காந்தி கொலை வழக்கு 4

காந்திஜியின் பிரார்த்தனை கூட்டத்துக்கு செல்லும்போது தங்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்று கோட்சேயும், மற்றவர்களும் நினைத்தனர். கோட்சே, மராத்திய பாணியில் உடை அணிந்து கொண்டான். ஆப்தே வேட்டி சட்டையிலும், மதன்லால் மேற்கத்திய உடையிலும் இருந்தனர். கார்கரே நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு பிராமணர் போலத்தோன்றினான். ஒவ்வொருவருக்கும் புதிய புனை பெயர்கள் சூட்டப்பட்டதுடன், அவரவர்களுக்கு உரிய ஆயுதங்களும் தரப்பட்டன. கோட்சே, மதன்லால், கார்கரே ஆகியோர் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளில் ("டோங்கா") தனித்தனியே புறப்பட்டனர். ஆப்தேயும், மற்றவர்களும் ஒரு காரில் சென்றனர். ஏற்கனவே திட்டமிட்டபடி, கோபால் கோட்சேயும், சாமியார் பாட்ஜேயும் பிர்லா மாளிகையின் பின்புறமுள்ள குடியிருப்பு பகுதியின் வழியாக உள்ளே நுழைய வேண்டும். அவர்களை அங்கு கொண்டு போய் விடுவதற்காக ஆப்தேயும், கார்கரேயும் உடன் சென்றனர்.

வழியில் பிர்லா மாளிகையின் ஊழியர் (கார் கழுவும் சிப்பந்தி) சோதிராம் என்பவர் அவர்களை வழிமறித்து, "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டார். "காந்தி பிரார்த்தனை கூட்டத்தில் பேசும்போது பின்பக்கம் இருந்து அவரை போட்டோ எடுக்கப் போகிறோம்" என்று கார்கரே பதில் அளித்தான். "எங்கே கேமராவை காட்டுங்கள்" என்று சோதிராம் கேட்க, உடனே ஆப்தே, வெடிப்பொருள்கள் அடங்கிய பெட்டியை காண்பித்து, "இதற்குள்தான் கேமரா இருக்கிறது" என்றான்.

சோதிராம் தயங்கவே, கார்கரே இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து சோதிராமின் கையில் அழுத்தினான். உடனே அவர்களுக்கு வழிவிட்டான் சோதிராம். சாமியார் பாட்ஜே, கோபால் கோட்சே இருவரையும் ஜன்னல் அருகே விட்டு விட்டு, ஆப்தே திரும்ப முயன்றபோது, "கொஞ்சம் நில்லுங்கள்" என்று கூறினான், பாட்ஜே. அவன் குரலில் கோபம் தொனித்தது. "நான் உங்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தேன். அவற்றை இயக்கிக் காட்டவே வந்தேன். மகாத்மா காந்தியை கொலை செய்யும் திட்டத்தில் நான் சேரமாட்டேன்" என்று கூறிய பாட்ஜே,"நான் மத வெறியன் அல்ல.

ஆயுதங்களை விற்பவன் என்றாலும் என் கையால் யாரையும் சாகடிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு தரையில் உட்கார்ந்து விட்டான். பாட்ஜே இப்படி கடைசி நேரத்தில் பின்வாங்குவான் என்று ஆப்தே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனவே அப்படியே திகைத்துப்போய் நின்றான். "காந்தியை கொலை செய்யப்போவதாக முன்பே நீங்கள் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இந்த தேசத்துரோக காரியத்திற்கு நான் உடந்தையாக இருந்திருக்க மாட்டேன்" என்றான் பாட்ஜே.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இனி அவனுடன் விவாதித்து பயனில்லை என்று ஆப்தே உணர்ந்தான். "அப்படியானால் நீ இங்கே இருக்க வேண்டாம். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு போய்விடு" என்று கூறினான். "காந்தியை சுடும் பொறுப்பை நீ நிறைவேற்று" என்று கோபால் கோட்சேயிடம் கூறிவிட்டு ஆப்தே அங்கிருந்து வெளியே விரைந்தான்.

கோபால் கோட்சே சுவரில் இருந்த ஜன்னலை நோக்கினான். அது மிக உயரத்தில் இருந்தது. தரையில் நின்று கொண்டு அதன் வழியாக யாராலும் சுடமுடியாது. ஏணி அல்லது நாற்காலி இருந்தால்தான் அதில் ஏறி காந்தியை நோக்கி சுடமுடியும். என்ன செய்வது என்று புரியாமல் கோபால் திகைத்தான். உண்ணாவிரதம் இருந்ததால் மிகவும் பலவீனமாக இருந்த காந்திஜியை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து பிரார்த்தனை நடைபெறும் இடத்திற்கு தூக்கி வந்தார்கள்.

கூட்டம் தொடங்கியது. "காந்தி மீது பலமுனை தாக்குதல் நடத்த இதுவே நல்ல தருணம்" என்று நினைத்தான் கோட்சே. தன் கன்னத்தை சொறிந்து ஆப்தேக்கு சமிக்ஞை செய்தான். உடனே ஆப்தே தன் கையை உயர்த்தி குண்டை வெடிக்கச் செய்ய மதன்லாலுக்கு சிக்னல் கொடுத்தான். பிர்லா மாளிகையின் பின்புறச் சுவர் அருகே நின்று கொண்டிருந்த மதன்லால், தன் வசம் இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். குண்டு வெடித்தது. பிர்லா மாளிகையின் பின்புறச்சுவரின் ஒரு பகுதி தகர்ந்தது. இந்த சத்தத்தினால் கூட்டத்தில் குழப்பம் ஏற்படவே கார்கரே நெரிசலில் சிக்கி பின்னுக்குத் தள்ளப்பட்டான். அந்த இடத்தில் இருந்து காந்தி மீது அவன் கை குண்டை வீசமுடியாத நிலை ஏற்பட்டது.

ஜன்னல் வழியாக காந்தியின் தலையை நோக்கி சுடவேண்டிய கோபால் கோட்சேயும், ஜன்னல் உயரமாக இருந்த காரணத்தால் சுட முடியவில்லை. காந்திக்கும், அவரைச்சுற்றி இருந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதே தெரியாது. பிர்லா மாளிகைக்கு அருகே ராணுவத்தினர் எதையாவது வெடித்து ஒத்திகை பார்ப்பது வழக்கம். வெடிச்சத்தத்தைக் கேட்ட காந்தியும், மற்றவர்களும் அதை வழக்கமான ராணுவ ஒத்திகை என்றே நினைத்தனர். பிரார்த்தனைக் கூட்டம் தடங்கல் இன்றி நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே பிர்லா மாளிகைப் பூங்காவுக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்த சுலோசனாதேவி என்ற பெண் வெடிகுண்டை மதன்லால் வெடித்ததையும், பிறகு அவன் தப்பி ஓட முயற்சிப்பதையும் பார்த்துவிட்டாள்.

"பிடியுங்கள்! பிடியுங்கள்!" என்று கூச்சலிட்டாள். அந்தப் பகுதியில் இருந்த ஒரு ராணுவ அதிகாரியும், சில போலீசாரும், மற்றும் சிலரும் மதன்லாலை சுற்றி வளைத்துப் பிடித்துக்கொண்டனர். அவன் திமிறிக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது, சரியான அடி_உதை விழுந்தது. அதனால் அவன் சட்டை கிழிந்தது. அவனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பிர்லா மாளிகைக்குள் இழுத்துச்சென்றனர். மதன்லால் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதை தூரத்தில் இருந்து கோட்சேயும், ஆப்தேயும் மற்றவர்களும் பார்த்தனர்.

இனி தப்பி ஓடுவதுதான் புத்தசாலித்தனம் என்ற முடிவுக்கு வந்து அந்த இடத்தில் இருந்து நழுவத் தொடங்கினர். கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே ஆகியோர் காரில் தப்பிச்சென்றனர். வழியில் தன் தம்பியிடம் கோட்சே சொன்னான்: "மதன்லால் மூலம் போலீசார் உன்னைப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. போலீசாரிடம் சிக்காமல் நீ எப்படியாவது புனாவுக்குச் சென்றுவிடு. அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது. மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதே. காந்தியை நான் கவனித்துக்கொள்கிறேன். துணிந்தவனுக்கு தோல்வி என்பதே இல்லை." இப்படிக் கூறிய கோட்சே வழியில் காரை நிறுத்தி கோபாலை இறக்கிவிட்டான்.

பிறகு கோட்சேயும், ஆப்தேயும் மரினா ஓட்டலுக்குச் சென்றனர். அறையை உடனடியாக காலி செய்துவிட்டு டெல்லி ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி அருகில் உள்ள துக்ளக் ரோடு போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அந்த நிலையத்தின் சப்_இன்ஸ்பெக்டர் தசோந்தாசிங் உடனே பிர்லா மாளிகைக்கு விரைந்தார். மதன்லாலை அவர் பரிசோதித்தார். மதன்லால் தன் உடலில் இன்னொரு கையெறி குண்டை மறைத்து வைத்திருந்தான்.

அதை போலீஸ் அதிகாரி கைப்பற்றி செயல் இழக்கச் செய்தார். மதன்லாலை "விசாரிக்க வேண்டிய விதத்தில்" விசாரித்தால், உண்மையைக் கக்கிவிடுவான் என்று போலீசார் கருதினர். அதன்படி போலீஸ் காவலில் வைத்து விசாரித்தார்கள். சித்ரவதைக்குள்ளான மதன்லால் உண்மையைக் கக்கினான். போலீசாரிடம் அவன் கூறியதாவது:-

"நான் மட்டும்தான் சொன்னபடி செய்தேன். மற்றவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். எனக்கு துரோகம் செய்த அவர்களைப் பிடிக்க நான் ஒத்துழைக்கிறேன்.

என்னுடன் வந்தவர்கள் மொத்தம் 6 பேர். அவர்கள் ஓட்டல் மரினாவிலும், இந்துமகா சபை அலுவலகத்திலும் இருப்பார்கள். " இவ்வாறு மதன்லால் கூறினான். மதன்லாலுடன் ஓட்டல் மரினாவுக்கு போலீசார் விரைந்தனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்படியும் மதன்லால் தங்களைக் காட்டிக்கொடுத்து விடுவான் என்று எதிர்பார்த்த கோட்சேயும், ஆப்தேயும் சுமார் மூன்று மணி நேரத்துக்கு முன்பே அறையை காலி செய்து விட்டுப் போய்விட்டது தெரிந்தது.

எஸ்.தேஷ்பாண்டே, எம்.தேஷ் பாண்டே என்ற பெயர்களில் கோட்சேயும், ஆப்தேயும் ஓட்டலில் ரூம் எடுத்திருந்தது விசாரணையில் தெரிந்தது. அவர்கள் தங்கி இருந்த அறையை சோதனையிட்டார்கள். கோட்சே "என்.வி.ஜி" என்று குறியிடப்பட்ட மூன்று உடைகளை சலவைக்குப் போட்டிருந்தான். அதற்கான ரசீது அந்த அறையில் சிக்கியது. இந்துமகா சபை பொதுச்செயலாளரின் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கடிதம் ஒன்றும் போலீசுக்குக் கிடைத்தது. அதில் காந்திக்கு எதிரான வாசகங்கள் இருந்தன.

ஓட்டல் அறையை காலி செய்த கோட்சேயும், ஆப்தேயும் டெல்லியில் இருந்து கான்பூருக்கு ரெயிலில் செல்ல முடிவு செய்தனர். கோட்சேக்கு முதல் வகுப்பு டிக்கெட்டும், ஆப்தேக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டும் வாங்கப்பட்டன. அவர்கள் இருவரும் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சென்றபோது அதிர்ச்சி தரும் காட்சியைக் கண்டார்கள்.

மதன்லாலை போலீசார் இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அவன் தலை கறுப்புத்துணியால் மூடப்பட்டு இருந்தது. கண்களால் பார்ப்பதற்காக இரண்டு துவாரங்கள் மட்டும் இருந்தன. "நன்றாகப் பார்! உன்னுடன் வந்த கொலையாளிகள் இங்கு இருக்கிறார்களா?" என்று மதன்லாலிடம் போலீசார் கேட்பது கோட்சேக்கும், ஆப்தேக்கும் கேட்டது. இருவரும் போலீசார் கண்களில் படாமல் ரெயிலில் ஏறினார்கள். ரெயில் புறப்படும் வரை அவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. மறுநாள் கான்பூர் போய்ச்சேர்ந்தார்கள். அடுத்த நாள் அங்கிருந்து ரெயிலில் புறப்பட்டு 23_ந்தேதி மாலை பம்பாய் போய்ச்சேர்ந்தார்கள்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes