க எளிமையாகவும், பயன்கள் பல தருவதாகவும் கூறியுள்ளனர். அதே சமயத்தில் பாதுகாப்பு மற்றும் பயன்களில் சிறிதும் குறைவின்றி இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

ஆனால் புதியதாக லினக்ஸ் பயன்படுத்தும் பலர் தாங்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் இதில் இல்லயே எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இது லினக்ஸின் குற்றம் இல்லை. லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் இப்போது ஒரு புதிய சுதந்திரமான உலகை அனுபவிப்பார்கள்.

அடிக்கடி தொகுப்புகளை மற்றும் அதற்கேற்ற கம்ப்யூட்டர்களை, அதிக கட்டணத்தில் மாற்றும் வேலை இல்லை. எது எப்போது கம்ப்யூட்டருக்குள் வந்து, நம் தகவல்களை, பைல்களைத் திருடுமோ என்ற அச்சம் இல்லை. எப்போது சிஸ்டம் முடங்கிப் போய் நம் வேலைகளை நிறுத்துமோ என்ற கவலை இல்லை.

ஆனால், விண்டோஸ் தொகுப்பில் இருந்து மாறியதால், பயனாளர்களுக்குச் சிறிது எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது போலத் தோற்றமளிக்கலாம். அவை இதுவரை விண்டோஸ் சிஸ்டத்திலேயே ஊறிப்போனதன் விளைவுதான். அவற்றை இங்கு காணலாம்.


1. விண்டோஸ் எதிர்பார்ப்பு:

மனிதர்கள் என்றைக்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்கள். இதனாலேயே உபுண்டு மற்றும் பிற லினக்ஸ் பதிப்பு வழங்குபவர்கள், விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் தரும் பயன்களை, லினக்ஸ் பதிப்புகளிலும் புகுத்தியுள்ளனர்.

குறிப்பாக, உபுண்டு பதிப்பு, விண்டோஸ் தரும் பல வசதிகளை உள்ளடக்கியுள்ளது. ஆனால், இவற்றில் சற்று சிறிய அளவில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்திடும். பழகிய மனமோ, விண்டோஸ் போலவே இல்லை என்று எதிர்பார்ப்பில் சற்று வருத்தப்படுகிறது. இது போகப்போக சரியாகிவிடும்.


2. "ரூட்' வழி தேவையில்லை:

விண்டோஸ் இயக்கத்தின் அட்மினிஸ்ட்ரேட்டர் போல, லினக்ஸ் "ரூட்' வழி கொண்டிருந்தாலும், பயனாளராகப் பலர் இதனை, எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி முழு சுதந்திரத்துடன் பயன்படுத்த முடியும். இந்த வகையில், முழுமையான பாதுகாப்பினை லினக்ஸ் தருகிறது. "ரூட்' வழியாகத்தான் செல்ல வேண்டுமோ என்ற தயக்கம் பலரிடத்தில் உள்ளது. இந்த பயம் தேவையில்லை. தேவையிருப்பின் "ரூட்' வழி செல்ல பாஸ்வேர்ட் பெற்று செல்லலாம். இந்த தேவை எப்போதாவதுதான் ஏற்படும்.

3. சாப்ட்வேர் இலவசம்:

விண்டோஸ் இயக்கத்தில் பழகிய பின்னர், பல சாப்ட்வேர் தொகுப்புகள் பயன்பாட்டிற்கு இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் ஒரு எல்லைக்குப் பின் இவற்றைக் கட்டணம் செலுத்தியே முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது. அந்தக் கவலை லினக்ஸில் இல்லை. பெரும்பாலும் அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும் இலவசமாகவே கிடைக்கின்றன.

ஒவ்வொரு லினக்ஸ் பதிப்பும் ஒரு மையத்தைக் கொண்டு இயங்குகின்றன. அங்கு அனைத்து பயன்பாட்டு தொகுப்புகளும் பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, உபுண்டு பதிப்பிற்கு, உபுண்டு சாப்ட்வேர் சென்டர் இயங்குகிறது.

4. கட்டளை வரி தயக்கம்:

கமாண்ட் லைன் எனப்படும் கட்டளை வரி, லினக்ஸில் அடிப்படையாக இயங்குகிறது. இது விண்டோஸ் இயக்க பயனாளர்களுக்கு முற்றிலும் புதியதாக உள்ளது. ஆனால் பழகப் பழக, மிகவும் எளிதாக தயக்கம் விலகி பயன்பாடு பயனுள்ளதாக மாறுகிறது.

5. ஒட்டிக் கொள்வீர்:

மாற்றம் எப்போதும் மனிதனுக்குச் சற்று பயத்தையும் தயக்கத்தினையும் தருகிறது. தொழில் நுட்பம் மிக எளியதாக இருந்தாலும், மாற்றம் எப்போதும் சற்று கடினமாகவே தெரிகிறது. ஆனால் எண்ணிப் பாருங்கள்! விண்டோஸ் அல்லது மேக் சிஸ்டம் இயக்கத்தினைத் தொடக்கத்திலிருந்து கற்று தெரிந்தா வந்தீர்கள்? அதே போலத் தான் லினக்ஸ் சிஸ்டம் பழக்கமும்.

இதனால் உங்களுக்குப் பயன்கள் அதிகம் என்றால், போகப் போக இதனைப் பயன்படுத்துவது பிடித்துப் போக, தொடர்ந்து பயன் படுத்தத் தொடங்கி விடுவீர்கள். அல்லது இரண்டையும் பயன்படுத்து வீர்கள்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes