ராவணன் விக்ரம் சிறப்பு பேட்டி

மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என விரும்பினேன், ராவணன் மூலம் அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது என்று சொல்லும் சீயான் விக்ரம் ராவணன் படத்திற்கு ரசிகர்கள் போடும் மார்க்கிற்காக காத்திருக்கிறார். 

அமிதாப் பச்சன் போல சினிமாத் துறையில் நீடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவிக்கும் விக்ரம் சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார். அவரது பேட்டி:

ராவணன் படம் பற்றி...?

நான் மணிரத்னத்தோட தீவிரமான ரசிகன். நம்ம அவர் முன்னாடி நின்னுட்டா போதும். நம்மை அவரே செதுக்கிடுவாரு. இந்த படத்தை பொறுத்தவரைக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகள்ல ரீலிஸ் ஆகப்போகுது. இந்தியில நான் அறிமுகமாவதுதான் ‌எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. அங்குள்ள மக்கள் என்னை ஏத்துக்குவாங்களான்னு மனதிற்குள் ஒரு பயம். இந்தியில டப்பிங்கூட நான்தான் பேசியிருக்கேன். ரொம்ப சிரமப்பட்டேன்.

படத்தில் உங்கள் ரோல் என்ன?

வீரா என்ற கேரக்டரில் தமிழில் நான் நடிச்சிருக்கேன். தேவ் என்ற கேரக்டரில் ப்ருத்வி பண்ணிருக்காரு. இந்தியில் தேவ் ரோல் நான் பண்ணிருக்கேன். ஐஸ்வர்யா ராய், ராகிணி என்ற ரோல்ல 2 மொழிகள்லயும் பண்ணிருக்காங்க. இந்த வீரா கேரக்டர் பத்தி சொல்லணும்னா குழந்தைத்தனமா இருப்பேன். ‌கொஞ்சம் கரடு முரடானவன். திடீர்னு 10 தலையாக்கூட வருவேன். மக்களை ரொம்பவும் நேசிக்கிறவனாகவும் இருப்பேன். தேவ் ரோல் பொறுத்தவரைக்கும் போலீஸ் அதிகாரி. குற்றவாளிகளை கண்டுபிடிக்கணும்னா மக்கள்கிட்ட செய்திகளை வாக்குறதுக்காக நெருங்கி பழகுவேன். மனைவி, மகன் என குடும்ப பாசத்தோடு இருக்குறவன். ராகிணி ரோல் பற்றக சொல்லணும்னா... அவங்களுக்கு இசை பிடிக்கும், வாழ்க்கையை எப்படி ஜாலியா அனுபவிக்கணும்னு நினைக்குறவங்க.

ராவணன் கதை என்ன?

ஒரு போலீஸ் அதிகாரி, அழுக்கா கரடு முரடா ஒருத்தன், அப்பாவியா குழந்தைத்தனமா ஒரு பொண்ணு... இந்த மூணு பேரையும் காட்டுக்குள்ள புடிச்சிப் போட்டா கடைசியில என்ன ஆகிறது என்பதுதான் கதை. 2 பேருக்குள்ள என்ன நடக்குது? யாரு நல்லவங்க? யாரு கெட்டவங்க? என்பதை வித்தியாசமா சொல்றதுதான் ராவணன் படத்தின் மொத்த கதையும்.

அபிஷேக் பற்றி சொல்லுங்க?

நான் அவரை பார்த்து மிரண்டு போனேன்னு சொல்லலாம். சேது, பிதாமகன், அந்நியன் இப்படி எல்லாம் கலந்த ரோல்தான் வீரா ரோல். இந்த கதாபாத்திரத்தை எப்படி மெருகேற்றுறதுக்கு நான் எடுத்துக்கிட்ட சிரத்தையை விட அபிஷேக் எடுத்துக்கிட்டத பாராட்டணும். எனக்கும், அவருக்கும் போட்டி கிடையாது. என்னோட நெருங்கிய நண்பர் அபிஷேக்.

ராவணன் படத்தோட லொகேஷன்?

கிட்டத்தட்ட 90 சதவீதம் காட்டுக்குள்ள நடக்குற கதைதான் ராவணா. சாலக்குடி, கேரளாவை சுத்தி இருக்கிற சில இடங்கள் இதுவரைக்கும் பார்க்க முடியாத லொகேஷன். அங்க ஹோட்டல், கேரவன் கிடையாது. கார்ல போயிட்டு, ஜீப்ல போய் அங்கே இருந்து 30 நிமிடம் நடந்து போனா ஒரு அருவி வரும். அந்த அருவியை தாண்டினா ஒரு குகை இருக்கும். இப்படி நிறைய கஷ்டப்பட்டிருக்‌கோம். மழை, வெயில்னு பார்க்காம நடந்திருக்கோம். மணி சார் எப்படித்தான் இந்த மாதிரி லொகேஷனை கண்டுபிடிச்சாரோ தெரியல.

ராவணன் சூட்டிங் ஸ்பாட் அனுபவம்?

யாருக்குமே தான் ஒரு ஸ்டார் என்ற எண்ணம் இல்ல. ஒரு பேம்லி ட்ரிப் ஆக இருந்தது. ஒரு அழகான அனுபவம். நிறைய விஷயங்கள்ல தெரிஞ்சுக்க முடிந்தது.

படத்தில் ரொம்ப ரிஸ்க் எடுத்தீர்களா?

மொத்தம் 3 பாலத்துல சூட்டிங் நடத்தியிருக்கிறோம். தரையில இருந்து 3 ஆயிரம் அடி உயரம். எந்த ஒரு பாதுகாப்பும் இல்ல. கரணம் தப்பினால் மரணம்ங்கிறத அங்கேதான் நான் உணர்ந்தேன். ஒரு கயிறு பிடிச்சுக்கணும். கீழே பார்த்தா தலை சுத்திடும். சண்டைக்காட்சி எடுக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டோம். மாஸ்டர் ஒவ்வொரு ஷாட்டுக்கும் சாமி கும்பிடுவாரு. ஐஸ்வர்யா ராயைக்கூட இந்த விஷயத்துல ஹீரோன்னுதான் சொல்லணும்.

படங்களுக்கு இடையே நிறைய இடைவெளி இருக்கிறதே?

எனக்கு வருஷங்கள் முக்கியமில்லை. இவ்வளவு படம் பண்ணனும்ங்கிறதும் முக்கியமில்லை. அந்நியன் படத்துல நடிக்கிறபோது என் நண்பர்கள் ரெண்டு பேர் கேட்டாங்க. ரொம்ப இந்த படத்திற்கு டைம் எடுத்துக்குறேன்னு சொன்னாங்க. ஆனா படம் வெளிவந்தபிறகு எனக்கு நல்ல நேம் கொடுத்தது. கந்தசாமி, பீமா தயாரி்பபுல கொஞ்சம் பிரச்னை. அதனால லேட் ஆச்சு. மத்தபடி எனக்கு ஒரு பெரிய இடைவெளியெல்லாம் கிடையாது. என் ரசிகர்கள் எப்பவும் என் ரசிகர்களா இருப்பாங்க.

நிறையபேரு இந்திக்கு போக ஆசைப்படுறாங்களே? பணத்துக்காகவா? புகழுக்காகவா?

ஜஸ்ட் முயற்சி பண்றோம். யாருமே அங்க போகணும்னு அவசியம் இல்ல. இந்தியில நடிக்கும்போது ஒரு தேசிய அங்கீகாரம் கிடைக்குது. இப்ப நம்ம ஒரு ஏர்போ்டல நின்னா இப்ப என்னை 30 பேருக்கு தெரியும்னா... இந்தியில நடிச்சதால 300 பேருக்கு தெரியும். தமிழை விட்டுட்டு இந்திக்கு போறேன்னா... அப்புறம் எல்லாத்தையும் விட்டுட வேண்டியதுதான். ஆனா எனக்கு தமிழ் படங்களில் நடிக்கிறதுதான் முக்கியம்.

உங்களது அடுத்த படங்கள்?

செல்வராகவன் படம் ஒரு ஷெட்யூல்டு முடிஞ்சிருக்கு. பூபதி பாண்டியன் படம் முடிக்கப் போறேன். அதற்கு பிறகு வசந்தபாலன், அமீர், ஹரி இவங்கக்கிட்ட பேசிட்டு இருக்கேன்.

ரசிகர்களுக்கு ‌சொல்ல விரும்புவது?

இதுவரை நான் பண்ண படங்களை விட இந்த படத்திற்கு நிறைய கஷ்டப்பட்டிருக்கேன். ராவணன் படம் எல்லா வயதினருக்கும் பிடிக்கும். பார்க்கணும்னு தோணும். படத்தை பார்த்தவங்க சிலர் இத இந்தியாவுலதான் படமாக்குனீங்களான்னு கேட்குறாங்க. அவ்ளோ சந்தோஷமா இருக்கு. எல்லாரும் படம் பாருங்க. என்ஜாய் பண்ணுங்க.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes