3ஜி தரும் பயன்கள்

பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் முதல் நமக்கு 3ஜி சேவை பல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு உள்ளது.

தகவல் பரிமாற்றத்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப்படுவதே அதன் அடிப்படையான ஒரு செயல்பாடாகும். 3ஜி இதனைத் தருவதுடன், மிகத் தெளிவான ஒலி பரிமாற்றத்தையும் தருகிறது. மேலும் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் பரிமாற்றத்தை 3ஜி மூலம் மேற்கொள்ள முடியும்.

இந்தியாவில் அண்மைக் காலத்தில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமுதாய இணைய தள சேவைத் தளங்களால், டேட்டா பரிமாறப்படுவது அதிகரித்துள்ளது. அதே போல ப்ளிக்கர் மற்றும் யு–ட்யூப் போன்ற தளங்களால், வீடியோ, இமேஜ் தகவல்களும் பரிமாறப் பட்டு வருகின்றன.

இவற்றுக்கு இன்னொரு காரணம், டாட்டா டொகோமோவில் தொடங்கி பல தொலைதொடர்பு நிறுவனங்கள், மிகக் குறைவான கட்டணத்தில் டேட்டா பரிமாறிக் கொள்வதற்கு அளித்து வரும் திட்டங்களாகும்.

பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடங்கி வைத்த 3ஜி சேவையினை, இனி பல தனியார் நிறுவனங்கள் தர இருக்கின்றன. 3ஜி சேவையில் பலப் பல புதிய தொழில் நுட்ப மாற்றங்களையும் பயன்பாடுகளையும் காண இருக்கிறோம். ஏற்கனவே முதன்மையான பயன்பாடுகளை இந்த மலரில் குறிப்பிட்டு எழுதி உள்ளோம். இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்.

1. லைவ் டிவி – கூடவே வரும் செய்திகள்:

3ஜி மூலம் மொபைல் போனில், ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடப்படுவதை லைவ்வாக, எங்கு சென்றாலும் பார்த்துக் கொண்டே செல்லலாம். அதே போல, டிவி ஒன்றை நாடித்தான், செய்திகளைப் பெற வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பப் படுவதனை, மொபைல் மூலம் பெறலாம்.

2. இமெயில் மற்றும் பைல் பெறுதல்:

3ஜி மூலம் நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகளை மொபைல் போன் வழியாக, எந்த நேரத்திலும் பெற முடியும். அதே போல அனுப்பவும் முடியும். நமக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பைல்களையும் இதே போலப் பெற முடியும். நாம் தயாரித்து வைத்துள்ள ஆவணங்களில், எந்த நேரத்திலும் எடிட் செய்து மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

3. மொபைல் ஒரு முனையமாக:

மொபைல் போனை இனி ஒரு ஆன்லைன் டெர்மினல் போலப் பயன்படுத்த 3ஜி வழி தருகிறது. திடீரென நமக்குக் கிடைத்து வரும் இன்டர்நெட் இணைப்பு செயல்படாமல் போகும்போது, மொபைல் போனை நம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து, இணைய மோடம் போலப் பயன்படுத்தலாம். இதனால் எந்த நேரத்திலும் சூழ்நிலையிலும் நமக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும்.

4. வீடியோ ஸ்ட்ரீமிங்:

நாம் நண்பர்களுடனும், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோ பைல்களை, எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப, காண முடியும். வேகமான பரிமாற்றத்தை 3ஜி மூலம் பெற முடியும். இவற்றைப் பதிந்து கொள்வதற்கும் 3ஜி உதவிடும்.

5. இணைய வழி அழைப்புகள் – வி.ஓ.ஐ.பி. (Voice Over Internet Protocol (VOIP):

மிகப் பெரிய அளவில் பேண்ட்வித் எனப்படும் தகவல் பரிமாற்றத்திற்கான அலைவரிசையை, 3ஜி தருகிறது. ஏற்கனவே நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வரும் ஸ்கைப் போன்ற புரோகிராம்கள் மூலம், குறைந்த கட்டணத்தில் நம்மால் நம் நண்பர்களுடன், அவர்கள் எங்கிருந்தாலும் பேச முடியும். வீடியோ வழி உரையாடலையும் மேற்கொள்ள முடியும்.

6. அதிக வேகத்தில் கூடுதல் தகவல்:

பல வேளைகளில் நாம் பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்து, பின்னர் படிக்கிறோம். அதிகமாக ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள், அதில் உள்ள லிங்க்ஸ் தரும் இணைப்புகளை இதே போல்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஜி.பி.ஆர்.எஸ். வழங்கும் வேகம் மிக மிகக் குறைவாக உள்ளதால் இவ்வாறு செயல்படுகிறோம். 3ஜி மூலம் இந்தக் குறை நிவர்த்தி ஆகும். வேகமாக டேட்டா கிடைப்பதால், லிங்க் இணைக்கும் அந்த வேளையிலேயே பைல்களைக் காண முடியும்.

7. துல்லிய ஒலி அனுபவம்:

சிக்னல் கிடைக்கல, வாய்ஸ் விட்டு விட்டு வருது, பேசறது ஜாம் ஆகுது – போன்ற உரையாடல்களை நாம் 3ஜியில் சந்திக்க மாட்டோம். மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் ஒருவர் பேசுவதை இதன் மூலம் நாம் பெற முடியும்.

உங்கள் குழந்தையின் மழலையை, நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பக்கத்தில் இருந்து பேசுவது போலக் கேட்டு ரசிக்கலாம். மொத்தத்தில், இதுவரை தொழில் நுட்ப நீண்டநாள் கனவாக இருந்த 3ஜி சேவை, இப்போது கையில் வந்துவிட்டது. சிறிய வணிகர்கள் இதன் சேவையினை முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் வர்த்தகத்தினை மேம்படுத்தலாம்.

இன்னும் இன்டர்நெட் நுழையாத கிராமங்களில் உள்ள மக்கள், 3ஜி மூலம் அதனைப் பெறலாம். வலைமனைகளை இணையத்தில் உருவாக்கி செயல்பட்டு வருபவர்கள், இடைஇடையே இணைப்பு அறுந்து போகும் இன்டர்நெட்டை விட்டு, 3ஜி சேவை மூலம் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

பல துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு, 3ஜி ஒரு வரப்பிரசாதமாகக் கிடைத்துள்ளது. அனைவரும் இதனைப் பயன்படுத்தி நம்மையும் நாட்டையும் வளப்படுத்துவோம்.


2 comments :

பொன் மாலை பொழுது at November 15, 2010 at 8:09 PM said...

Thanks for sharing

dsfs at November 25, 2010 at 4:21 PM said...
This comment has been removed by the author.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes